×

அனிதா ராதாகிருஷ்ணனை அடையாளம் தெரியாதவர்களுடன் ஒப்பிடுவதா? மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதா? துரை வைகோவிற்கு கவிஞர் காசிமுத்துமாணிக்கம் கண்டனம்

சென்னை: அனிதா ராதாகிருஷ்ணனை அடையாளம் தெரியாதவர்களுடன் ஒப்பிடுவதா?, மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதா?, கூவம் ஆறும் காவிரி நீரும் ஒன்றாகுமா? என்று துரை வைகோவிற்கு திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: 2006ல் திமுக ஆட்சி அமைப்பதற்கு நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு, கலைஞர் தன்னை எதிர்த்து நின்றவர்களிடம் ஆதரவு கேட்டு, ராஜினாமா செய்து வாருங்கள் என யாரையும் அழைக்கவில்லை.

2006ல் 96 சீட்டு திமுகவிடமும் அதன் தோழமையிடம் 72 வாக்கும் இருந்ததால், கலைஞரை முதல்வர் என்று சொல்லாமல் வெற்றி பெற்ற எந்த வேட்பாளரையும் கலைஞர் ஆதரவு வாக்கு கேட்கவில்லை. 1999ல் மூன்றாண்டுகளுக்கு பின் வரலாற்று மோதலில் அனிதா வெளியே வந்து தேர்தலில் நின்று திமுகவில் சேர்ந்து வெற்றி பெற்றார். தரணி போற்ற வாழ்ந்த அனிதாவை, தரையில் ஜெயலலிதா வீசி எறிந்த காலத்தில், திமுக அனிதாவை வாரி அணைத்துக் கொண்டது.

அதேபோல் மூன்றாண்டுக்கு பின் பிரிந்து வந்த தேனி ராமகிருஷ்ணனையும் திமுக சேர்த்துக் கொண்டதே தவிர, அது குதிரை பேரத்தில் அல்ல, தனது ஆட்சியை காப்பாற்றிட எவர் காலில் வீழ்ந்தாவது, பேரம் பேசி தனது அணிக்கு கொத்துக் கொத்தாக அழைத்துச் செல்வதற்கு பெயர் தான் குதிரை பேரம், துரதிருஷ்டவசமாக திமுக சின்னத்தில் போட்டியிட்டதாக மதிமுகவின் துரை வைகோ கூறுகிறார்.

ஏன் 2011 மாதிரி தனியே நின்று ‘0’ வாங்கிட வேண்டியதுதானே. யார் தடுத்தது?. 2026ல் உதயசூரியனில் நின்றது உங்கள் துரதிஷ்டவசம் என்றால் 2025ல் மீண்டும் துரோகிகளுக்கு ராஜ்ய சபா சீட் கொடுக்காதது எங்கள் அதிர்ஷ்டமா. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்தது கட்சி தாவல் சட்டத்தில் வராது, என துரை வைகோ குறைக்கிறார். கொரடாவின் உத்தரவை மீறி வாக்களித்தால் எப்படி கட்சி தாவல் தடை சட்டத்தில் வராமல் இருக்கும்.

உங்களின் அன்பு முறியக் கூடாது என்பதற்காக உங்களால் நிராகரிக்கப்பட்டு மதிமுகவிலிருந்து விலகி வெளியே வந்த மல்லை சத்தியா, வல்லம் பஷீர், திருப்பூர் துரைசாமி, கழக குமார் போன்றோரை திமுகவில் தேர்தல் நேரத்தில் சேர்க்காமல் இருந்தோமே அதைக்கூட நினைத்துப் பார்க்காமல் நன்றி மறந்து பேசுகிறீர்களே. 2011ல், 2016ல் மதிமுக ஒன்றும் இல்லை என்கிற காலம் போய், 2021ல் 4 எம்எல்ஏ, 2026ல் 2 எம்எல்ஏ பெற்று தந்தோம்.

மகனை எதிர்த்தது தான் ராமதாசுக்கு இழப்பு, மகனை ஆதரித்து போவதால் அண்ணன் வைகோவுக்கு இழப்பு. கொடுத்த காசுக்கு மேல் கூவ வேண்டாம் துரை வைகோ. சலுகை வேண்டுமா தவெகவை பாராட்டுங்கள். திமுகவை திட்டாதீர்கள் துரை வைகோ.

மேகதாது அணை பற்றியோ, வள்ளுவருக்கு காவி சாயம் பூசியது பற்றிய கண்டனமோ, 6 சிலிண்டர் பற்றியோ பேசவேண்டாம். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து, மின்வெட்டு குறித்து, பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை பற்றியோ பேசவேண்டாம். அதிகம் படித்த மூஞ்சூறு கழனிப்பானையில் விழவேண்டாம் என, எனது அன்பான கண்டனத்தை துரை வைகோவிற்கு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Anita Radakrishnan ,Poet Kashimutumanickam ,Durai Vaygo ,Chennai ,Anita Radhakrishnan ,Kowam ,Aram Aram Khaviri ,Dimuka Business Team ,Gazi Muthumanickam ,Durai Vigo ,
× RELATED தவெக எம்எல்ஏ வெற்றி கொண்டாட்டத்தில்...