கடலூர் மஞ்சக்குப்பத்தில் குடிநீர் குழாய் உடைந்து வீணாக வெளியேறும் தண்ணீர்

கடலூர், ஜன. 11:   கடலூர் மஞ்சக்குப்பத்தில் குடிநீர் குழாய் உடைந்து வீணாக தண்ணீர் வெளியேறி வருவதால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.  கடலூர் மஞ்சக்குப்பம் சண்முகம் பிள்ளை தெருவில் மாநகராட்சி சார்பில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி, கழிவுநீர் வடிகால் வாய்க்கால்களுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி நின்று குளம் போல் காட்சியளிக்கிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த 3 நாட்களாக அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வராததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள ஒரு சில வீடுகளில் வரும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து அந்த பகுதி மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: