×

மீனாட்சி நடராஜன் மனு தள்ளுபடி விவகாரம்: தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார்

புதுடெல்லி: மபி மாநிலங்களவை தேர்தலில் மீனாட்சி நடராஜன் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தனர். மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் 18ம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலுக்காக, காங்கிரஸ் கட்சி சார்பில் மீனாட்சி நடராஜன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்ட போது, மீனாட்சி நடராஜன் தனது வேட்புமனுவில் குற்றப் பின்னணி தொடர்பான தகவல்களை முறையாக தெரிவிக்காமல் மறைத்துள்ளதாக கூறி, அவரது மனுவை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர். இந்த நடவடிக்கையை கண்டித்து அதிருப்தி அடைந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஹரிஷ் சவுத்ரி, ஜிட்டு பட்வாரி மற்றும் மாநில எதிர்க்கட்சி தலைவர் உமங் சிங்கார் உள்ளிட்டோர் போபாலில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று காலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், அபிஷேக் சிங்வி, விவேக் தங்கா, ரந்தீப் சுர்ஜேவாலா, பூபேஷ் பாகேல், தீபா தாஸ்முன்ஷி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் அடங்கிய குழுவினர், மீனாட்சி நடராஜனுடன் இணைந்து தேர்தல் ஆணையத்தை நேரில் சந்தித்து, அந்த முடிவை மாற்றியமைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். காங்கிரஸ் குழுவினர் தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்த மீனாட்சி நடராஜன்,’இது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயலாகும். அரசியலமைப்பு சார்ந்த நிறுவனங்கள் மீது எங்களுக்கு இன்னும் முழு நம்பிக்கை உள்ளது. அதனால்தான் நாங்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்’ என்றார்.

அபிஷேக் சிங்வி கூறுகையில்,’காங்கிரஸ் குழு தேர்தல் ஆணையத்திடம் விரிவான விளக்கத்தை அளித்தது. தேர்தல் நடத்தும் அதிகாரி ஒரு தவறான உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்பதை, எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி மற்றும் சர்ச்சைக்கு அப்பாற்பட்ட வகையில் நாங்கள் அவர்களுக்குத் தெரிவித்து நிரூபித்துள்ளோம். இது ஒரு அபத்தமான உத்தரவு. நான் ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால், தேர்தல் ஆணையத்தின் சட்டமான மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 33ஏ பிரிவின்படி, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைக்கக்கூடிய வழக்குகளை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக, குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மட்டுமே குறிப்பிட வேண்டும். இத்தகைய சூழலில் திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நீதியை நிலைநாட்டவும் கூடிய அதிகாரம் கொண்ட முதன்மை அமைப்பாக தேர்தல் ஆணையமே இங்கே உள்ளது. தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தை உடனடியாகப் பயன்படுத்த வேண்டும். அரியானா மற்றும் குஜராத் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அவ்வாறு செயல்பட்டுள்ளது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெறும் நாளில்தான் நாங்கள் வந்துள்ளோம், எனவே போதுமான நேரம் உள்ளது. இது முற்றிலும் அநியாயமான மற்றும் வெளிப்படையாகவே சட்டவிரோதமான உத்தரவு. இதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை’ என்றார்.

காங்கிரஸ் தலைவர்களே காரணம்: ம.பி. பா.ஜ முதல்வர் குற்றச்சாட்டு
மபி மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வாய்ப்புகள் அவரது சொந்தக் கட்சித் தலைவர்களாலேயே சீர்குலைக்கப்பட்டன. அவர்களில் பலர் அந்த இடத்தைக் குறிவைத்திருந்தனர் என்று மபி பா.ஜ முதல்வர் மோகன்யாதவ் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறுகையில்,’ மீனாட்சி நடராஜனின் படிவத்தில் காங்கிரஸ் கட்சியினர் வேண்டுமென்றே சதித்திட்டத்துடன் தவறுகளை செய்தனர். பல காங்கிரஸ் கட்சியினர் இந்த இடத்தின் மீது கண் வைத்திருந்தனர். அந்த இடம் கிடைக்காதபோது, ​​காங்கிரஸ் உறுப்பினர்களே மீனாட்சி நடராஜனின் வாய்ப்பைக் கெடுத்தனர். இது ஒரு சதி. காங்கிரஸ் தனது சொந்தத் தவறுகளை ஆராய வேண்டும். வேட்பாளரின் பெயரை அறிவிப்பதற்கு முன்பாகவே அவரது பின்னணியை ஆய்வு செய்திருக்க வேண்டும்’ என்றார்.

Tags : Meenakshi Natarajan ,Congress ,Election Commission ,New Delhi ,Rajya Sabha elections ,Rajya Sabha ,Madhya Pradesh ,
× RELATED 9 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிந்தது;...