அரியலூர், ஜூலை 6: அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே இருசக்கர வாகனம் மீது காட்டுப் பன்றி மோதியதில் காயமடைந்த தனியார் உரக்கடை ஊழியர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். திருமானூர் அடுத்த கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் கனகராஜ்(50). கீழப்பழுவூரிலுள்ள ஒரு தனியார் உரக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்த இவர், வழக்கம் போல், நேற்று காலை கடையை திறப்பதற்காக கீழப்பழுவூருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
கீழப்பழுவூர் கொள்ளிடம் கூட்டு குடிநீர் நீரேற்று நிலையத்தை கடந்த போது, திடீரென சாலையின் குறுக்கே வந்த காட்டுப் பன்றி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த கனகராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
