×

ராமருக்கு உதவிய சம்பாதி!

உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் காப்பவர் திருமால். அனைத்தும் ஆளும் பெருமாளுக்கும் சில சந்தர்ப்பங்களில் உதவி அவசியமான ஒன்றாக அமைந்துள்ளது. அந்த நேரத்தில் இவர் ஒரு ஆபத்தில் சிக்கி இருக்கும் போது பறவையினங்கள், விலங்கினங்கள் இவருக்கு பல சந்தர்ப்பங்களில் உதவி செய்துள்ளன. மேலும் அவை அனைத்தும் திருமாலால் பாராட்டப்பட்டு அவரின் மனதில் ஒரு இடத்தினை பிடித்துள்ளன. திருமாலின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்குபவர் கருட பகவான்.

இவர் நித்ய சூரிகளில் இரண்டாவது இடத்தை வகிப்பவர். ‘அனந்த, கருட, விஸ்வக்‌ஸேன, பராங்குச, பரகால, யாமுன, யதிவர…’ என்ற ஸ்லோகத்தின் மூலம் இதை அறியலாம். திருமாலின் கருடசேவைக் காட்சியை பெரியாழ்வார் போற்றி பாடியுள்ளார். கருடசேவையில், கருடபகவான் நமக்கு ஆசாரியனாக விளங்குவதாக ஆழ்வார், ஆசார்யர்களின் ஏகோபித்த கருத்து. கருட பகவான் தன் திருத்தோள்களில் திருமாலை ஏந்தி நமக்கெல்லாம் ‘‘இவன்தான் ரட்சகன்’’ என்று காட்டிக் கொடுக்கின்றான்.

ராமாயணத்திலும் யுத்த காண்டத்தில் நாகாஸ்திரம் ஏவப்பட்டபோது கருடபகவான் தோன்றி ராமனுக்கு காட்சிதர வானரங்கள் அனைத்தும் மயக்கம் தெளிந்து மீண்டும் போர் புரிய ஆரம்பித்தன. அதற்கு முன்னதாக வனவாசத்தில் ராமபிரான் வனத்தில் கண்ட மானை (மாயமான்), சீதையின் விருப்பத்துக்காகப் பிடித்துவரத் துரத்திச் சென்ற போது, ராவணன் சீதாபிராட்டியை கபடமாக கவர்ந்து சென்றான். அப்போது ஜடாயு என்ற கழுகரசன் ராவணனிடமிருந்து சீதாபிராட்டியை மீட்பதற்காகப் போராடினான். ராவணன் ஜடாயுவின் சிறகுகளை வெட்டியெறிய, ஜடாயு நிலைகுலைந்து குற்றுயிறும் குலைஉயிருமாய் தரையில் விழுந்தார்.

சீதையைத் தேடி ராமன் மற்றும் லஷ்மணன் வந்தபோது அவர்களிடம் ராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற விவரத்தைக் கூறி, உயிரிழந்தார் ஜடாயு. மனம் நெகிழ்ந்த ராமபிரான், ஜடாயுக்குரிய ஈமக் கிரியைகளைச் செய்து வைகுண்டத்தில் அவருக்கு வாழ்வளித்தார். இச்சம்பவமே காஞ்சியருகில் உள்ள திருப்புட்குழி மற்றும் கும்பகோணம் அருகிலுள்ள புள்ளபூதங்குடி இரு திவ்யதேசங்களுக்கும் தலபுராணமாக அமைந்திருக்கிறது.

அதே போன்று ராமபிரான் சுக்ரீவனுடன் நட்பு கொண்டு சீதையை மீட்க, வானர படைகளை தெற்கு நோக்கி அனுப்பினார். பல இடங்களில் சுற்றித் திரிந்தும், விந்திய மலைச்சாரல் பக்கம்வரை வந்தும், வானரங்களால் சீதையின் இருப்பிடத்தை அறியமுடியவில்லை. இப்படியே திரும்பிச் சென்றால் சுக்ரீவன் மற்றும் ராம, லட்சுமணரின் கோபத்திற்கு ஆளாவோமே என்று நினைத்து அனுமன், ஜாம்பவான், அங்கதன் முதலானோர் அங்கேயே சிறிது காலம் தங்கியிருக்க முடிவெடுத்தனர். அச்சமயம், ராமபிரான் அயோத்தியிலிருந்து புறப்பட்டு சுக்ரீவனைச் சந்தித்து நடந்த சம்பவங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.

அங்கிருந்த குகையில் வசித்து வந்த சம்பாதி இவற்றைக் கேட்டு, தனது தம்பி ஜடாயுவன் இறப்பைப் பற்றி தெரிந்துகொண்டான். பிறகு மெதுவாக பறந்து ராமபிரானிடம் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டான். பிறகு ஜடாயுவுக்குச் செய்ய வேண்டிய தர்ப்பணம் முதலான கர்மாக்களைச் செய்தான். அனுமன் முதலானவர்களின் ஏக்கத்தை புரிந்து கொண்டு தனது கூர்மையான பார்வையால் சீதாபிராட்டி ராவணனால் அபகரிக்கப்பட்டிருப்பதைக் கண்டான். ‘இலங்கையில் தேவி சிறைப்பட்டிருக்கிறாள். ஆதலால் ராமனிடம், இலங்கைக்கு சென்றால் சீதையைக் காணலாம் என்று விவரித்தான். இதைத் தொடர்ந்து அனுமன், கடலைக் கடந்து இலங்கையை அடைந்து அங்கு சீதையைக் கண்டான்.

செய்யாறு அருகில், கொடநகரில், ‘ஸ்ரீவிஜய கோதண்டராமர்’ ஆலயம், பாஞ்சராத்ர ஆகம அடிப்படையில் சம்பாதி வம்சத்தினைச் சேர்ந்த சம்பாதி கந்தாடை நரசிம்மாச்சாரியார் சுவாமிகளால் சம்பாதி குளக்கரையில் இவ்வாலயம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 350 ஆண்டுகள் புராதனமானது. கோயிலில் உள்ள சம்பாதிக் குளக்கரையில் நான்கு கிணறுகள் அமைந்துள்ளன. நித்ய பூஜைகளும் ராம நவமி வைபவங்களும் விசேஷமாக இங்கு கொண்டாடப் படுகின்றன. குளக்கரையின் மேற்கில் ‘வீர ஆஞ்சநேயர்’ திருக்கோயில் அமைந்துள்ளது. லட்சுமணர், சீதா, அனுமன் சமேதராய் ராமர் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.

ஜடாயுவின் சகோதரன் சம்பாதியின் உருவம் விஜய கோதண்டராமருடன் கருவறையில் இருப்பது வேறெங்கும் காணவியலாத அதிசயம். ராமர் பாதுகையினை வணங்கிய வண்ணம் உள்ள அனுமன், ‘பாதுகா சேவக அனுமன்’ என வணங்கப்படுகிறார். ராமபிரானின் வனவாசத்தின்போது அவருக்கு உதவி புரிந்ததாக அணில், பட்சிகள், விலங்கினங்கள், வானரங்கள் மற்றும் மலைகள், சமுத்திரங்கள் போன்றவையும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

800 மைல்களுக்கு அப்பால் உள்ள சீதையின் இருப்பிடத்தையும் இலங்கை மாநகரையும் தன் கூரிய பார்வையினால் இடம் கண்டு வானரர்களுக்குக் கூறி உதவினான் சம்பாதி. இழந்த சிறகுகளை மீண்டும் பொலிவுறப் பெற்றுத் திகழ்வான் என்று நிசாரார் என்கிற துறவி முன்பொருமுறை அருள் வழங்கினார். அவ்வாறே வானரர்களுக்குச் சீதையின் இருப்பிடத்தைச் சொன்ன மாத்திரத்திலேயே பலன் ஏற்பட்டது.

இந்த நிகழ்ச்சியினை நினைவுகூரும் வகையில் இங்கே சம்பாதி, ராமரின் அருகே நின்றிருக்கிறார். குளக்கரையின் மேற்கில் ஆஞ்சநேயர் திகழ்கிறார். உற்சவ மூர்த்திகளாக லஷ்மி நரஸிம்மர், லஷ்மி ஹயக்ரீவர், லஷ்மி வராஹர் மற்றும் நம்மாழ்வார், ராமானுஜர், ஸ்வாமி தேசிகன் ஆகியோர் திகழ்கிறார்கள். காஞ்சி க்ஷேத்திரத்தில் அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டநாதப்பெருமாள் சந்நதியின் அபிமானத் திருத்தலம் இது.

தொகுப்பு: மகி

The post ராமருக்கு உதவிய சம்பாதி! appeared first on Dinakaran.

Tags : Tirumal ,Perumal ,
× RELATED அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்