×

தா.பழூர் வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் தக்கை பூண்டு விதைகள் விநியோகம்

 

தா.பழூர், ஜூலை 2: அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டாரம் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் தக்கைப்பூண்டு விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தக்கைப்பூண்டு ஒரு சிறந்த பசுந்தாள் உரப்பயிர் ஆகும். இந்த பயிரை சாகுபடி செய்து பூக்கும் முன்பு (அதாவது விதைத்த 45 ஆவது நாளில்) அதே நிலத்தில் மடக்கி உழவு செய்வதன் மூலம் மண்ணில் இயற்கையான கரிமச்சத்து மற்றும் தழைச்சத்து அதிகரிக்கிறது. இதனால் உரச்செலவு குறைவதுடன் மண்ணின் வளம் மேம்பட்டு, பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் கணிசமாக அதிகரிக்க உதவுகிறது.

மேலும், தக்கைப்பூண்டு பயிர் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தி, மண்ணில் ஹெக்டருக்கு 60 கிலோ முதல் 100 கிலோ வரை தழைச்சத்தை நிறுத்தும் தன்மை உள்ளது. இதனால் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறிப்பாக யூரியா பயன்பாட்டை கணிசமாக குறைக்கிறது. இதன் மூலம் உற்பத்தி செலவு குறைவதோடு ஹெக்டருக்கு 15 டன்கள் முதல் 18 டன்கள் வரை மக்கும் குப்பை சத்து கிடைக்கிறது.

இதனால் மண்ணில் நீர்பிடிப்புத்திறன் மற்றும் நுண்ணுயிரிகளின் செயல்பாடு அதிகரிப்பதால் நிலத்தின் நீண்டகால வளமும் பாதுகாக்கப்படுகிறது. எனவே தா.பழூர் வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஆதார் அட்டை, சிட்டா உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் தா.பழூர் வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி மானிய விலையில் தக்கைப்பூண்டு விதைகளை பெற்று பயன்பெறலாம் என தா.பழூர் வட்டார உதவி இயக்குநர் தமிழ்மணி கூறியுள்ளார்.

Tags : Tha.Pazhur ,Agriculture Department ,Ariyalur district ,
× RELATED உரக்கடை ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு: போலீசார் விசாரணை