×

மாவட்டத்தில் 238 பதற்றமான வாக்குச்சாவடிகள் நுண்பார்வையாளர்கள் நியமனம்

சேலம், மார்ச் 31:சேலம் மாவட்டத்தில் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ள 238 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய, 288 தேர்தல் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு 4,280 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், 238 வாக்குச்சாவடிகள், பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு பணிபுரிய 288 தேர்தல் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான பணி ஒதுக்கீடு, மாவட்ட கலெக்டர் ராமன் தலைமையில், அனைத்து தொகுதி பார்வையாளர்கள் முன்னிலையில் கணினி மூலம் குலுக்கல் முறையில் நேற்று நடந்தது. அதன்படி கெங்கவல்லி தொகுதிக்கு 13 ேபரும், ஆத்தூருக்கு 16 பேரும், ஏற்காட்டிற்கு 34 பேரும், ஓமலூருக்கு 22 பேரும், மேட்டூர் தொகுதிக்கு 41 பேரும், இடைப்பாடிக்கு 17 பேரும், தேர்தல் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், சங்ககிரி தொகுதிக்கு 10 பேரும், சேலம் மேற்கு தொகுதிக்கு 52 பேரும், சேலம் வடக்கு தொகுதிக்கு 23 பேரும், சேலம் தெற்கு தொகுதிக்கு 23 பேரும், வீரபாண்டி தொகுதிக்கு 37 பேரும் தேர்தல் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags :
× RELATED மது, கஞ்சா போதையில் வாலிபர்கள் ரகளை