×

கேரளாவில் பண்ருட்டி பெண் சாவு கணவர் கொன்றதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்

பண்ருட்டி, மார்ச் 18: பண்ருட்டி அருகே பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மங்கவார்த்தாள் மகன் அழகுவேல் (30). இவர் கேரளாவில் உள்ள ஒரு இரும்பு கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் விழுப்புரம் அருகே கெடிலம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி (27) என்பருக்கும் திருமணம் ஆகி  இரண்டரை வருடம் ஆகிறது. திருமணம் நடந்த நாள் முதல் இருவரும் கேரளாவில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென தமிழ்ச்செல்வி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கேரளா காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்ச்செல்வி உடலை மணமகன் குடும்பத்தினர் பெற்றுக் கொண்டு தனது சொந்த ஊரான பணப்பாக்கம் கிராமத்தில் தகனம் செய்தனர்.

இதை அறிந்த பெண் வீட்டார் இறந்த தமிழ்ச்செல்வி உடலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும். வரதட்சணை கேட்டு அழகுவேல் தாக்கியதால் தான் தமிழ்ச்செல்வி இறந்துள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெண் வீட்டாரின் குடும்பத்தினர் நேற்று புதுப்பேட்டை காவல் நிலையம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலின் பேரில், அங்கு வந்த புதுப்பேட்டை காவல் ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் புதுப்பேட்டை அரசூர் மெயின் ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Kerala ,Panrutti ,
× RELATED சந்தன கட்டை கடத்திய கேரளாவை சேர்ந்த 6 பேர் கைது..!!