திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாநகராட்சியில் 35வது வார்டு பாஜ கவுன்சிலராக இருப்பவர் சுகதன். இவர் மீது ஏற்கனவே அடிதடி, கொலை முயற்சி, மணல் கடத்தல் உள்பட ஏராளமான கிரிமினல் வழக்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரம் வட்டியூர்க்காவு அருகே ஒரு கோயில் விழாவில் மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் சரமாரியாக தாக்கப்பட்டனர். இதுதொடர்பாக கவுன்சிலர் சுகதன் மீது வட்டியூர்க்காவு போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே கவுன்சிலர் சுகதன் முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த இரு தினங்களுக்கு முன் இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து கவுன்சிலர் சுகதனை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இவர் தன்னுடைய வீட்டில் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து வட்டியூர்க்காவு இன்ஸ்பெக்டர் விபின் தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர்.ஆனால் அங்கு திரண்டிருந்த பாஜ தொண்டர்கள் சுகதனை கைது செய்யவிடாமல் கடும் ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள் போலீசாரை தாக்கவும் முயன்றனர். இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விபின் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அனைவரையும் கலைத்தார். இதன்பிறகு போலீசார் சுகதனை கைது செய்து கொண்டு சென்றனர். கவுன்சிலர் சுகதனை போலீசார் திருவனந்தபுரம் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
