×

ஆத்தூரில் பரபரப்பு திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு தரையில் புரண்டு எஸ்ஐ தர்ணா

கெங்கவல்லி, மார்ச் 20: ஆத்தூரில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து, போக்குவரத்து எஸ்ஐ தரையில் புரண்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இறுதிநாளான நேற்று, பல்வேறு கட்சியினர் மனு தாக்கல் செய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட, திமுக சார்பில் சின்னதுரை வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக திமுக நிர்வாகிகள் ஆத்தூர் தாலுகா அலுவலகம் முன் திரண்டிருந்தனர். அப்போது, ஆத்தூர் பஸ் ஸ்டாண்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து எஸ்ஐ ரவி, அவ்வழியே சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி, இவ்வழியாக செல்லக்கூடாது என கூறி தடுப்பு கம்பியை வைத்தார். அதனை கட்சியினர் தட்டிக்கேட்ட போது, திமுகவினர் யாரும் அந்த வழியாக செல்லக் கூடாது எஸ்ஐ ரவி கூறியதால் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது, ‘நான் இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளேன். என்னை தாக்குகிறார்கள்’ என்று கூறிய எஸ்ஐ ரவி, திடீரென சாலையில் படுத்து உருண்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், திமுக வேட்பாளர் சின்னதுரை மனு தாக்கல் செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த அவர், நடந்த சம்பவத்திற்காக திமுக தலைவர் ஸ்டாலின் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோஷம் எழுப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது, அங்கிருந்த பொதுமக்களில் சிலர், எஸ்.ஐ.ரவி குடிபோதையில் இதுபோல் நடந்து கொள்வதாக புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, அவரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். இதுகுறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : SI Dharna ,DMK ,Attur ,
× RELATED நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் ஆத்தூர்...