ஈரோடு, ஏப். 12: ஈரோடு அசோகபுரம் கரிகாலன் வீதி ஜியாவுதீன் மனைவி இதாயத்துன்னிஷா (24). இவர் ஈரோடு எஸ்பி அலுவலகத்துக்கு புகார் மனு அளிக்க வந்திருந்தார். திடீரென எஸ்பி அலுவலகம் முன் தரையில் குழந்தையுடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரை போலீசார் சமாதானம் செய்து அவரது மனுவை பெற்றனர். விசாரணை நடத்தினர். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: எனக்கு 5 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. மூன்றரை வயதில் மகன் உள்ளார். தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளேன். எனக்கும், என் கணவருக்கும் அடிக்கடி சண்டை நடந்தது. என் கணவரின் தாய் இலாஹிஜான், என் கணவரின் தாய் மாமன் மக்புல் அகமது ஆகியோர் என்னை என் கணவரிடம் இருந்து பிரிப்பதற்காக அடித்து, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகின்றனர்.
இது தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு, 2021ம் ஆண்டு ஈரோடு வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்குகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் எனது தாய் வீட்டில் நான் இருந்தபோது, என் கணவரின் தாய் இலாஹிஜான் என்னையும், என் தாயையும் தாக்கினார். இது குறித்தும் போலீசில் புகார் அளித்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இவர்கள் மீது சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.