நன்றி குங்குமம் தோழி
‘‘சக்கர நாற்காலிப் பயணம் என்பது, என் வாழ்வின் சறுக்கலாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு எனது தேவைகளை பூர்த்தி செய்து வருகிறேன். ஒரு ஆசிரியராக, தன்னம்பிக்கை பேச்சாளராக, விளையாட்டு வீராங்கனையாக வலம் வருகிறேன்’’ என்கிறார் முனைவர் ஞானசுந்தரி. ‘‘கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோபாலபுரம் கிராமத்தில் பிறந்தேன். பெற்றோர் இருவரும் விவசாய வேலை பார்க்கிறார்கள்.
என் அக்காவின் உதவியால்தான் இளங்கலை, முதுகலை, எம்.பி.எல். பட்டம் பெற்றேன். வெளி உலக வாழ்க்கையை நோக்கி மிகவும் ஆர்வத்துடனும், என் குடும்பத்தின் பொறுப்பையும் ஏற்று கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பணியில் சேர்ந்தேன். ஒரு கல்லூரிக்குச் செல்லும் போது, நான் சென்ற பேருந்து விபத்திற்குள்ளானது. அதில் எனக்கு முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டது. ஒரு வாரம் தீவிர சிகிச்சைக்குப் பின், நினைவுக்கு திரும்பினேன். அப்போதுதான் தெரிந்தது. முதுகுத் தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்திருப்பதால், அந்த இடத்திலிருந்து எந்த உறுப்புகளும் செயல்படாது. இனி என் வாழ்க்கை முழுதும் சக்கர நாற்காலியில் தான் என்று கூறினார்கள். அதிலிருந்து வெளிவர மறுவாழ்வு மையத்திற்குச் சென்றேன்.
அன்று வரை நான் பார்த்த உலகம் வேறு. இனி பார்க்கப்போகும் உலகம் வேறு. பெற்றோர் நிலை குலைந்து நின்றனர். இயன்முறை மருத்துவரின் அறிவுரையுடன் என்னைப் பற்றி புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். என்னையே நான் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். ஆனால், எல்லாமே புதிதாக இருந்தது. சக்கர நாற்காலியை இயக்குவது முதல் அன்றாட தேவைகளுக்கு கூட ஒருவரின் உதவியை நாடுவது எனக்கு போராட்டமாகவே இருந்தது. எனக்கு உறுதுணையாக என்னை இயல்பு நிலைக்கு மாற்ற முயற்சி செய்த என் குடும்பத்தினருக்கு நான் வாழ வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. பல மாதங்கள் கழித்து வீடு திரும்பினேன்.
என் வீட்டுத் தெரு, ஊரில் சக்கர நாற்காலியில் செல்ல வசதி கிடையாது என்பதால், வீட்டிற்குள்ளேயே முடங்க ஆரம்பித்தேன். என் மாமாதான் சலிக்காமல் என்னை பல இடங்களுக்கு அழைத்து சென்றார். சில சமயம் தூக்கியும் செல்வார். வீட்டில் சும்மா இல்லாமல் டியூசன் எடுத்தேன். நேரம் கிடைக்கும் போது பெயின்டிங் செய்தேன். என்னைப் பார்க்க வந்த நண்பர் என்னிடம் கேட்ட அந்த சில கேள்விகள்தான் என் வாழ்க்கையின் திருப்புமுனையாக மாறியது.
அவரின் உதவியுடன் எனக்காக மாற்றி அமைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தில் வெளிவர ஆரம்பித்தேன். சக்கர நாற்காலி மாரத்தான் போட்டியில் பங்கேற்றேன். அங்கு என்னை போன்ற பலரை சந்தித்தேன். அதுவரை பாரமாக இருந்த என் சக்கர நாற்காலி அன்று முதல் எனக்கு தோழியாக மாறியது. எனக்கான தனிப்பட்ட அனைத்து பாதைகளையும் நானே உருவாக்க ஆரம்பித்தேன். முனைவர் பட்டப் படிப்பை மீண்டும் தொடங்கினேன். ‘முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மனிதர்களின் வாழ்க்கைத் தரம்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் இதனால் பாதிக்கப்பட்டோர் அமைப்பின் உதவியுடன் ஆராய்ச்சிப் பணியை மேற்கொண்டு, 250 முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களோடு உரையாடி, அவர்களின் வாழ்க்கையை பற்றி புரிதல் கொண்டு ஆராய்ச்சிப் புத்தகத்தை சமர்ப்பித்தேன்.
சக்கர நாற்காலிப் பயன்படுத்தும் பல பெண்கள் வெளிவரத் தயங்கி, அவர்களே அவர்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் வீட்டிலேயே அனைத்துத் தேவைகளுக்கும் மற்றவர்கள் உதவியை நாடி இருக்கின்றனர். மறுவாழ்வு பயிற்சி மையங்களில் இலவச பயிற்சி அளித்தாலும், அதைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல், வெளியே வர மறுக்கின்றனர். மாற்றம் நம்மிடம் இருந்துதான் தொடங்க வேண்டும். குடும்பமும், சமூகமும் நாங்கள் வாழ உறுதுணையாக இருக்க வேண்டும். பொது இடங்களான இறைவழிபாட்டுத் தலங்கள், பள்ளி, கல்லூரி, வங்கி, உணவகம், துணிக்கடை, திரையரங்கு, மைதானம் என அனைத்து இடங்களிலும் சக்கர நாற்காலி பயன்படுத்துவோர் சென்று வரும் வகையில் போதிய வசதி அமைத்துத் தரவேண்டும். நான் இப்போது கார் ஓட்டுவதற்கு பயிற்சி எடுத்து, நானாகவே பயணம் செய்து வருகிறேன். மூன்று சக்கர பைக் தயார் செய்து அதிலும் பயணிக்கிறேன்.
எனக்கு விளையாட்டில் ஆர்வம் இருப்பதாலும், என்னுடைய உடல் உறுதுணையாக இருக்க உடற்பயிற்சி அவசியம் என்பதாலும், நான் இறகுப்பந்து விளையாட ஆரம்பித்தேன். மாவட்ட, மாநில அளவில் 2ம் இடம் பிடித்தேன். என்னைப் போன்ற முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் வெளிவர வேண்டும். அவர்களுக்கான தேவையை அவர்களே பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக, என்னால் முடிந்த வரை ஊக்கமளித்து வருகிறேன். பல இடங்களில் எங்களின் தேவைக்காக குரல் கொடுத்து வருகிறேன். அப்படி நான் போட்ட ஒரு சமூக வலைத்தளப் பதிவால் கோவை துணிக்கடைகளில் சாய்வு தளம் அமைத்து, இன்று அங்கு சக்கர நாற்காலி பயன்படுத்துவோர்களுக்கு பணிகளும் வழங்கி இருக்கின்றனர். இதற்காக பெண்கள் உரிமைக்கான உலகப் பேரவை சார்பாக டாக்டர் அப்துல்கலாம் பன்முகத் திறமையாளர் விருது பெற்றேன்.
தண்டுவடம் பாதிப்பு ஏற்பட்ட பின், வாழ்வில் ஒவ்வொரு நாளுமே எனக்கு போராட்டம்தான். என்னைப் பார்ப்பவர்களின் பார்வை மாறுபட்டது. அதுவரை நான் அப்படிப்பட்ட உலகத்தை சந்தித்தது கிடையாது. அடிபட்ட இடத்திற்குக் கீழ் உணர்வுகள் இன்றி சக்கர நாற்காலியை உபயோகிக்க தெரியாமல், ஒருவர் உதவியுடன் ஓர் இடத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. என்னைப்போல் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்கள் அனைவரும் சக்கர நாற்காலியை பயன்படுத்துகிறார்கள். பல நிறுவனங்கள் எங்களை பணி அமர்த்தவும் முன்வந்துள்ளனர். இருப்பினும் போதிய கழிவறை, அலுவலக வசதி, ஊதிய உயர்வு இவை அனைத்தும் மிகவும் குறைவாகவே உள்ளது. அதனாலேயே பலர் வீட்டிலிருந்தபடி சிறு தொழில் செய்யவும் விரும்புகிறார்கள்.
வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலி என்பதால், அவர்களை ஏற்க மறுத்து, பலர் விடுதிகளிலும், காப்பகங்களிலும் சேர்ந்து விடுகின்றனர். மறுவாழ்வுப் பயிற்சி பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. இன்று ஐ.ஐ.டி. போன்ற நிறுவனங்கள் பல முன்னெடுப்புகள் செய்து பலரது வாழ்வை மாற்றி உள்ளனர். விளையாட்டு, வேலை, சுய தொழில், அரசுப் பணி என பல்வேறு இடங்களில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் பலர் பணிபுரிந்து வருகின்றனர். இன்று நான் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக என் வாழ்வை மாற்றி அமைத்து இருக்கிறேன்’’ என்றார் ஞானசுந்தரி.
பொ.ஜெயச்சந்திரன்
