பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் கணபதிபாளையம் பகுதிக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் கே.ராம்குமார் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க நேற்று முன்தினம் வருகை தந்தார். எம்எல்ஏக்கு தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சி முடிந்த பின்னர் தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தொண்டர் அணி ஒன்றிய இணை அமைப்பாளர் கார்த்திக் பீர் பாட்டில் வாங்கி வந்து குடித்தார்.
அப்போது, அங்கு வந்த மற்றொரு தொண்டர் அஜித்குமார், கார்த்திக் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை வாங்கி குடித்தார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த அஜித்குமார் உன் படத்தை என்னிடம் ஓட்டாதே என கூறி பீர் பாட்டிலால் கார்த்திக் தலையில் பலமாக தாக்கி உள்ளார். இதில், பலத்த காயமடைந்த கார்த்திக் தலையில் ரத்தம் ஒழுகிய நிலையில் பல்லடம் காவல் நிலையம் வந்து போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து பல்லடம் போலீசார் கார்த்திக்கை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
