நன்றி குங்குமம் தோழி
* உளுந்தை கொஞ்சம் குறைவாக போட்டு கெட்டியாக அரைத்து இட்லி வார்க்கும் போது, ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் விட்டு கலக்கி இட்லி வார்த்தால் இட்லி மிருதுவாக இருக்கும்.
* சப்பாத்தி மிருதுவாக இருக்க கோதுமை
மாவுடன் ஒரு வாழைப்பழம், ஒரு கரண்டி தயிர், வெந்நீர் விட்டு பிசைய சப்பாத்தி மென்மையாக, சுவையாக இருக்கும்.
* எண்ணெய் குடிக்காத உளுந்து வடை செய்ய, உளுந்தை தண்ணீரில் ஐந்து நிமிடம் ஊறவைத்து, தண்ணீர் இல்லாமல் வடிகட்டி விட வேண்டும். பிறகு மீண்டும் ஒன்றரை மணி நேரம் ஊறவைத்து வடித்து மிளகு, உப்பு,
பச்சை மிளகாய் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பந்து போல் அரைத்து எடுத்து வடை தட்டினால் சிறிது கூட எண்ணெய் குடிக்காது.
– ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி.
* முள்ளங்கி சாம்பார் செய்யும்போது முள்ளங்கியையும் சாம்பாரில் போட பெரிய வெங்காயத்தையும் வட்டமாக நறுக்கி துவரம் பருப்புடன் குக்கரில் வேகவைக்க வேண்டும். பிறகு புளி கரைத்து சாம்பார் பொடி, உப்பு போட்டு கொதிக்க வைத்து அதில் மிளகாய் வற்றல், தனியா, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, தேங்காய் துருவல் அரைத்து கொதிக்கும் சாம்பாரில் போட வேண்டும். பிறகு வேக வைத்த காய், பருப்பை கொட்டி கொதிக்க வைத்து இறக்கி, பிறகு நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்க கமகம சாம்பார் தயார்.
* வெண் பொங்கல் செய்யும் போது சீரகத்திற்கு பதில் ஓமம் வறுத்து சேர்க்க, கமகம பொங்கல் தயார். எளிதில் ஜீரணம் ஆகும்.
* ஒரு டம்ளர் வெள்ளை ரவையை லேசாக வறுத்து, 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, ½ டீஸ்பூன் – உப்பு, ¾ டீஸ்பூன் காரப்பொடி, ¼ டீஸ்பூன் பெருங்காயம், 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசைந்து உருட்டிப் போட்டு பொரித்தெடுக்க ரவா சீடை தயார்.
– ஜி.ராஜேஸ்வரி, சென்னை.
* நோன்பு கொழுக்கட்டை தயாரிக்க காராமணியை வேகவைத்து, வறுத்த மாவில் சேர்க்கும் போது நீரை வீணாக்காமல் வேகவைத்த நீரை விட்டு தயாரிக்க கொழுக்கட்டை சுவையாக இருக்கும்.
* அவியலுக்காக காய்கறிகளை வேகவைக்கும் போது நீர் அதிகமாக இருந்தால் அதை கொட்டாமல் ரசம் தயாரிக்க பயன்படுத்த சுவையாக இருக்கும்.
* ரவா தோசை தயாரிக்கும் முன் ரவையை மோரில் ஊறவைத்து, மிக்சியில் அரைத்து, பிறகு கோதுமை மாவு, அரிசி மாவு சேர்த்து தோசை வார்க்க சுவையாக இருக்கும்.
* பரங்கிக்காயை அரிந்து, குக்கரில் வேகவைத்து மசித்து, வெல்லத்தை கெட்டிப்பாகு எடுத்துக் கிளறி முந்திரி, திராட்சை சேர்க்க, பரங்கி அல்வா மிகச் சுவையாக இருக்கும்.
– இந்திரா கோபாலன், திருச்சி.
* அப்பளத்தை உளுந்தம் பருப்பில் போட்டு வைத்தால் அதிக நாட்கள் கெடாது.
* சாம்பார் பொடி தயாரிக்கும் போது கொரகொரப்பாக அரைத்தால், கட்டி பிடிக்காது.
* கோழி இறைச்சியை நறுக்கி, தயிரில் சிறிது நேரம் முக்கி வைத்து பின் சமைத்தால் இறைச்சி சுவையாக இருக்கும்.
– எஸ்.விமலா சடையப்பன், திண்டுக்கல்.
* சேப்பங்கிழங்கை குக்கரில் ஒரு வடிகட்டியில் வைத்து வேகவிட்டால் குழையாமல் இருக்கும்.
* மண்பானையில் கால் பாகம் தண்ணீர் ஊற்றி தோசை மாவு, தயிர் போன்றவற்றை வைத்தால் ஃபிரிட்ஜில் வைத்தது போல இருக்கும்.
* சாதம் கொதிக்கும் போது இரண்டு துளி எலுமிச்சை பழச் சாற்றை பிழிந்தால், சாதம் தும்பைப்பூ போல வெண்மையாக இருக்கும்.
– வெ.கார்த்திகா, குளத்தூர்.
* இட்லி பானையின் அடியில் சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை போட்டுவிட்டால் இட்லி கமகமக்கும்.
* தேங்காய் பர்ஃபி செய்யும் போது அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன் இரு தேக்கரண்டி மைதா மாவை
சிறிதளவு நெய் விட்டு வறுத்து சேர்த்தால், பர்ஃபி விரைவில் கெட்டியாவதுடன், துண்டுகளாக போடுவதும் எளிதாக இருக்கும்.
– உஷாராணி, கோயமுத்தூர்.
