திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலுக்கு காலங்காலமாக கழுகுகள் வந்து சென்றதன் நினைவாக மலை மீதுள்ள பாறையில் 2 கழுகு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை தினமும் பக்தர்கள் வந்து வணங்கி செல்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பட்சி தீர்த்தம், வேதமலை, கழுக்குன்றம் என பல்வேறு பெயர்களை கொண்ட திருக்கழுக்குன்றத்தில் பல நூற்றாண்டுகளாக 2 கழுகுகள் தினமும் வந்து மலை மீதுள்ள வேதகிரீஸ்வரரை வணங்கி வழிபட்டு அதன் பின் அங்கு வைக்கப்படும் உணவுகளை உண்டு செல்வது வழக்கமாக இருந்தது.
இதனை காண வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் தினமும் வந்து, கழுகுகளை கண்டு வணங்கி, மகிழ்ந்து செல்வார்கள். வேதகிரீஸ்வரர் மலைக்கு 2 கழுகுகள் வந்து செல்வதால்தான் (திரு + கழுகு + குன்றம்) திருக்கழுக்குன்றம் என இந்த ஊருக்கு பெயர் உண்டானது. இதனால், காலம்காலமாக கழுகுகள் வந்து சென்றதன் நினைவாக ஏற்கனவே கழுகுகள் வந்து உணவருந்திய பாறைக்கு கழுகு பாறை என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக அந்த கழுகுகள் வருவதில்லை. இதையடுத்து, அந்த இடத்தில் வேதகிரீஸ்வரர் கோயில் நிர்வாக அனுமதியுடன் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த அன்புசெழியன் என்பவர், கழுகுகள் உணவருந்துவது போன்ற 2 சிலைகளை அங்கு அமைத்துள்ளார். அதனை பக்தர்கள், பொதுமக்கள் அதனை கண்டு வணங்கியும், மகிழ்ந்து செல்கின்றனர்.
