×

குழந்தைகள், பெண்கள் வார்டு பயன்பாட்டிற்காக திருச்சி அரசு பொது மருத்துவமனையில் கூடுதல் ஆக்சிஜன் பிளாண்ட் அமைக்கும் பணி

திருச்சி, பிப்.26: திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் வார்டுக்கு மட்டுமே பயன்படுத்துவதற்காக 10 கேஎல் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் பிளாண்ட் அமைக்கும் பணியினை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் நேரு பார்வையிட்டார். திருச்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு பொது மருத்துவமனைக்கு தினமும் திருச்சி மட்டுமில்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் சாதாரண வார்டு, காய்ச்சல் வார்டு, தீவிர சிகிச்சை வார்டு, விபத்து மீட்பு சிகிச்சை வார்டு, தீப்புண் வார்டு, எலும்பு முறிவு சிகிச்சை வார்டு, கண் சிகிச்சை வார்டு உள்பட 30க்கும் மேற்பட்ட சிகிச்சை வார்டுகள் உள்ளது. அதுபோல் பெண்கள் குழந்தைகள் (பிரசவ) மருத்துவமனை பகுதி தனியாக உள்ளது.

திருச்சி அரசு பொது மருத்துமவனைக்கு புறநோயாளியாக தினமும் 6 ஆயிரம் பேர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அதுபோல் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,800 ஆகும். அரசு மருத்துவமனையில் மொத்தம் 1,600 படுக்கைகள் (பெட்) உள்ள நிலையில் கூடுதலாக 200 பேருக்கு படுக்கைகள் தயார் செய்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போவதால் அதற்குரிய சிறப்பு மருத்துவ ஏற்பாடுகளை டீன் நேரு, கண்காணிப்பாளர் அருண்ராஜ் மற்றும் மருத்துவர்கள் செய்து வருகின்றனர்.

இம்மருத்துவமனையில் உயிர் காக்கும் வகையில் அத்தியாவசிய தேவையான ஆக்சிஜன் தேவைக்காக 20 கேஎல் லிட்டர் (20 ஆயிரம்) கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளாண்ட் ஏற்படுத்தப்பட்டு அதன் பயன்பாடு நடந்து வருகிறது. இந்த ஆக்சிஜன் பிரிவில் இருந்து விபத்து மீட்பு சிகிச்சை வார்டு, பழைய கட்டடத்தில் உள்ள வார்டுகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது. தற்போது மேலும், கூடுதலாக பெண்கள் மற்றும் குழந்தைகள் சிகிச்சை மருத்துவமனை அருகே 10 கேஎல் லிட்டர் (10 ஆயிரம்) கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளாண்ட் அமைப்பதற்கான பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இப்பணிகளை மருத்துவமனை டீன் நேரு, கண்காணிப்பாளர் அருண்ராஜ் மற்றும் குழுவினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் நேரு கூறுகையில், ஏற்கனவே 20 கேஎல் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளாண்ட் செயல்பாட்டில் உள்ளது.

தற்போது புதிதாக 10 கேஎல் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளாண்ட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் சார்பில் அமைக்கப்படும் இந்த 10 கேஎல் கொள்ளளவு ஆக்சிஜன் பிளாண்ட் திரவநிலை ஆக்சிஜன் பிளாண்ட்டாக அமைக்கப்படும். இதன் பயன்பாடு குழந்தைகள் மற்றும் பெண்கள் மருத்துவமனைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். இதற்காக ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் பைப்லைன் மற்றும் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் அடிப்படை பணிகளுக்கு என மொத்தம் ரூ.17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 20 கேஎல் கொள்ளளவு ஆக்சிஜன் பிளாண்டில் இருந்து தினமும் நோயாளிகளுக்கு 1 முதல் 2 கேஎல் அளவு ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு டீன் நேரு தெரிவித்தார்.

Tags : Trichy ,Government General ,Hospital ,
× RELATED திருச்சி என்எஸ்பி சாலையில்...