செய்யூர், பிப். 22: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்தில் உள்ள சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நேற்று நடந்தது. இதில், சித்தாமூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன் மற்றும் கவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 16 கவுன்சிலர்களும் கலந்துகொண்டு தங்கள் ஊராட்சிகளில் உள்ள குறைகளை ஒன்றியக்குழு தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முன் வைத்து விவாதம் செய்தனர். அதனை தொடர்ந்து அனைத்து ஊராட்சிகளிலும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது, ஊராட்சிகளில் உள்ள பழுதடைந்த கட்டிடங்களை சீரமைப்பது, ஆக்கிரமிப்புகளில் உள்ள குடியிருப்புகள் அகற்றப்பட்ட நிலையில், குடியிருப்பு வாசிகளுக்கு வீடுகள் கட்டி கொடுப்பது, ஊராட்சிகளில் சாலை, குடிநீர், தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருதல் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
