×

பிளஸ்2 அரசு பொதுத்தேர்வு இன்று துவக்கம்

நாமக்கல், மார்ச் 13: நாமக்கல் மாவட்டத்தில் 85 மையங்களில், பிளஸ்2 அரசு பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 19,877 மாணவ, மாணவியர் தேர்வு  எழுதுகிறார்கள். தமிழகத்தில் பிளஸ்2 அரசு பொதுத்தேர்வுகள், இன்று(13ம் தேதி) துவங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் நடப்பாண்டு பிளஸ்2 அரசு பொதுத்தேர்வினை, 198 பள்ளிகளைச் சேர்ந்த 10,000 மாணவர்கள், 9,877 மாணவியர் என மொத்தம் 19,877 பேர் எழுதுகிறார்கள். இதற்காக மாவட்டம் முழுவதும் 85 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு மையங்கள் தனித்தேர்வர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வு பணியில் 90 முதன்மை கண்காணிப்பாளர்கள், 100 துறை அலுவலர்கள், 1377 அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும்படை உறுப்பினர்கள் 200 பேர் தேர்வு பணியில் ஈடுபடுகிறார்கள்.

இவர்களை தவிர, வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு தலைமை ஆசிரியர்கள், விடைத்தாள்களை எடுத்துச்செல்ல முதுகலை ஆசிரியர்கள் அளவில் வினாத்தாள் வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று(13ம் தேதி) தமிழ் தேர்வு நடைபெறுகிறது. காலை அனைத்து தேர்வு மையங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. தேர்வு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு தனி அடையாள அட்டை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். தேர்வினை நேர்மையாக நடத்த, தேர்வு பணியில் ஈடுபடும் முதன்மை கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது.

அனைத்து தேர்வு மையங்களிலும், மாணவர்களின் முகப்பு பக்கங்களுடன் கூடிய விடைத்தாள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக தேர்வு நடைபெறும் மையங்கள் சுத்தம் செய்யப்பட்டது. டெஸ்க்கில் மாணவ, மாணவியரின் தேர்வு எண்கள் எழுதப்பட்டு, அந்த அறை பூட்டி வைக்கப்பட்டுள்ளது. ஒரே மையத்தில் தான், பிளஸ்1, பிளஸ்2 ஆகிய இரண்டு தேர்வுகளும் வெவ்வேறு நாட்களில் நடக்கிறது. இதனால், தேர்வு மையங்களில் வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களுக்கும், இன்று(13ம் தேதி) காலை 8.30 மணிக்குள் வினாத்தாள் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 9 இடங்களில், வினாத்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து அருகாமையில் உள்ள தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது. இதனிடையே, பிளஸ்1 அரசு பொதுத்தேர்வுகள் நாளை(14ம் தேதி) தமிழகம் முழுவதும் துவங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில், இந்த ஆண்டு 8,711 மாணவர்கள், 9,102 மாணவியர் என மொத்தம் 17,813 பேர் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வு மையங்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு பணிக்கு செல்லும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் யாரும் செல்போன் எடுத்து வர அனுமதியில்லை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED குடிசை வீடு தீயில் எரிந்து சாம்பல்