×

மலரட்டும் மனிதம்

நன்றி குங்குமம் தோழி

கடிகாரத்தின் அலார ஒலி கேட்டு விழித்த திவ்யா, அவசரமாக எழுந்து குளியலறையை நோக்கி ஓடினாள். மணி ஐந்து. இப்போதே அவள் எழுந்து வேலையை செய்தால்தான் எட்டு பத்துக்குக் கிளம்பி, அலுவலகத்தை ஒன்பது மணிக்குள் அடைய முடியும். ஒன்பது மணிக்கு ஒரு நிமிடம் தாமதமாகச் சென்றால் கூட லேட் என்று குறிக்கப்படும். மூன்று நாட்கள் ஒரே மாதத்தில் தாமதமாக வந்தால், ஒருநாள் சம்பளம் கழிக்கப்பட்டு விடும். குழந்தை எழுந்து கொள்வதற்கு முன்பே இவள் குளித்து, சமையல் வேலையை முடித்து, கணவருக்கும், தனக்கும் மதிய உணவு தயாராக சம்புடத்தில் போட்டு முடித்து, காப்பகத்தில் விடப் படும் குழந்தைக்குத் தேவையானதை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாத பட்சத்தில், குழந்தை விழித்து உணவுக்கு அழுதால், உறங்கிக் கொண்டிருக்கும் இவள் கணவன் எழுந்து கூடப் பார்க்க மாட்டான். எழுந்தாலும் அலைபேசியில் புலனத்தில் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவானே தவிர, உருப்படியாக எந்த உதவியும் செய்ய மாட்டான். இத்தனைக்கும் அவன் அலுவலகத்திற்கு பத்து மணிக்குத்தான் கிளம்பிச் செல்வான். நினைத்தால் உதவலாம். ஆனால், உதவ மாட்டான்.இவளும் எதுவும் அவனிடம் கேட்பதில்லை. போதாக்குறைக்கு அவன் எழுந்து விட்டால், இவள் அவன் இருக்கும் இடத்திற்குச் சென்று காபி தரவேண்டும். டம்ளரை குடித்த இடத்திலேயே வைத்து விடுவான்.

முன்பு இவ்வளவு மோசமில்லை. கொஞ்சம் கொஞ்சம் அன்பும் பாசமும் இருந்தன. எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது கொரோனா ஊரடங்கு. வேலையிழந்த அவன் சொந்தத் தொழில் ஆரம்பித்தான்.
அதிலும் நஷ்டம் வர, சொற்ப ஊதியத்தில் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தான். தன்னை விட அதிகம் ஊதியம் ஈட்டிய மனைவியை அவ்வப்போது தாழ்வுமனப்பான்மை கொண்டு வதைப்பது அவன் வாடிக்கையானது. இவள் சாதாரணமாகப் பேசும் சொற்கள் கூடச் சண்டையாகின. என்றாவது அவசரத்திற்கு அவள் சிறிய உதவிகள் கேட்டால் கூட ‘‘சம்பளம் கம்மியா வாங்கற புருஷன் தானே? அதனால்தான் வேலை வாங்கறே?” என்பான் கூசாமல். இந்தச் சொல் வதைகளுக்கு பயந்து இவளும் அவனை எதுவும் கேட்பதில்லை. எல்லாம் இவள் தவறு. திருமணம் ஆன புதிதில் இவர்களுடன் அவன் அம்மாவும் இருந்தாள்.

எங்கே புதிதாக வந்த மருமகள் திவ்யா தன் மகனை தன்னிடமிருந்து பிரித்து விடுவாளோ என்ற பயத்தில், திவ்யா மேல் தன் மகன் அரவிந்திற்கு வெறுப்பு வருவது போல் நடந்து கொள்வாள். அவனுக்குச் சமையல் செய்வது, பரிமாறுவது என எல்லாவற்றையும் தானேதான் செய்வாள். திவ்யா ஏதாவது கேட்டால்,‘‘சுத்து வேலையெல்லாம் நீ செய் திவ்யா! சமையலை நான் பார்த்துக்கறேன்… எங்க அரவிந்துக்கு நான் செஞ்சா தான் பிடிக்கும்” என்பாள். உறவினர்கள் எல்லோரிடமும், ‘‘அந்தப் பெண்ணை அவங்க வீட்ல ஒரு வேலையையும் செய்ய விடாமல் செல்லமா வளத்துட்டாங்க போலிருக்கு. ஒருநாள் சமைக்க விட்டேன். உப்புமில்லே… உரப்புமில்லே.வாய்க்கே நல்லா இல்லை.ஏதோ நான் இருக்கும் வரை எம் பிள்ளைக்கு வாய்க்கு ருசியாகச் செய்யறேன்” என்று நொடிப்பாள்.

அவர்கள் ஏதாவது, ‘‘சின்னப் பெண் தானே” என்று கூறினால், அவ்வளவுதான்.‘‘சின்னப்பெண்ணா? இவள் வயசில் எனக்கு அரவிந்த் பிறந்துவிட்டான்” என்பாள்.அவர்கள் ‘‘அது அந்தக் காலம்” என்று ஏதாவது சொன்னால், ‘‘காலம் என்ன காலம்! இந்தக் காலத்திலும் எங்கள் மகள் ரம்யா அழகாகக் குடித்தனம் செய்யலையா? அவளும் எங்களுக்குச் செல்லம்தான். ஆனால், வேலையெல்லாம் நல்லா பழக்கி அனுப்பினோம்” என்று எதிரே இருப்பவரைப் பேச விடவே மாட்டாள். சதா ஏதாவது பேசி மனதைப் புண்படுத்தும் மாமியார், ஏனோ தானோ என்று வாழும் கணவன் என்று சுவையின்றி நகர்ந்த வாழ்வை சுவையாக்கவே வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். இன்று அதுவே அவளுக்குச் சுமையாகிப் போயிற்று.

வேலைக்குப் போக வேண்டாம் என்று கூறி வந்த கணவனை நச்சரித்து வேலைக்கு மனு போட்டாள். அதன் பிறகு குழந்தை பிறந்ததும் இவளே அவனிடம் போய் ‘வேலையை ராஜினாமா செய்யவா’ என்று கேட்டதற்கு அவன், ‘‘என்ன திவ்யா… இப்படி பொறுப்பு இல்லாமல் கேட்கிறே? உன் சம்பளத்தை நம்பி நான் எல்லாப் பொருளையும் வாங்கிட்டேன். ஒரு பிளாட் வேற புக் பண்ணி விட்டேன். கூலாச் சொல்றே…வேலையை விடப்போறேன்னு? எங்கள் அம்மாவை வரச் சொல்றேன். குழந்தையை பார்த்துப்பாங்க” என்றான். ஆனால், அவன் தமக்கை வீட்டிற்குச் சென்ற அவன் அம்மா இந்தப் புறம் எட்டிக்கூடப் பார்க்கவேயில்லை.

அதற்குப் பிறகு ஊரடங்கு வந்து, வீட்டிலிருந்தே வேலை. குழந்தையும் வளர்ந்து இதோ இரண்டரை வயது. காப்பகத்தில் விட்டு விட்டு வேலைக்குப் போகத் தொடங்கினாள். இடையில் என்னென்னவோ நிகழ்வுகள்! அவன் வேலை போனது. சொந்தத் தொழிலில் கையை சுட்டுக் கொண்டவன், முற்றிலும் மூர்க்கன் ஆனான். வறட்டுப் பிடிவாதம், வேண்டாத அர்த்தம், தொட்டதற்கெல்லாம் குற்றம் கண்டுபிடித்து இவள் வாழ்வை நரகமாக்கினான். உடல், மனம் இரண்டுமே இன்று மரத்துப் போனாற் போல் ஆனது திவ்யாவிற்குஅப்பா, அம்மா இல்லாத அவளுக்கு வயதான அத்தை மட்டுமே அவள் வழி உறவு.இவளை வளர்த்த அத்தை செய்த கொடுமைகளையும், குத்தல் பேச்சுக்களையும் தாங்கிப் பழகியதால் அவனும், அவன் அம்மாவும் செய்த கொடுமைகளை இயல்பாய் ஏற்க முடிகிறது. ஒருபுறம் பெண் விடுதலைப் பேச்சுக்கள்… மற்றொரு புறம் இது போன்ற கொடுமைகள்! இதென்ன மனசு இன்று அலை பாய்கிறது! எண்ணக் குதிரைகளை தட்டி அடக்கியவள், தனது அன்றாட வேலைகளில் ஆழ்ந்து போனாள்.மல்லிகைப்பூவாய் இட்லி செய்து, காரச் சட்னி செய்து அவனுக்கு பரிமாற… அவனோ, ‘‘இட்லியா இது? பாறாங்கல்லைப் போல ஹார்டா இருக்கு. இட்லின்னா எங்கள் அம்மா செய்து சாப்பிடணும்” என்றான்.

‘‘உங்கள் அம்மா என்னிக்கு உங்களுக்குக் காலை ஏழு மணிக்கு இட்லி வார்த்துக் குடுத்திருக்கா. ஒரு காபி போடவே ஊரைக் கூட்டி அமர்க்களம் பண்ணுவா” என்று சொல்லத்தான் நாக்கு துடித்தது.சொன்னால் அவன் விடமாட்டான். இவளுக்கு முந்தைய மூன்று தலைமுறைகளை இழுத்துத் திட்டுவான். இட்லி பறக்கும். வார்த்தைகள் தடிக்கும். காலையில் வேண்டாத பேச்சை வளர்த்து எதிர்மறையாக இந்த நாளை மாற்ற விரும்பாத திவ்யா சமையல் அறைக்குள் அமைதியாக நுழைந்தாள்.

சமைத்து முடித்து குழந்தைக்கு உணவூட்டி தானும் கிளம்பி பேருந்து நிலையம் அருகேயுள்ள குழந்தைகள் காப்பகம் சென்றாள். தாயைப் பிரிய மனமில்லாத குழந்தை வீணையின் நாதமாய் அழுதது. ‘‘கண்ணம்மா! நான் உன் கூட இருந்து பார்த்துக்கொள்ள முடியாத பாவிடி”, இவள் மனதிலும் ரத்தக் கண்ணீர்! பலவற்றை எண்ணமிட்டபடியே அலுவலகம் நுழைந்தாள். அங்கே ஒரு நிமிடம் தாமதமாக வந்ததால் வருகைப் பதிவேடு அந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்டு, மேலதிகாரியின் அறைக்குச் சென்றுவிட்டது. பிறகென்ன? தமிழிலும், ஆங்கிலத்திலும் திவ்யாவிற்கு அர்ச்சனை நிகழ்ந்தது. மௌனமாக எல்லாவற்றையும் வாங்கிக் கட்டிக் கொண்டு வெளியே வந்தபோது சக ஊழியர்கள் அனைவரும் தன்னையே பார்ப்பது போல் தோன்ற அவமானத்தால் முகம் சிவந்து போனது அவளுக்கு! ஒரு டம்ளர் தண்ணீரை குடித்து தன் துக்கத்தையும் சேர்த்தே விழுங்கிக் கொண்டாள். வேலை மேஜை நிறைய குவிந்து கிடந்தது. எழுபத்தைந்து சதவீதம் பணிகளை முடித்த போது மணி ஐந்து நாற்பத்தி ஐந்து. ஐயையோ..! காப்பகம் இன்று முதல் ஆறு மணி வரைதான். இப்போது கிளம்பிச் சென்றாலும், ஆறு மணிக்குள் சென்றடைய முடியாது.அலுவலகத்தில் இவள் பகுதிப் பொறுப்பாளரிடம் அனுமதிப் பெற்று (‘‘வரும் போது லேட்டா வா… போகும் போது சீக்கிரம் போ’’ என்ற வசனத்தை வாங்கிக் கொண்டு) அலைபேசியில் காப்பகம் நடத்தும் பெண்ணைத் தொடர்பு கொண்டு, தன் இயலாமையை சொல்லி, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வருவதாகச் சொன்னாள். குழந்தையை எடுத்துக் கொண்டு, காப்பகத்திலிருந்து கிளம்பும்போது குழந்தையின் பூஞ்சிரிப்பில் உலகமே மறந்தது போலிருந்தது. மனம் லேசாகிப் பறப்பது போல உணர்ந்தாள்.

தன்னையும் அறியாமல்,‘‘ஜுஜும்மா ஜுஜுக்குட்டி” என்று குழந்தையை கொஞ்சிக் கொண்டே, அந்த மரங்கள் அடர்ந்த சாலையில் குழந்தையுடன் நடக்க ஆரம்பித்தாள் திவ்யா.மழை தூற ஆரம்பித்தது. நடந்தே வீட்டுக்குப் போய் விடுவோம் என்ற எண்ணத்தை மாற்றி, நகரப் பேருந்து ஒன்றில் தன்னை திணித்துக் கொண்டாள்.நகரப் பேருந்து முழுவதும் கூட்டம். ஒருவரென்றால் ஒருவர் கூட, குழந்தையுடன் பயணம் செய்து திண்டாடும் இவளுக்கு எழுந்து இடம் தரவில்லை.அனைவரும் பெண்கள்தான். பெண்ணுக்குப் பெண்தான் எதிரியோ? இந்தப் பெண்கள் மட்டுமல்ல… மேலதிகாரி, இவளது மாமியார் எல்லோருமே பெண்கள்தாமே. யார்தான் இவள் நிலைமையை அறிந்து உதவி செய்கிறார்கள்? நிறுத்தம் வந்து வீட்டுக்குச் சென்றாள்.அவளது வேலைக்காரி அன்று வரவில்லை. குமைந்து கொண்டே வேலைகளை செய்து முடித்தாள். மறுநாளும் அதே இயந்திரகதியில் வேலைகள் நடந்தன. மாலை இவள் வந்தபோது வாசலிலேயே வேலைக்காரி முத்தம்மா காத்திருந்தாள். முகமெல்லாம் வீங்கியிருந்தது. களைப்பாகக் காணப்பட்டாள். நேற்று விடுமுறைக்குக் காரணம் சொல்ல வேண்டாமா? எல்லாம் நடிப்பு என்று திவ்யா நினைத்துக் கொண்டாள். வேலைகளை முடித்துக் கிளம்பும்போதுதான் முத்தம்மா நடக்க முடியாமல் நடப்பதைப் பார்த்த திவ்யா, ‘‘என்ன ஆச்சு முத்தம்மா? நேத்து போன் பண்ணினேன்… எடுக்கலையே?” என்றாள்.‘‘அதையேம்மா கேட்கறீங்க..? நேத்து எம் புருஷன் குடிச்சுட்டு வந்து என் கிட்டப் பெரிய சண்டை? கத்தியாலே குத்தப் பார்த்தான். கால்ல, கழுத்திலெல்லாம் கீறிட்டான். நான் கூவினவுடனே அக்கம் பக்கத்திலேர்ந்து திபுதிபுன்னு கும்பல். கூட்டத்தைப் பார்த்தவுடனே எக்குத் தப்பா எம் மேல் கத்தியை வீசிட்டு ஓடிட்டான். இடுப்புல கால்லலாம் காயம். காய்ச்சல் வந்துடுச்சு.இன்னிக்குமே வலி சரியாகல்லே. நீ கொயந்தையை வெச்சுட்டு வேலைக்கும் போயிட்டு வந்து அல்லாடறியேன்னுதான் வந்தேன்” என்று காயங்களை காண்பித்தாள்.

திவ்யாவுக்குப் பதில் பேச நா எழவில்லை. அறிவு ஜீவி எனப் பெண்ணியம் பேசும் என்னால் ஏன் இந்தப் பெண்ணின் வேதனையை அறிய முடியவில்லை? இவ்வளவு சிரமத்தையும் மீறி எனக்காகப் பணிக்கு வந்த இவளல்லவா உயர்ந்தவள்?எண்ணமிட்ட திவ்யா, ‘‘முத்தம்மா இந்தா ரூபாய். டாக்டர்ட்டே போய்க் காமிச்சு ஊசி போட்டுக்கோ. உடம்பு சரியானதும் ஒரு வாரம் கழித்து வேலைக்கு வந்தாப் போதும்” என்று பணத்தை நீட்டினாள். பெண்ணுக்குப் பெண்தான் ஆதரவு என்று அழுத்தமாக நினைத்துக் கொண்டாள். தொலை தூர ஆலய மணி எட்டு முறை அடித்து இவள் நினைப்பதை ஆமோதித்தது.

தொகுப்பு: சிவகாமசுந்தரி நாகமணி

Tags : Divya ,
× RELATED சைபர் புல்லிங்