×

மஞ்சள் மாநகரான ஈரோடு வளர்ச்சிக்கு பணியாற்றுவேன்

ஈரோடு:  மஞ்சள் மாநகரான ஈரோடு வளர்ச்சிக்கு பணியாற்றுவேன் என ஈரோடு பிரசாரத்தில் ஈவிகேஎஸ்  இளங்கோவன் உறுதியளித்தார். ஈரோடு  கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுதினம் (27ம் தேதி) நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளராக போட்டியிடும் ஈவிகேஎஸ்  இளங்கோவன், கிழக்கு தொகுதி  மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று காலை ஈரோடு வஉசி பூங்கா நடைபயிற்சி மைதானத்தில் நடைபயிற்சி செய்ய  வந்தவர்களிடம் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கை சின்னத்திற்கு வாக்கு  சேகரித்து பேசியதாவது:
தமிழக முதல்வர் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வழங்கி  நல்லதொரு ஆட்சியை நடத்தி வருகிறார்.

பெண்களுக்கு பேருந்துகளில் இலவசமாக  பயணம் செய்ய ஆணை பிறப்பித்துள்ளார். இதனால், பெண்கள் இன்றைக்கு சுதந்திரமாக  பேருந்துகளில் செல்ல முடிகிறது. படித்து முடித்து கல்லூரிகளுக்கு செல்லும்  இளம்பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை  அறிவித்துள்ளார். இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்தவம், அரசு பள்ளி  மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து  முதல்வர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.  முதல்வருக்கு ஊக்கத்தை தர அவரது  கரத்தினை வலுப்படுத்திட ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் கை சின்னத்தில்  வாக்களித்து, உங்கள் ஆதரவை அளிக்க வேண்டும். இங்கு அனைத்து மதத்தினரும்  சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகிறோம்.

ஆனால் நம்மை மதத்தின் பெயரால்,  சாதியின் பெயரால் பிரிக்க நினைப்பவர்கள் டெல்லியில் ஆட்சி செய்து  வருகின்றனர். நம்மை பிரிக்க நினைக்கும் சதி செய்கிற சக்திகளை முறியடிக்க  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள மதசார்பற்ற கூட்டணிக்கு நீங்கள்  ஆதரவு தர வேண்டும். மஞ்சள் மாநகரமான ஈரோடு வளர்ச்சிக்கு பணியாற்றுவேன்.  நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவு தமிழக முதல்வர், காங்கிரஸ் தலைவர்  ராகுல்காந்திக்கு அளிக்கும் ஆதரவாகும். என் மகன் திருமகன் ஈவெரா இந்த பகுதி  மக்களுக்கு நிறைய பணிகளை செய்துள்ளார். அவர் விட்டு சென்ற பணிகள் இன்னும்  ஏராளமாக இருக்கிறது. அதனை செய்வதற்கும், உங்கள் குறைகளை தீர்ப்பதற்கும்  எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து வாய்ப்பினை வழங்க வேண்டும். இவ்வாறு ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார். இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா, கவுன்சிலர் ஈபி ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Erode ,
× RELATED புகையிலை, மது விற்ற 3 பேர் கைது