×

சேலத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு 40 கிலோ வெள்ளியுடன் தலைமறைவானவர் கைது

சேலம், ஜன.9:சேலத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு 40 கிலோ வெள்ளியுடன் தலைமறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர். சேலம் குகை மூங்கப்பாடி தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன் (46), வெள்ளி வியாபாரி. இவரிடம் குகை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பிரபு (33) என்பவர் வெள்ளி கொலுசு செய்து தருவதாக கூறி கடந்த 2019ம் ஆண்டு 40 கிலோ வெள்ளியை வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கூறியதை போல வெள்ளி கொலுசுகளை செய்து கொடுக்கவில்லை. தொடர்ந்து தேவேந்திரன் கேட்டுவந்த நிலையில் பிரபுவும், தாய் ஜெயந்தியும் தலைமறைவாகினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த தேவேந்திரன் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபுவையும், தாய் ஜெயந்தியையும் தேடி வந்தனர். ஆனால் இருவரும் எங்கு இருக்கிறார்கள்? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக தேவேந்திரன் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 3 மாதத்தில் வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்நிலையில் சென்னையில் இருந்து சேலத்தில் இருக்கும் அவரது தந்தையை பார்க்க வந்த பிரபுவை போலீசார் நேற்று கைது செய்தனர்.  

சென்னையில் தங்கியிருந்து கால் டாக்கி ஓட்டிவந்ததாக போலீசாரிடம் கூறினார். ஆனால் அவரது தாயார் இருக்கும் இடத்தை தெரிவிக்கவில்லை. இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர் வாங்கிய வெள்ளி கட்டியை வேறு எங்கேயாவது முதலீடு செய்து தொழில் செய்து வருகிறாரா? என்பது குறித்து விசாரிக்கும் வகையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவரது தாயார் ஜெயந்தியையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Salel ,
× RELATED ஆறுமுகசாமி கமிஷன் முன் ஆஜராகி...