அணைக்கட்டு: அணைக்கட்டு அருகே விவசாயி வீட்டில் 30 சவரன் நகைகள், ₹1.10 லட்சம் ெராக்கத்தை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கவரிங் நகைகள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கிணற்றில் வீசிச்சென்றது தெரியவந்துள்ளது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன்(47), விவசாயி. கடந்த 24ம் தேதி இரவு இவரது வீட்டின் பின்பக்க கதை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அறையில் பீரோவில் வைத்திருந்த 30 சவரன் நகைகள், ₹1.10 லட்சம் ரொக்கம் மற்றும் பத்திரங்களை திருடிச்சென்றனர். இதேபோல், இவரது பக்கத்து வீட்டில் ₹1,000, வெள்ளிக்கொலுசு திருடிய மர்ம நபர்கள், மேலும் ஒரு வீட்டில் திருட முயற்சி செய்துள்ளனர். இது தொடர்பான புகாரின்பேரில் அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், திருட்டு சம்பவம் நடந்த வீடுகளில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிணற்றில் செயின்கள், பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் மிதப்பதாகவும், அவற்றை மீட்டு வைத்துள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர்.
அப்போது, அவை விவசாயி பாஸ்கரன் வீட்டில் திருடப்பட்ட கவரின் நகைகள், பத்திரங்கள், அடையாள அட்டைகள், மணிபர்ஸ்சுகள் ஆகியன என்பது தெரியவந்தது. மேலும், விசாரணையில் திருடப்பட்ட நகைகளை தரம் பிரித்து, அதில் தங்க நகைகள், பணத்தை மட்டும் எடுத்து கொண்டு மற்ற கவரிங் நகைகள், பத்திரங்கள், ஆவணங்களை கிணற்றில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கிணற்றில் இருந்து மீட்கப்பட்டதில் பாஸ்கரன் வீட்டில் காணாமல் போனவைகள் மீண்டும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கவரிங் நகைகள், ஆவணங்களை வெளியில் வீசினால் கைரேகை பதிவுகள் மூலம் மாட்டி கொள்வோம் என்பதால் அவற்றை கிணற்றில் வீசிவிட்டு தப்பி சென்றிருக்கலாம் என தெரிகிறது. இந்நிலையில், பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில் அணைக்கட்டு போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். அணைக்கட்டு அருகே விவசாயி வீட்டில் தங்க நகைகள், பணம் ஆகியவற்றை திருடிய மர்ம நபர்கள், கிணற்றில் வீசிச்சென்ற கவரிங் நகைகள், ஆவணங்கள்.
