×

சாலை வசதி கோரி பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டம் திருப்புவனத்தில் பரபரப்பு

திருப்புவனம், பிப்.24:  சாலை வசதி கோரி திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் 5வது வார்டு கவுன்சிலர் பாரத்ராஜா. தமாகாவை சேர்ந்தவர். இவரது வார்டில் தேரடி வீதி முதல் காவலர் குடியிருப்பு வரையிலான 450 மீட்டர்  தூரத்திற்கு உள்ள சாலை கடந்த 10 ஆண்டுகளாக சிதிலமடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையில் திருமண மண்டபம், கோயில், அரசு சார்நிலை கருவூலம், பத்திரப்பதிவு அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளிட்டவை உள்ளன.

இந்த சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் தமாகா தலைவரும், நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான ஜி.கே.வாசன், தனது நிதியில் இருந்து சாலை பணிகளுக்காக ரூ.40 லட்சம் வழங்கியுள்ளார். நிதி ஒதுக்கியும் இன்று வரை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைப்பணிகள் மேற்கொள்ள இருப்பதாக பேரூராட்சி தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் கவுன்சிலர் பாரத்ராஜா பேரூராட்சி அலுவலகத்திற்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். சாலை சீரமைக்கும் பணிகளை உடனடியாக துவக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ் மற்றும் அதிகாரிகள் வந்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து தனது போராட்டததை பாரத்ராஜா வாபஸ் பெற்றுக் கொண்டார்.

Tags : Tiruppuvana ,
× RELATED ரம்ஜான் பண்டிகை எதிரொலி: சிவகங்கை...