×

புவி நலம் காக்கும் தம்பதியினர்

நன்றி குங்குமம் தோழி

பொதுவாக ஒரு பிசினஸ் செய்பவர்கள் அதில் லாப நோக்கம், வருமானம் குறித்து திட்டமிட்டுதான் அந்தத் தொழிலில் ஈடுபடவே செய்வார்கள். அதில் சரியான லாபம் வரவில்லை என்றால், இனிமேலும் நஷ்டப்பட வேண்டாம் என்று அந்தத் தொழிலிலிருந்து விலகிவிடுவார்கள். ஆனால், சென்னை, போரூரில் வசித்து வரும் புவனா கடந்த பத்தாண்டுகளுக்கு முன் துவங்கிய ‘சங்கையா சிறுதானிய உணவகத்தினை’ இன்றுவரை திறம்பட நடத்தி வருகிறார்.

‘‘பிறந்து வளர்ந்தது ராமநாதபுரம் அருகிலுள்ள பருதிவயல் கிராமம். அப்பா வெளிநாடுகள் சென்று தோட்டங்கள் அமைத்து தரும் வேலையினை செய்துவந்தார். நான் பள்ளிப் படிப்பு முடித்ததும் 17 வயதிலேயே எங்க வீட்டில் சொந்தத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடித்துவிட்டார்கள். என் கணவர் மலேசியாவில் லேண்ட்ஸ்கேப் மற்றும் தோட்டக்கலை வல்லுநராக வேலை பார்த்து வந்தார். திருமணத்திற்குப் பிறகு நான் மலேசியா சென்றுவிட்டேன். அங்கு சும்மா இருக்க பிடிக்காமல் என் கணவரிடமே தோட்டங்கள் அமைப்பது மற்றும் அழகுப்படுத்தும் கலையினை கற்றுக் கொண்டேன். எங்க நிறுவனம் பூமித்ரா லேண்ட்ஸ்கேப் மூலமாக மலேசியாவில் உள்ள பல பிரபலங்களின் வீட்டுத் தோட்டங்களை நாங்க அமைத்துக் கொடுத்திருக்கிறோம். தோட்டங்கள் அமைப்பது மட்டுமில்லாமல், லேண்ட்ஸ்கேப் டெவலப்மென்ட், சீசனல் ப்ளாண்டிங், லேண்ட்ஸ்கேப் மெயின்டனன்ஸ், இன்டோர் மற்றும் எக்சாட்டிக் தோட்டம், வெர்ட்டிகல் லேண்ட்ஸ்கேப் இரிகேஷன், மொட்டைமாடித் தோட்டம், பால்கனி ஸ்விம்மிங்ஃபுல் என பல பணிகளை நானும் என் கணவரும் இணைந்து செய்து வந்தோம். பள்ளிப் படிப்பு முடித்த கையோடு திருமணம் என்பதால், மலேசியாவில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தேன். என் முதல் மகள் பிறந்த நேரம் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், நாங்க 2020ல் சென்னைக்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டது. இங்கு வந்த பிறகு போரூரில் ‘பூமித்ரா பயோகிரீன் வேர்ல்ட்’ என்ற பெயரில் நர்சரி தோட்டம் ஒன்றை ஆரம்பித்தோம். இங்கு இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட செடிகள் உள்ளன. நம்மாழ்வார் வழியை பின்பற்றி நானும் என் கணவரும் ஆர்கானிக் முறையில் செடிகள், தோட்டங்கள் அமைத்து சுற்றுச்சூழல் மாசு இல்லாமல் இந்த நர்சரி தோட்டத்தினை நடத்தி வருகிறோம்.

‘இங்கு உணவினை சுவைத்து பலர் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு எங்களின் உணவினை ஆர்டர் கொடுக்கிறார்கள். போரூரை அடுத்து வேறு இடங்களிலும் உணவகத்தின் கிளைகளை துவங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.”

நர்சரி தோட்டம் பிசினஸ் என்றாலும், இன்றைய தலைமுறையினருக்கு விவசாயம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு எங்களின் ேதாட்டத்தில் பூமி வெப்பம் அடைவதை தடுக்கவும், நிலத்தடி நீர் அதிகரிக்க மரக்கன்றுகளை நடுவது குறித்து அவர்களுக்கு விளக்கம் அளித்தோம். அதன் அடிப்படையில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை இலவசமாக கொடுத்து புவி மேம்பாட்டு நற்பணியை தொடர்ந்து செய்து வருகிறோம்.பள்ளி சிறுவர், சிறுமிகளுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு செடி கொடுத்து அவர்களுக்கு விவசாய ஆர்வத்தை உண்டாக்கி வருகிறோம். எங்கள் நர்சரி தோட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விதவிதமான செடிகள், பூச்செடிகள், விதைகள் வாங்க வெளியூர்களில் இருந்து மக்கள் வந்து வாங்கிச் செல்கிறார்கள். மேலும், நர்சரி தோட்டம் அமைக்க ஆறுமாத பயிற்சியும் அளிக்கிறோம். இதில் நம் வீட்டிற்கு அன்றாடம் தேவைப்படும் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், பழ வகைகளை மாடித் தோட்டம் அமைத்து அதனை எவ்வாறு விளைவிக்கலாம் என்று சொல்லித் தருகிறோம். மேலும், மண்புழு, அழுகிய காய்கறிக் கழிவுகள் கொண்டு செய்யப்படும் ஆர்கானிக் உரங்களையும் தருகிறோம். சாதாரண செடிகள் மட்டுமில்லாமல் இருநூறு விதமான மூலிகைச் செடிகளும் எங்களின் நர்சரி தோட்டத்தில் உள்ளது. எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த போது ஒருநாள் எங்க தோட்டத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. அதனால் பெரும் நஷ்டத்தினை சந்தித்தோம். மீண்டும் தொடர்வதா வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது. ஆனால், நண்பர்கள் மற்றும் தோழிகள் கொடுத்த ஊக்கத்தினால் மீண்டும் அனைத்தையும் சரி செய்து நர்சரி தோட்டத்தினை ஆரம்பித்தோம்’’ என்றவர், தன்னுடைய சிறுதானிய உணவகம் குறித்து விவரித்தார்.

‘‘சென்னையில் வசிக்கும் பெரும்பாலான பேச்சிலர்கள் ஓட்டல் உணவினைதான் தினமும் சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்களின் உடல் நலம் பிற்காலத்தில் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். ஒரு சிலருக்கு ஓட்டலுக்கு சென்று சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால், அவர்களுக்கு ஒத்துக் கொள்ளாது. செரிமான பிரச்னை ஏற்படும். இவர்களை மனதில் கொண்டுதான் முழுக்க முழுக்க ஆரோக்கியமாக உடலுக்கு தீங்கு விளைவிக்காத சிறுதானியங்கள் கொண்டு சங்கையா சிறுதானிய உணவகம் என்ற பெயரில் ஆரம்பித்தோம். இங்கு தினை, கம்பு, ராகி, சாமை, வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை வைத்து பொங்கல், தோசை, இட்லி தயாரித்து காலை உணவாக தருகிறோம். மதிய வேளைக்கு சிறுதானிய சிறப்பு சாப்பாடு வழங்குகிறோம். மாலை மற்றும் இரவிலும் மாறுபட்ட சுவையில் சிறுதானிய உணவு வகைகளை வழங்குகிறோம். இதனை சாப்பிடும் போது மலச்சிக்கல் நீங்கி உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

எங்களின் தயாரிப்பான சிறுதானிய லட்டு, கேப்பங்கூழ், கம்பங்கூழ், பருத்திப்பாலுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த உணவகம் எங்களின் நர்சரி தோட்டத்திற்குள் அமைந்திருப்பதால், தோட்டத்திற்கு வரும் அனைவரும் ஒரு வேளை உணவாவது இங்கு சுவைக்காமல் செல்ல மாட்டார்கள். உணவு மட்டுமில்லாமல் ஆவாரம்பூ, வல்லாரை, சங்குப்பூ, செம்பருத்தி என சிறப்பு மூலிகை டீயினையும் பலர் விரும்பி குடிக்க வருகிறார்கள். பால் சேர்க்காமல் நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் கலந்துதான் இந்த டீயினை பரிமாறுகிறோம். ஆவாரம்பூ டீ ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினை குறைக்கும். செம்பருத்தி இதய ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்த அணுக்களை அதிகரித்து, கொழுப்பு நச்சுக்களை அகற்றுகிறது. இது போல் ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளன. இங்குள்ள உணவினை சுவைத்து பலர் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு எங்களின் உணவினை ஆர்டர் கொடுக்கிறார்கள். போரூரை அடுத்து வேறு இடங்களிலும் உணவகத்தின் கிளைகளை துவங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதற்கான முயற்சியில் நானும் என் கணவரும் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றார் புவனா

தொகுப்பு: விஜயா கண்ணன்

 

Tags : earth ,
× RELATED சைபர் புல்லிங்