×

கம்மாபுரம் ஒன்றிய சேர்மன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் மனு வாபஸ்

விருத்தாசலம், பிப்.17: கம்மாபுரம் ஒன்றிய சேர்மன், துணை சேர்மன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரக்கோரி கொடுத்த மனுவை 2 கவுன்சிலர்கள் வாபஸ் பெற்றனர். விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 20 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் அதிமுகவைச் சேர்ந்த மேனகா விஜயகுமார் சேர்மனாகவும், முனுசாமி துணை சேர்மனாகவும் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் ஒன்றிய கவுன்சிலர்கள் 15 பேர் சேர்ந்து விருத்தாசலம் கோட்டாட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில் எவ்வித தகவலும் தெரிவிக்காமல் 15வது மானிய குழு தொகையிலிருந்து 18 கவுன்சிலர்களுக்கு சொற்ப தொகையை மட்டும் ஒதுக்கி விட்டு மீதமுள்ள தொகையை ரகசியமாக ஒப்பந்தம் விட்டதாகவும், தன்னிச்சையாக செயல்படும் தலைவர், துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, நேற்று ஒன்றிய குழு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கவுன்சிலர்கள் சங்கீதா தனசேகர் (தேமுதிக), மகாலட்சுமி சிவக்குமார் (அதிமுக) ஆகியோர் விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமாரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் நாங்கள் கடந்த முறை கொடுத்த மனுவில் மேற்கண்ட குற்றச்சாட்டை குறிப்பிட்டு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என மனு கொடுத்திருந்தோம். அந்த குற்றச்சாட்டுக்கும், சேர்மன் மற்றும் துணைச் சேர்மன் ஆகியோருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என தற்போது தெரிய வந்துள்ளது. அதனால் நாங்கள் கொடுத்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம். மேலும் நாங்கள் கொடுத்த மனுவை திரும்ப பெற்றுக் கொள்கிறோம் என கூறப்பட்டிருந்தது. அப்போது ஒன்றிய சேர்மன் மேனகா விஜயகுமார், துணை சேர்மன் முனுசாமி, மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். இந்நிலையில் நேற்று நடைபெறுவதாக இருந்த கம்மாபுரம் ஒன்றிய குழு கூட்டம் நிர்வாக நலன் கருதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கம்மாபுரம் ஒன்றிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Kammapuram ,EU ,Sermon ,
× RELATED ஜெய்பீம் பட உண்மை சம்பவத்தில்...