×

வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தில் மகளிர் சுயஉதவி குழுவினர் 30% மானியத்தில் கடனுதவி பெறலாம்

விழுப்புரம், பிப். 25: விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் காணை, கோலியனூர், முகையூர், திருவெண்ணெய்நல்லூர், வல்லம் மற்றும் விக்கிரவாண்டி ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த 21 முதல் 45 வயதுவரை உள்ள சுயஉதவிக்குழு மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சுயதொழில் தொடங்க வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 30 சதவீத மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில் 10 சதவீத பயனாளிகள் பங்களிப்பு, 60 சதவீதம் வங்கி கடன், 30 சதவீதம் திட்ட மானியத்துடன் நுண், குறு, சிறு என்ற தொழில்களின் அடிப்படையில் தொழில்கடன் வழங்கப்பட உள்ளது. ரூ.5 லட்சம் மதிப்பிலான தொழில்திட்டம் குறு தொழிலாகவும், ரூ.15 லட்சத்திற்கு மேல் உள்ள தொழில்திட்டம் சிறு தொழிலாகவும் வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது. சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழிலுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தின் சிறப்பு சலுகையாக மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்தோர், ஆதரவற்ற பெண்கள் மற்றும் நலிவுற்றோர்கள் தொழில் தொடங்க திட்ட மதிப்பில் 5 சதவீதம் மட்டுமே பயனாளிகள் பங்களிப்பாக இருந்தால் போதும். மேலும் விவரங்களுக்கு திட்டம் செயல்படக்கூடிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைந்துள்ள வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலகத்தை நேரில் அணுகி திட்ட விவரங்களை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Help Groups ,
× RELATED ஓட்டலில் மனித கறி கேட்டு தகராறு சமையல் மாஸ்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு