மீனம்பாக்கம், மே 28: சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெருமளவு போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்தநிலையில் தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அந்த விமானத்தில் வந்திருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரை நிறுத்தி விசாரித்தனர்.
அதில் அந்த பயணி கேரளாவில் இருந்து சுற்றுலா விசாவில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தாய்லாந்து நாட்டிற்கு சென்று, தற்போது சென்னைக்கு திரும்பி வந்தது தெரியவந்தது. மேலும் அந்த வாலிபர் அதிகாரிகளின் கேள்விக்கு முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனால் அதிகாரிகள் அவரது உடமைகளை பரிசோதித்தனர். அப்போது அவருடைய சூட்கேசுக்குள் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் பாக்கெட்டுகள், சாக்லேட் பார்சல்கள் ஏராளமாக இருந்தன. அந்த பார்சல்களுக்கு இடையே 10 பிளாஸ்டிக் பார்சல்கள் இருந்தன. அந்தப் பார்சல்களை பிரித்து பார்த்தபோது, அதனுள் உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர்.
அந்தப் பார்சல்களில் மொத்தம் இருந்த 10 கிலோ, 114 கிராம் உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.10 கோடி என்று கூறப்படுகிறது. இதையடுத்து சுங்க அதிகாரிகள், கேரள பயணியை போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் சுங்கத்துறை சட்டத்தில் கைது செய்தனர். அதோடு அந்த பயணியிடம் மேலும் விசாரணை நடத்தியபோது, இந்த போதைப் பொருட்கள் அடங்கிய பார்சல்களை பாங்காக் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, மர்ம ஆசாமிகள் 2 பேர் கொடுத்ததாகவும், சென்னை விமான நிலையத்தில் இந்த பார்சல்களை எங்களுடைய நண்பர்கள் இருவர் வாங்கிக்கொண்டு, ரூ.1 லட்சம் பணம் கொடுப்பார்கள் என்று ஆசை காட்டியதால் பண ஆசையில் இந்த கடத்தலில் ஈடுபட்டதாக பிடிபட்ட பயணி தெரிவித்தார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட கேரள இளைஞரை அதிகாரிகள் சுங்கத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ரூ.10 கோடி மதிப்புடைய ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் வாங்க இருந்த மர்ம ஆசாமிகள் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
