ஈரோடு, பிப். 24: தந்தை பெரியார், அண்ணா நினைவு இல்லத்தை பார்வையிடுவதற்காக வெளியூர்களை சேர்ந்த திமுக, அதிமுக தொண்டர்கள் தினமும் குவிந்து வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரத்திற்கு உள்ளூர் கட்சி நிர்வாகிகள் மட்டுமல்லாது வெளிமாவட்டங்களை சேர்ந்த திமுக, அதிமுக, நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் வந்து உள்ளூர் கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரசாரம் நிறைவடைய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் களம் அனல் பறக்கின்றது. வெளியூர்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் 25ம் தேதி மாலை 5 மணியுடன் வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், அனல் பறக்கும் பிரசாரத்தின் நடுவில் ஈரோட்டில் உள்ள தந்தை பெரியார், அண்ணா நினைவு இல்லம், தந்தை பெரியார் நகரமன்ற தலைவராக இருந்தபோது கட்டப்பட்ட கோட்டை வடிவிலான குடிநீர் தொட்டி உள்ளிட்டவைகளை தொண்டர்கள் ஆச்சரித்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
தந்தை பெரியார், அண்ணா நினைவு இல்லத்திற்கு வரும் திமுக மற்றும் அதிமுகவினர் பெரியாரின் கருத்துக்கள், குடியரசு நாளிதழ் அலுவலகம், தந்தை பெரியார் கடைசி காலகட்டத்தில் பயன்படுத்திய பொருட்கள், அரசியல் தலைவர்களுடன் பெரியார், அண்ணா ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உள்ளிட்டவைகளை தொண்டர்கள் பார்வையிடுகின்றனர். வழக்கமான நாட்களில் பெரியார் நினைவு இல்லத்திற்கு சராசரியாக 50 பேர் வரை வந்து செல்லும் நிலையில் கிழக்கு தொகுதி தேர்தல் பிரசாரம் தொடங்கியதில் இருந்து தினமும் 300 பேருக்கு மேல் வந்து செல்கின்றனர். மேலும் பெரியார் அண்ணா நினைவு இல்லத்திற்கு முன்பாக நின்று செல்பி எடுத்துக்கொள்கின்றனர். இதே போல தந்தை பெரியார் ஈரோடு நகரமன்ற தலைவராக 1917ம் ஆண்டு முதல் 1919ம் பதவி வகித்த போதுதான் தமிழகத்திலேயே முதன்முறையாக மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இதற்காக ஈரோடு வஉசி பூங்காவில் கோட்டை வடிவிலான குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டி இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கின்றது. இந்த குடிநீர் தொட்டியையும் கட்சி தொண்டர்கள் பார்வையிட்டு போட்டோக்களை எடுத்து வருகின்றனர்.
