- இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
- முன்னாள் அமைச்சர்
- ஆவடி நாசர்
- சென்னை
- திருவள்ளூர் மத்திய மாவட்டம்
- முன்னாள்
- அமைச்சர்
- ஆவாடி சா.
- எம். நாசர்
- பாக்ரிட்
- திமுகா ஊராட்சி
சென்னை: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிறுபான்மை இஸ்லாமிய சமுதாய மக்களின் காவல் அரணாக விளங்கிய திமுக அரசு இருந்தவரையில் எவ்வித தடையும் இன்றி நடைபெற்று வந்த பக்ரீத் திருநாள் குர்பானி வழங்கும் நிகழ்வுகளுக்கு, முதன்முறையாக தவெக ஆட்சியில் இடையூறு ஏற்பட்டு, மக்களின் மனத்தில் அழியா வடுவாக மாறியுள்ளது.
இந்நிலையில், திருச்சிக்குச் சென்ற முதல்வர் விஜய், மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருப்பேன், என்று வெற்றுக் கோஷம் எழுப்பியுள்ளார். காட்சிகளில் நடிப்பதும், ஆட்சி செய்வதும் வெவ்வேறானவை என்பதையே அறியாமல் இருக்கும் அவர், பக்ரீத் தினத்தில் தனிக்குழுக்கள் அமைத்து குர்பானிக்கு தடை ஏற்படுத்தியுள்ளார். போலீசை வைத்து உருட்டி மிரட்டி அந்த திருநாளை சோக நாளாக்கிய முதல்வர், ஆட்சி பொறுப்பேற்ற சில நாட்களிலேயே சிறுபான்மையினரின் சுதந்திரத்தில் கைவைத்து விளையாடி விட்டார், என ஒவ்வொரு சிறுபான்மையினரின் மனதிலும் வேதனை தீயாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் இப்போது அடுத்தகட்டமாக, நீதிமன்றத்தில் அரசின் சார்பில் பொது இடங்களில் குர்பானி கொடுப்பதற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவைக் கவனமாகவும், கண்ணும் கருத்துமாகவும் நிறைவேற்றியுள்ளோம், எனத் தீர்ப்பை நிறைவேற்றியதற்கான அறிக்கையையும் தாக்கல் செய்திருக்கிறது. சிறுபான்மையினர் நலனில் பதவியேற்ற சில நாட்களில் தவெக அரசின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்து விட்டது.
“பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது” என்பது போல் முதல்வரின் இரட்டை வேடமும் வெளியே வந்து விட்டது. ஐ.யூ.எம்.எல் சார்பில் தவெக அரசில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ஷாஜஹான் அந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப் போகிறோம் என்கிறார். போலீசை வைத்து குர்பானி நடத்த விடாமல் அடக்குமுறை செய்த போது இந்த அமைச்சர் எங்கே உறங்கிக் கொண்டிருந்தார்.
ஏன் முதல்வரை உடனே சென்று சந்தித்து இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கூறவில்லை, சிறுபான்மையினர் மீது போலீஸ் அடக்குமுறையை கைவிடுங்கள் என ஏன் கோரவில்லை. ஏற்கனவே கிறித்தவ மக்களுக்கு எதிரான எப்.சி.ஆர்.ஏ.வுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட கூறாமல், ஒரு கண்டனத்தைக் கூட விடுக்காமல் அமைதி காத்தவர் தான் இதே முதல்வர் விஜய்.
குர்பானி விவகாரத்தில் நீதிமன்றத்தில் “தீர்ப்பை நிறைவேற்றி விட்டோம்” எனவும், “தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு” எனவும் தவெக அரசும், அதன் முதல்வர் விஜய்யும் போடும் இரட்டை வேடத்திற்கு ஐ.யூ.எம்.எல். என்ன பதில் சொல்லப் போகிறது. இசுலாமிய மக்களின் இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்குமா. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
