பள்ளிகொண்டா, மார்ச் 3: பள்ளிகொண்டா அருகே உள்ள மலைப்பகுதியில் மர்ம நபர்கள் வைத்த தீயில் கருகி மூலிகை மரங்கள் நாசமாகின. பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரியில் ஆரம்பிக்கும் மலைத்தொடரானது ஆம்பூர், வாணியம்பாடி என பரந்து விரிந்து ஏலகிரி மலை வரை பல கிலோ மீட்டர் தொலைவில் மலைகளாக காணப்படுகின்றது. அகரம்சேரியில் மலையடிவாரம் தோட்டக்கலைத்துறை சார்பில் மாவட்டத்திலேயே அதிக பரப்பளவில் புதியதாக பூங்கா அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
இந்த பூங்காவில் மலைப்பகுதியில் உள்ள மூலிகை செடிகள், காட்டு மர விதைகள் என ஏராளமான செழிப்புடன் உள்ளது. மேலும் இந்த மலை குன்றுகளிடையே அமையவுள்ள பூங்காவில் டிரக்கிங்கும் அமையவுள்ளது சிறப்பாகும். இந்நிலையில், இந்த பூங்கா அமையவுள்ள மலைத்தொடர் அருகேயுள்ள காளப்புதூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள மலைப்பகுதியில் நேற்றிரவு மர்ம நபர்கள் சிலர் மலைப்பகுதி நடுவில் தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.
இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்த நிலையில், அதிலிருந்து வெளியான புகை தேசிய நெடுஞ்சாலை முழுவதும் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
மேலும், மலை மீது அமைந்துள்ள வெங்கடேச பெருமாள் கோயில் மற்றும் ஆஞ்சநேயர் கோயில் வளாகம் முழுவதும் தீபற்றி எரிந்ததில் சாம்பல் குப்பைகளாக நிரம்பியது. இதனால், பூங்கா அமையவுள்ள மலை அருகே இருந்த மூலிகை செடி, கொடிகள் எல்லாம் தீயில் கருகி நாசமாகின. கோடை காலத்தில் விறகுகளை வெட்டி விற்பனை செய்வதற்கு ஏதுவாக இதுபோன்று இயற்கை வளங்களை அழிக்கும் செயலில் ஈடுபடும் மர்ம நபர்கள் மீது வனத்துறை தீவிரமாக கண்காணித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
