×

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலுக்கு புனிதநீர் தீர்த்தம் எடுத்து செல்லும் நிகழ்ச்சி

விருத்தாசலம், பிப். 3: விருத்தாசலத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பிரதோஷம், உற்சவம், மாசிமக திருவிழா, புத்தாண்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பண்டிகை நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் இருப்பது போல் இக்கோயிலில் உள்ள சிவனை வழிப்பட்டால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தினமும் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

மேலும் இக்கோயிலில் 5 கோபுரங்கள், 5 நந்திகள், 5 பிரகாரங்கள், 5 தீர்த்தங்கள், 5 தேர்கள், என அனைத்தும் ஐந்தால் ஆன சிறப்பம்சத்தை கொண்ட கோயிலாக அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2002ம் ஆண்டு கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கடந்த இருபது ஆண்டுகள் கழித்து வரும் 6ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 2017ம் ஆண்டிலிருந்து திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. திருப்பணிக் கமிட்டி குழு தலைவர் ஜெயின் ஜுவல்லரி அகர்சந்த் தலைமையிலான குழுவினர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் முன்னிலையில் திருப்பணிகள் தீவிரமாக நடந்து முடிந்த நிலையில் தற்போது கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கடந்த 27ம் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இன்று முதல் கால பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி வரும் 6ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக யாகசாலை மண்டபம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. 81 ஹோம குண்டங்கள், 9 நவ அக்னி ஹோம குண்டங்கள், 2 பஞ்சா அக்னி ஹோம குண்டங்கள், 35 ஏகா அக்னி குண்டங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு யாகசாலைக்கான பூர்வாங்க பூஜைகள் நடந்து வருகிறது.
கும்பாபிஷேக புனித நீர் கொண்டு வருவதற்காக நேற்று காலை கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் முடிவடைந்தவுடன் சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க கங்கை யமுனா, நதியிலிருந்தும் விருத்தாசலம் மணிமுக்தாற்றின் நதியில் இருந்தும் புனிதநீர் தீர்த்தம் கொண்டு வந்தனர். அப்போது கரையில் அலங்கரிக்கப்பட்ட யானை மீது தீர்த்ததத்தை கொண்டு சென்று, குதிரைகள் புடை சூழ, வாண வேடிக்கையுடன், விருதாசலம் கடைவீதி, அய்யனார் கோயில் வீதி, நான்கு கோட்டை வீதிகள் என 8 மாட வீதிகள் வழியாக சென்று கோயிலுக்குள்ளே எடுத்துச் சென்று தீர்த்தம் இறக்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து பிரம்மச்சாரி பூஜை, சுகாசினி பூஜை, தம்பதி பூஜை, வடுக பூஜை ஆகியவை நடந்தது. தொடர்ந்து பூர்வாங்க பூஜைகளும், பிரதான ஆச்சாரியர்கள் ரக்ஷா பந்தனம் கட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன், கும்பாபிஷேக கமிட்டி குழு தலைவர் ஜெயின் ஜுவல்லரி அகர்சந்த், ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, கோட்டாட்சியர் ராம்குமார், எஸ்பி சக்தி கணேசன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இன்று காலை பரிவார கலசங்களுக்கு கலாகர்ஷணம், பஞ்சமூர்த்தி பூஜைகள் ஆகியவை நடந்து மாலையில் முதல் கால பூஜையுடன் யாகசாலா பிரவேச பூஜைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 6ம் தேதி, 6ம் கால பூஜையுடன் யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து கடம் புறப்பாடு நடைபெற்று சரியாக 8.15 மணிக்கு கோபுரங்கள், விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், 8.30 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டி குழு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Tags : Virudhachalam Viruthakriswarar temple ,
× RELATED விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்