×

திரிணாமுல் காங்கிரசில் மீண்டும் அதிர்ச்சி; 2வது எம்பியாக சுஷ்மிதா ராஜினாமா: அசாம் பாஜக முதல்வருடன் ரகசிய சந்திப்பு

 

புதுடெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்துள்ள நிலையில், ஒரே வாரத்தில் இரண்டாவது எம்பி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அசாம் மாநிலம் சில்சார் தொகுதியின் காங்கிரஸ் முன்னாள் எம்பியான சுஷ்மிதா தேவ், கடந்த 2021ம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும், ராஜ்யசபா எம்பியாகவும் முக்கிய முகமாக செயல்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மூத்த தலைவர் சுகேந்து சேகர் ராய் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்து கட்சியிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில், ராஜ்யசபா எம்பி பதவியையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் சுஷ்மிதா தேவ் இன்று ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்க துணை குடியரசுத் தலைவரும், ராஜ்யசபா தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனை அவர் சந்தித்தார். மேற்குவங்க சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பின், திரிணாமுல் காங்கிரசில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் மற்றும் கட்டமைப்பு ரீதியிலான பிரச்னைகள் காரணமாக இந்த விலகல் நடந்துள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவை சுஷ்மிதா தேவ் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீண்டும் பாஜக சார்பில் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags : Trinamul Congress ,Sushmita ,Assam ,BJP ,NEW DELHI ,Sushmita Dev ,Congress ,Assam State ,Silchar ,
× RELATED டெல்லியில் காங். மூத்த தலைவர் சோனியா...