×

பொருத்தமான காலணி சிறந்த வலி நிவாரணி!

நன்றி குங்குமம் தோழி

இன்றைய நடைமுறை வாழ்க்கையில் நடுத்தர வயதினரை பாதிக்கும் முக்கிய உடல் உபாதைகளுள் ஒன்று காலோடு தொடர்புடைய மூட்டு வலி, முழங்கால் வலி, குதிகால் வலி. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. நரம்புத் தளர்ச்சி, ஊட்டச்சத்துக் குறைவு, டயா படிஸ், உடல் பருமன், ஹார்மோன் மாற்றங்கள், மாறுபட்ட கால் அமைப்பு, தசை சோர்வு எனக் காரணங்கள் நீண்டு கொண்டே போகின்றன. நீண்ட நேரம் நின்ற படி வேலை செய்பவர்களுக்கும் இந்த தொந்தரவு அதிகம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்தப் பிரச்னை ஆண், பெண் என எந்தவித பாகுபாடில்லாமல் சமமாக பாதிக்கிறது. ஃபேஷன் என்ற பெயரிலும் தரமற்ற சரியான அளவில்லாத காலணிகளாலும் இந்தப் பிரச்னை அதிகம் பெருகி வருவதாகவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக கால் வலி ஏற்பட்டால், உடனடியாக மருந்தகத்தை தேடி ஓடுவதுதான் வழக்கமாக உள்ளது. அங்குள்ள வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிட்டதும் வலியிலிருந்து விடுபட்டதாக உணர்கிறார்கள். அதனால் வலி வரும் போது எல்லாம் அதையே தொடர்கின்றனர். இவை தற்கால தீர்வு மட்டுமே. அதே சமயம் வலி நிவாரணி மாத்திரைகளால் வரும் ஆபத்தையும் அவர்கள் உணர்வதில்லை. ‘வலிக்கான சரியான காரணத்தை அறியாமல் தாங்களாக மாத்திரைகள் எடுத்துக் கொள்வது நல்லதல்ல. சாதாரண வலி என்று கவனிக்காமல் விட்டால் அறுவை சிகிச்சை வரை பிரச்னை செல்லக்கூடும்’ என்று எச்சரிக்கின்றனர் ‘ஹேப்பி வாக்’ நிறுவனத்தினர். கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் வாடிக்கையாளர்களின் கால் வலி பிரச்னைகளை கண்டறிந்து, அதற்கேற்ற தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தி சரியாக கண்டறிந்து அவர்களுக்கு ஏற்ற காலணிகளை தயாரித்து வழங்கி வருகின்றனர் இந்நிறுவனத்தின் உரிமையாளரான பிரியங்கா மற்றும் குணசேகர் தம்பதியினர்.

‘‘எனக்கு சொந்த ஊர் ராஜபாளையம். நான் ஆர்ட்டிகல்ச்சர் படிச்சிருக்கேன். இரண்டு வருடம் கார்ப்பரேட் துறையில் வேலை செய்தேன். திருமணத்திற்குப் பிறகு கோயம்புத்தூர்ல செட்டில் ஆனோம். கணவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ளார். கணவர் ரெடிமேட் ஃபுட் வேர் கடை நடத்தி வந்தார். என் அப்பா நூல் மில்லில் வேலை பார்த்தார். பெரும்பாலும் எட்டு மணி நேரம் நின்றபடி வேலை செய்ய வேண்டும். அதனால் அவருக்கு 35 வயதிலேயே கால் வலி வந்துவிட்டது. ஒரு காலக்கட்டத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகும் அப்பாவிற்கு வலி குறையவே இல்லை. அப்பா வலியால் அவதிப்படுவதை பார்த்த என் கணவர் ‘ஆர்த்தோ காலணிகள் சந்தையில் கிடைக்கின்றன. அதை அப்பாவிற்கு வாங்கி தரலாம்’ என்று சொன்னார். அதன் பிறகு கால் வலிக்கு ஏற்ற காலணியை அவருக்கு வாங்கி தந்தோம். அப்பா வலி குறைந்ததாக கூறினார். அவரைத் தொடர்ந்து இதே போல் குடும்பத்தில் அவதிப்பட்டோருக்கு, உறவினர் பலருக்கும் இந்த வகை காலணிகளைத் தேடி வாங்கித் தந்தோம். பலரும் வலியிலிருந்து விடுபட்டதாக சொன்னார்கள். ஆனாலும், அதன் தரம் என்பது குறைவானதாகவே இருந்தது. ஃபுட் வேர் கடையை நடத்தி வந்த கணவர் நாமே சொந்தமாக இந்த வகை காலணிகளை தயாரித்தால் பலருக்கும் உதவியாக இருக்குமே என்று சொன்னார். என் அப்பாவின் அவஸ்தையை பக்கத்தில் இருந்து பார்த்ததால் நானும் ஒப்புக்கொண்டேன்’’ என இந்தத் தொழில் நிறுவனம் தொடங்கியதைப் பற்றி கூறினார் பிரியங்கா.

எங்களிடம் வருபவர்களில் குடும்பத்தலைவிகள்தான் அதிகம். அவர்களின் பிரச்னை ‘குதிகால் வலி.’ இதனால் குழந்தைகள் மற்றும் குடும்பத்தைக் கவனிக்க முடியவில்லை என்று கூறுவார்கள். இதற்கான தீர்வினை கொடுத்த போது, சந்தோஷமாக அனைத்து வேலையும் சாதாரணமாக செய்ய முடிகிறது!

‘‘பொதுவாக கால் வலிக்கு மாத்திரை, மேல் பூச்சு மருந்து என்றே பலரும் போகிறார்கள். காலணிகள் மற்றும் சில உடற்பயிற்சிகள் மூலமே இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்று பலருக்கு தெரிவதில்லை. எங்களுக்கு அப்பாவைப் பார்த்துதான் புரிந்தது. இந்த வலிக்கு ஆரம்ப காலக்கட்டத்திலேயே பார்த்து சரி செய்ய வேண்டும். அப்படி செய்தால் அறுவை சிகிச்சைகளை தடுக்க முடியும். மக்களிடத்தில் இதைப் பற்றிய விழிப்புணர்வுகளும் வழிகாட்டுதல்களும் இல்லை. அதைத்தான் நாங்கள் செய்ய முடிவெடுத்தோம். ஒரு வருடம் கால் வலிகள் தொடர்பாக பல ஆய்வுகளை செய்தோம். பல மருத்துவர்களையும் சந்தித்துப் பேசினோம். எல்லோரும் கண்டிப்பாக வீட்டுக்குள்ளேயும் காலணிகளை அணிய வேண்டும்’’ என்றவரை தொடர்ந்தார் குணசேகர்.

‘‘சொந்தமாக காலணிகளை தயாரிக்க முடிவு எடுத்தப் பின் சென்னையில் உள்ள மத்திய காலணிகள் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் ஆகிய இரண்டிலும் நான் பயிற்சி பெற்றேன். காலணி தொடர்பான அனைத்து தொழிற்நுட்பத்தையும் கற்றேன். மேலும், கெய்ட் அனாலிசிஸும் படித்தேன். அதாவது, ஒவ்வொருத்தருக்கும் காலின் அமைப்பு மாறுபடும். அதனால் அவர்களின் நடையும் வித்தியாசப்படும்.வாடிக்கையாளரின் உடல், கால் அமைப்பு மற்றும் அவர்களின் நடை ஆகியவற்றின் அடிப்படையில் காலணிகளை தயாரித்து அவர்களின் நடைப்பழக்கத்தை மாற்றலாம் என்றெல்லாம் தனியாக கோர்ஸ் முடித்தேன். பல மருத்துவர்களை சந்தித்து பேசும் போது பேஷண்டுகளுக்கு பரிந்துரைக்கும் காலணிகளை சரியாக தயாரித்து தரும் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் குறைவு என்று கூறினர். நிறைய ஆய்வுகளுக்குப் பிறகு மருத்துவர்களின் அறிவுரையின் பேரிலும், 2022ல் கோயம்புத்தூரில் ‘ஹேப்பி வாக்’ உருவாச்சு. பக்கத்திலேயே தயாரிப்பு யூனிட்டும் தொடங்கினோம்’’ என்ற குணசேகர், அதன் செயல்பாடுகள் குறித்தும் விவரித்தார்.

‘‘நாம் சாதாரணமாக நடக்கும் போது நமக்கே தெரியாமல் ஒரு சில இடத்தில் அழுத்தம் தந்து நடந்து விடுவோம். அப்போது அங்கு வீக்கம் ஏற்பட்டு வலி உண்டாகும். அதனால் நம் நடைப்பழக்கத்தில் என்ன தவறு செய்கிறோம் என்று அறிந்து சரி செய்யலாம். தற்போது உடல் பருமன் என்ற பிரச்னைகளுக்கு அதிகம் வாடிக்கையாளர்கள் எங்களிடம் வருகிறார்கள். அவர்களுக்கு ஏற்ற காலணிகளை உபயோகித்தாலே பெரும்பாலும் கால் தொடர்பான பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். எங்களைத் தேடி வரும் வாடிக்கையாளர்களுக்கு உயர் தொழிற்நுட்பம் பயன்படுத்தி அவர்களின் பிரச்னைகளை துல்லியமாக அறிய முடியும். ஒரு காலணியினை ஆர்டரின் பேரில் ஐந்து நாட்களில் தயாரித்து அவர்களின் வீட்டிற்கே அனுப்பிவிடுவோம்.

இன்றைய காலக்கட்டத்தில் உடல் பருமனுக்குப் பிறகு அதிகமாக பிரச்னைகள் தருவது ஃபிளாட் ஃபூட் (Flat foot), ‘தட்டையான பாதங்கள்.’ பாதத்தின் அடிப்பகுதியில் இயற்கையாக இருக்க வேண்டிய வளைவு இல்லாமல், முழு உள்ளங்காலும் தரையில் சமமாக இருக்கும். இதனால் சிலருக்கு பாதம், கணுக்கால் மற்றும் முதுகு வலியை ஏற்படுத்தும். பெரும்பாலும் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு அதிகம் இருக்கிறது. அதனால் அடிக்கடி தடுமாறியும் ஓடும்போதும் விழுவார்கள். ஆரம்பத்திலேயே இதை கண்டறிந்தால் அதனை சரி செய்து விடலாம். 18 வயதுக்குள் கால் தொடர்பான எந்தப் பிரச்னைகளையும் சரி செய்யலாம். எங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் முதலில் எங்கள் சென்டரில் உள்ள மருத்துவர்களை அணுக வேண்டும். அவர்களே பெரும்பாலும் காரணத்தை அறிந்து பிரச்னைக்கான காலணிகளை பரிந்துரைப்பார்கள். சிலருக்கு அட்வான்ஸ்டு டெஸ்டிங் தேவைப்படும். அவர்களுக்கு தொழிற்நுட்பம் மூலம் ஸ்கேன் செய்து, அதன்படி அவர்களின் கால் வடிவமைப்பு மற்றும் பிரச்னைக்கு ஏற்ப கஸ்டமைஸ்டு காலணிகள் தயாரித்து வழங்குவோம். எங்க சென்டரில் பிசியோதெரபி சிகிச்சையும் வழங்குகிறோம். கால்களை பொறுத்தவரை 24 விதமான வலிகள் உள்ளன. இந்த துறைக்கு வந்த பிறகு நானும் மனைவியுடன் சேர்ந்து நிறைய கற்றுக் கொண்டேன். சேலத்தில் மேலும் ஒரு தயாரிப்பு யூனிட்டும், கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் தி.நகர் கிளைகளோடு சமீபத்தில் சென்னை சோழிங்கநல்லூரில் மற்றொரு கிளையும் தொடங்கியுள்ளோம்’’ என்றார் குணசேகர்.

‘‘எங்களிடம் வரும் வாடிக்கையாளர்களில் குடும்பத்தலைவிகள்தான் அதிகம். அவர்களின் பிரச்னை ‘குதிகால் வலி.’ இதனால் குழந்தைகள் மற்றும் குடும்பத்தைக் கவனிக்க முடியவில்லை என்று கூறுவார்கள். அவர்களின் வேதனையை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. அதற்கான தீர்வினை கொடுத்த போது, சந்தோஷமாக அனைத்து வேலையும் சாதாரணமாக செய்ய முடிகிறது என்பார்கள். அவர்கள் அவ்வாறு சொல்வதைக் கேட்கும் போது மனசுக்கு நிம்மதியாக இருக்கும். என் அப்பாவின் வலியை குறைக்க நாங்கள் செய்த சின்ன முயற்சி இன்று பல அம்மா, அப்பாக்கள், குடும்பத்தலைவிகள் என அனைத்துத் தரப்பினரின் வலியைப் போக்கி அவர்களின் மறுவாழ்விற்கே துணையாக உள்ளதை எண்ணி நிஜமாகவே பெருமையாக உணர்கிறோம்’’ என்கின்றனர் பிரியங்கா மற்றும் குணசேகர் தம்பதியினர்.

தொகுப்பு:  கலைச்செல்வி

Tags : Kungumam ,Dozhi ,
× RELATED சைபர் புல்லிங்