×

வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் வருவாய் ஆவணங்களை வழங்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

 

​வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், ஒன்றிய அரசின் ‘உமீத்’ (UMEED) இணையதள ஆவணச் சரிபார்ப்பைக் காரணம் காட்டி, உத்தரப் பிரதேசத்தில் 31,000-க்கும் மேற்பட்ட வக்ஃப் சொத்துக்களின் பதிவுகள் மிக அவசரமாக ரத்து செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினரிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏ.கே.கரீம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியல் மற்றும் அவர்களின் மத ரீதியான உரிமைகளைப் பறிக்கும் உள்நோக்கத்தோடுதான் பாஜக அரசால் இந்த நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

​பல நூற்றாண்டுகளாக முஸ்லிம் சமூகத்தின் வழிபாட்டிலும் பயன்பாட்டிலும் இருந்து வரும் மசூதிகள், தர்காக்கள், கல்வி நிலையங்கள் மற்றும் அடக்கஸ்தலங்கள் போன்ற பாரம்பரிய பயன்பாட்டு வழி வக்ஃப் சொத்துக்களுக்கு (Waqf by user), முறையான டிஜிட்டல் வருவாய்த்துறை ஆவணங்கள் இல்லை என்ற ஒற்றைக் காரணத்திற்காக வக்ஃப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, அரசு நிலங்களாக மாற்றப்படும் அபாயம் உருவாகியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறி வரும் இத்தகைய சிறுபான்மை விரோத, வக்ஃப் சொத்து பறிப்பு நடவடிக்கைகள் போன்றதொரு இக்கட்டான நிலை தமிழகத்தில் உள்ள வக்ஃப் சொத்துக்களுக்கு எக்காலத்திலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தமிழக அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

​ஒன்றிய பாசிச பாஜக அரசின் வக்ஃப் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் (JPC) பரிசீலனையில் இருந்தபோதே, சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும் அந்த மசோதாவிற்கு எதிராகத் தற்போதைய தமிழகத்தின் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது மாநில மாநாட்டிலும், கொள்கை அறிவிப்புகளிலும் மிகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே, வக்ஃப் சட்ட திருத்தத்தைக் கொள்கை ரீதியாக எதிர்க்கும் தார்மீகக் கடமை ஆளும் கட்சிக்கு உண்டு.

​ஆகவே, தமிழகத்தில் உள்ள அனைத்து வக்ஃப் சொத்துக்களையும், குறிப்பாக வருவாய்த்துறை ஆவணங்கள் இல்லாத பாரம்பரிய பயன்பாட்டு வழி அடக்கஸ்தலங்கள், தர்காக்கள் மற்றும் மசூதிகளைக் கண்டறிந்து, அவற்றிற்குரிய பட்டா, வரைபடம் மற்றும் வருவாய் ஆவணங்களை எவ்விதத் தாமதமுமின்றி வழங்க வருவாய்த்துறை மூலம் போர்க்கால அடிப்படையில் அரசு சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறோம்.

​மேலும், தமிழக வக்ஃப் வாரியத்தின் பதிவுகளையும், மாநில வருவாய்த்துறையின் நிலப் பதிவேடுகளையும் முன்கூட்டியே ஒப்பிட்டுப் பார்த்து, அதில் உள்ள தொழில்நுட்ப மற்றும் ஆவண முரண்பாடுகளை அரசு நிர்வாகமே முன்நின்று சரிசெய்ய வேண்டும்.

​எதிர்காலத்தில் ஒன்றிய அரசின் எவ்விதத் தவறான டிஜிட்டல் ஆவணக் கெடுபிடிகளும் தமிழக வக்ஃப் நிலங்களைப் பாதிக்காத வண்ணம், அவற்றுக்கு முழுமையான சட்டப் பாதுகாப்பைத் தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். வக்ஃப் சொத்துக்கள் என்பவை ஏழை, எளிய மக்களின் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்காக முன்னோர்களால் இறைவழியில் அர்ப்பணிக்கப்பட்ட அறக்கட்டளைச் சொத்துக்கள் ஆகும். அவற்றை பாசிச சக்திகளின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாப்பது சமூக நல்லிணக்கத்தை விரும்பும் மக்கள் அரசின் கடமையாகும்.

​எனவே, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் இந்த விவகாரத்தில், முந்தைய திமுக அரசு மேற்கொண்ட சட்ட ரீதியான வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் போன்று, வக்ஃப் சொத்துக்களைப் போர்க்கால அடிப்படையில் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளைத் தவெக அரசும் மேற்கொள்ள வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Tags : Tamil Nadu government ,Waqf ,SDBI Party ,Wakf ,Uttar Pradesh ,Umeed ,
× RELATED காரைக்கால் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!