×

பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்

ஆத்தூர், மார்ச் 29: ஆத்தூர் வடசென்னிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர தேர்திருவிழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆத்தூர் அருகே வடசென்னிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. 26ம் தேதி வள்ளி, தெய்வானைவுடன் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று பங்குனி உத்திரத்தையொட்டி, மூலவருக்கு பால், இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, வள்ளி, தெய்வானையுடன் மூலவரை அலங்கரிக்கப்பட்ட தேரில் ஏற்றி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

விழாவில், வடசென்னிமலையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி, ஆத்தூர் டிஎஸ்பி இமானுவேல் ஞானசேகரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இளம்பிள்ளை: இளம்பிள்ளையில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி கஞ்சமலை சித்தர் கோவிலில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர். கோயிலில் பாலசுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்திலும், உற்சவர் கடல் கன்னிகளுடன் சிப்பிக்குள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags : Balasubramaniam Swamy Temple Therottam ,
× RELATED மது, கஞ்சா போதையில் வாலிபர்கள் ரகளை