×

குழந்தைகளின் லஞ்ச்பாக்ஸில் ஆரோக்கிய நூடுல்ஸ்

நன்றி குங்குமம் தோழி

மதுரையைச் சேர்ந்த ஒரு பெண் தொழில்முனைவோரான ப்ரியா சுரேஷ், தன் 30 ஆண்டுகால வர்த்தகப் பின்னணியிலிருந்து, இன்று வெற்றிகரமாக தமிழகமெங்கும் விநியோகம் செய்யும் ஒரு சிறுதானிய உற்பத்தி நிறுவனமாக ‘ஆகாஷ் ஃபுட்’ நிறுவனத்தை வளர்த்தெடுத்துள்ளார்.

“மதுரை கீழமாசி வீதியில் 30 ஆண்டுகளாக ‘உதயா’ஸ் அப்பள கடை’ என்ற பெயரில் அரிசி மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிறுவனமாக என் கணவர் சுரேஷ் உடன் நானும் இணைந்து இருவரும் சேர்ந்து நடத்தி வந்தோம். கொரோனா காலத்தில் மக்களிடையே சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்தபோது, ஆரோக்கியமான உணவை, குறிப்பாக குழந்தைகளுக்கு பிடித்தமான நூடுல்ஸ் வடிவில் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிறுதானிய உற்பத்தியில் முழுமையாக இறங்கினோம். முதலில் சாமை, தினை, குதிரைவாலி போன்ற சிறுதானிய நூடுல்ஸ்களை நாங்களே ஆய்வு செய்து முறையாக தயாரித்தோம். உற்பத்தி பொருட்கள் நன்றாக வந்தது. வாடிக்கையாளரிடையே கொண்டு சேர்க்கும் போது நல்ல வரவேற்பு கிடைத்தது.

மதுரையின் புறநகர் பகுதிகளான பனையூர் பகுதியில் தொழிற்சாலை அமைத்து, மேலும் பல வகைகளில் சிறுதானிய நூடுல்ஸ்களை தயாரிக்கவும் ஆய்வினை மேற்கொண்டோம். இவ்வாறு கம்பு, ராகி, கோதுமை, வரகு, பல தானியங்களின் கலவை, சாமை, தினை, குதிரைவாலி, சிவப்பரிசி, கருப்பு கவுனி அரிசி, மாப்பிள்ளை சம்பா, கொள்ளு, கைக்குத்தல் அரிசி, பூங்கார் அரிசி, முருங்கை, அறுபதாம் குறுவை, கருங்குறுவை, ஆவாரம்பூ போன்ற 18 வகையான சிறுதானிய சுவைகளில் நூடுல்ஸ் வகைகளை தயாரித்தோம். இதேபோல ராகி, கம்பு, கோதுமை, பல தானியங்களின் கலவை, வரகு, சாமை, தினை, குதிரைவாலி போன்றவற்றின் சேமியா வகைகளும் தயாரிக்கிறோம். மேலும், தினை, ராகி, பல தானியங்களின் கலவை, கோதுமை ஆகியவற்றில் பாஸ்தா வகைகளை இப்போது தயாரித்து வருகிறோம்” என்ற ப்ரியா தன் தொழில் பயணம் குறித்து பகிர்கிறார். “தொழில் தொடங்குவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ஒரு பெரிய இடத்தை வாடகைக்கு எடுத்துத் தொழில் தொடங்கிய போது பல தயக்கங்கள் இருந்தன. இருப்பினும், தமிழக அரசின் MSME (குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம்) கடன் மற்றும் வங்கிகளின் நிதி ஆதரவுடன் பல தயக்கங்களை கடந்து தொழில் தொடங்கினோம். சிறிதளவில் தொடங்கி இப்போது எங்களது தயாரிப்புகளை சிறு, குறு நிறுவனங்கள் முதல் சூப்பர் மார்க்கெட்டுகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை விநியோகம் செய்யுமளவு வளர்ச்சியடைந்துள்ளோம்.

பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல் எங்கள் நிறுவனத்தின் மிக முக்கியமான அம்சமாகும். ஐந்து ஊழியர்களுடன் தொடங்கிய எங்க நிறுவனத்தில் இன்று 75 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதில் சுமார் 40 முதல் 50 பேர் பெண்கள் என்பதை பெருமையுடன் குறிப்பிடுகிறேன். குறிப்பாக மதுரையின் புறநகர் பகுதிகளான பனையூர் மற்றும் சொட்டதட்டி போன்ற கிராமப்புறப் பெண்கள் இதன் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்கின்றனர் என்பதும் நிறைவாக இருக்கிறது. இது ஒரு நிறுவனம் என்பதைத் தாண்டி, ஊழியர்கள் அனைவரும் ஒரு குடும்பத்தை போலவே எங்களுடன் இணைந்துள்ளனர். குழுவாக சேர்ந்து பண்டிகை காலங்களை கொண்டாடுவது, பணிச்சுமையை குறைக்க அவ்வப்போது விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவது போன்றவற்றின் மூலம் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்கிறோம்.சந்தையில் உள்ள மற்ற நூடுல்ஸ்களில் இருந்து எங்களது தயாரிப்பு

‘‘சந்தையில் உள்ள மற்ற நூடுல்ஸ்களில் இருந்து எங்களது தயாரிப்பு தனித்துவமானதாக இருக்க RnD செய்யும் ஒவ்வொரு முறையும் முயற்சி செய்கிறோம். நூடுல்ஸ் கைகளால் செய்யப்படுவது போன்ற உணர்வைத் தரும்.’’

தனித்துவமானதாக இருக்க RnD செய்யும் ஒவ்வொரு முறையும் முயற்சி செய்கிறோம். நூடுல்ஸ் கைகளால் செய்யப்படுவது போன்ற உணர்வைத் தரும். மேலும், நூடுல்ஸ் சதுர வடிவில் உடையாமல் இருக்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்படுகிறது. எங்கள் தயாரிப்புகளில் மைதா போன்ற எந்தக் கலவையும் அல்லாமல், ஆரோக்கியமான சிறுதானியங்கள் கொண்டு தயாரிக்கப்
படுவதால் மக்களிடையே நல்ல வரவேற்புள்ளது. ஆகையால்தான் ரிலையன்ஸ் மார்ட் மற்றும் ஸ்மார்ட் பஜார் போன்ற பெரிய நிறுவனங்களுடன் வணிக ஒப்பந்தம் செய்யுமளவு வளர்ந்துள்ளோம்” எனும் ப்ரியா, வளர்ந்து வரும் சிறு, குறு தொழில்முனைவோர்களையும் புதிதாக தொழில் தொடங்கும் பெண்களையும் ஊக்குவிக்கிறார்.

“தாம் மட்டும் வளர்ந்தால் போதும் என்ற சிந்தனையே எனக்கு கிடையாது. என்னால் முடிந்தவரை மற்ற பெண்களையும் ஊக்குவித்து தொழில்முனைவோராக்க வேண்டும் என்று ஊக்குவிக்கிறேன். போதிய நிதியில்லாததால் தொழில் தொடங்க பெண்கள் தயங்குவார்கள். ஆரம்பத்திலேயே அதிகமான பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டாம். இன்றைக்கு ஒரு 10 பாக்கெட்டில் இருந்து தொடங்குங்கள். அடுத்தடுத்த நாட்களில் விற்பனை அதிகரித்து தொழில் நன்றாக சூடு பிடிக்கும். தொழில் பயணத்தில் ஒருநாள் வியாபாரம் இல்லையென்றாலும் துவண்டுபோகக்கூடாது. விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும். ஒரு வயதான தம்பதியினர் தற்போது எங்க தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்து சிறு தொழில் செய்து வருகின்றனர். ‘ஆர்வத்துடன் இதில் ஈடுபடுவதால், எங்கள் தனிமையை இது குறைத்துள்ளது’ என்று அவர்கள் சொன்னது நெகிழ்ச்சியாக இருந்தது. புதிதாக தொழில் தொடங்குகின்ற மற்றும் வளர்ந்து வரும் பெண் தொழில்முனைவோர்களுக்கு சொல்வது இதுதான். குறைந்த முதலீடு செய்யுங்கள். முதலில் 3000 ரூபாய் பட்ஜெட்டில் கூட பெண்கள் தங்கள் வீடுகளிலிருந்தோ அல்லது சிறு இடத்திலிருந்தோ கூட தொழிலை தொடங்கலாம். இது போன்று சுமார் 500 பெண் தொழில்முனைவோர்களுக்கு எங்க தயாரிப்புகளை வழங்கி தொழில் செய்ய ஆதரவளித்து வருகிறேன். சென்னையில் ஒரு மாற்றுத்திறனாளி இளைஞர் இயற்கை அங்காடி அமைப்பதற்கு தேவையான ஆலோசனைகளையும் புது யோசனைகளையும் வழங்கி உதவுகிறேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆரோக்கியமான பாரம்பரிய உணவை உண்ண வேண்டும் என்பதே எங்க தாரக மந்திரம். கடந்த 10 ஆண்டுகால தியாகத்தையும் உழைப்பையும் முதலீடாகக் கொண்டு வளர்ந்து வரும் எங்க நிறுவனம், அடுத்த கட்டமாகத் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யும் அளவிற்கு எங்க ப்ராண்டை உலகறியச் செய்ய வேண்டும் என்ற கனவோடு முன்னேறி வருகிறது. எங்களுடைய இந்த வெற்றியின் பின்னணியில் இருப்பது வெறும் லாபம் மட்டுமல்ல, விடாமுயற்சியும், சமூகத்திற்கு ஆரோக்கியமான உணவை வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கமுமே ஆகும்” என்றார் ப்ரியா.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

Tags : Kungumam Dozhi ,Priya Suresh ,Madurai ,Aakash Food ,Tamil Nadu ,
× RELATED சைபர் புல்லிங்