×

வேலூர் மாவட்டத்தில் 1.85 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி காட்பாடியில் கலெக்டர் தொடங்கி வைத்தார்

வேலூர், மார்ச் 2: வேலூர் மாவட்டத்தில் 1.85 லட்சம் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கொரோனா நெருக்கடிக்கு பிறகு கால்நடைகளுக்கு 2 கட்டங்களாக கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த ஆண்டு 3வது கட்டமாக நேற்று முதல் வரும் 21ம் தேதி வரை மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களுக்கு ஏற்ப கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த உத்தரவிடப்பட்டது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் காட்பாடி அடுத்த கீழ்மோட்டூர் பகுதியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. இதனை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்தார். மாநகராட்சி 1வது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா, வேலூர் மண்டல கால்நடை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன், கவுன்சிலர் விமலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் 41 மையங்களில் 1.85 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக தடுப்பூசி டோஸ்கள் தேவைக்கேற்ப இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 3ம் கட்டமாக தடுப்பூசி போடவேண்டும். வரும் 21ம்தேதி வரை அனைத்து கால்நடை மருத்துவமனைகள், கிளை மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் போடப்படும். விடுபட்ட கால்நடைகளுககு வரும் 22ம்தேதி தடுப்பூசி போடப்பட உள்ளது’ என்றனர்.

Tags : Vellore district ,
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி விளையாட்டு...