×
Saravana Stores

நிபா வைரஸ் எதிரொலி தமிழக எல்லையான வாளையார் உள்பட 13 சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு

*கேரளா பயணத்தை தவிர்க்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கோவை : கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பை அடுத்து தமிழக-கேரளா எல்லையான வாளையார் உள்ளிட்ட 13 சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கேரளா மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக 14 வயது சிறுவன் உயிரிழந்தார். மேலும், 60 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இருவருக்கு நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக-கேரளா எல்லைகளில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள பொது சுகாதாரத்துறை சார்பில் மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை-கேரளா எல்லையில் வாளையார், வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்பகவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், வடக்காடு உள்ளிட்ட 13 சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறையினர் சிறப்பு தற்காலிக முகாம் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த முகாமில் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள், செவிலியர்கள் ஆகியோர் கேரளாவில் இருந்து கோவைக்கு கார், பேருந்து போன்றவற்றில் வரும் நபர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா? என பரிசோதனை வருகின்றனர்.

வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மேலும், நிபா வைரஸ் அறிகுறிகள் இருக்கிறதா? என அவர்களிடம் கேட்கின்றனர். இந்த பரிசோதனையில் காய்ச்சல் பாதிப்புகள் இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே அவர்களை கோவைக்குள் நுழைய அனுமதிக்கின்றனர். மேலும், நிபா வைரஸ் தாக்கம் குறையும் வரை தமிழக மக்கள் கேரளாவுக்கு தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து மாவட்ட சுகாதார அலுவலர் அருணா கூறியதாவது: கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதை அடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள 13 சோதனைச்சாவடிகளிலும் சுகாதார குழு நியமிக்கப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்கள் கிருமிநாசினி மூலம் தூய்மை செய்யப்படுகிறது. பேருந்துகள், வாகனங்களில் வரும் நபர்களுக்கு காய்ச்சல் பாதிப்புகள் இருக்கிறதா? என கண்டறியப்பட்டு வருகிறது. நிபா வைரஸ் தொற்று ஏற்பட்ட நபரின் உமிழ்நீர், சிறுநீர், சளி மூலமாக மற்றவர்களுக்கு பரவுகிறது.

அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் நிபா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சைக்கு வரும் நபர்களின் விவரங்களை உடனே அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் தலைமையில் உள்ளாட்சித்துறை அலுவலர்களுக்கு கூட்டம் நடத்தப்பட்டது. அனைத்து மருத்துவமனை அலுவலர்களுக்கும் காணொலி மூலமாக கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் நிபா வைரஸ் தொடர்பாக தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை யாருக்கும் பாதிப்பு கண்டறியப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

நிபா வைரஸ் எப்படி பரவும்?

நிபா வைரஸ் வவ்வால்கள் மூலம் பரவுகிறது. வவ்வால்கள் சாப்பிட்ட பழங்கள், சிறுநீர், உமிழ்நீர், அவற்றின் கழிவுகள் ஆகியவை மூலம் மனிதர்களுக்கு தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது. மேலும், வவ்வால்கள் மூலம் குதிரை, பன்றி, எலி, பூனைகளுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டு மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது. காய்ச்சல், இருமல், தலைவலி, வயிற்றுப்போக்கு, மூச்சு திணறல், மனநிலை பிரச்னை ஆகியவை அறிகுறியாகும்.

The post நிபா வைரஸ் எதிரொலி தமிழக எல்லையான வாளையார் உள்பட 13 சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Valaiyar ,Tamil Nadu ,Kerala Coimbatore ,Kerala ,Tamil Nadu- ,Kerala border ,Malappuram, Kerala ,Tamil Nadu border ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள்...