×

நியூஸ் பைட்ஸ்

நன்றி குங்குமம் தோழி

வைரல் நூலகம்

நாகலாந்தின் கிக்வேமா கிராமத்தில் இருக்கும் நூலகம் சற்றே வித்தியாசமானது. இந்த நூலகத்துக்கு பூட்டுக்கள் இல்லை; பதிவேடுகள் இல்லை; வழக்கமான கட்டுப்பாடுகள் எதுவுமே இல்லை. அனைவருக்குமாக எப்போதுமே திறந்திருக்கும் சமூக நூலகம் இது. இந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை யார் வேண்டுமானாலும் இலவசமாக எடுக்கலாம்; எப்போது வேண்டுமானாலும் திருப்பித் தரலாம். எல்லாமே நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குகிறது. கடந்த 2021ம் வருடம், ஜூலை மாதம் அகோ மற்றும் தேபுக்கெலி என்ற இரு சகோதரர்களால் இந்த நூலகம் நிறுவப்பட்டது. ஆனால், சமீபத்தில் இந்நூலகத்தைப் பற்றி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட, வைரலாகிவிட்டது இந்த நூலகம்.

65 வயது ஓட்டப்பந்தய வீரர்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசியாபாத்தைச் சேர்ந்தவர், மஹிபால் சிங். ஓட்டப்பந்தயத்தில் தேசிய அளவிலான சாதனைகள், ஏராளமான கோப்பைகள் மற்றும் பதக்கங்களுடன் வலம் வருகிறார். தவிர, 150க்கும் மேலான மாரத்தான் ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டிருக்கிறார். இப்போது அவரது வயது 65. கடந்த 2023-ம் வருடம் துபாயில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 1500 மீட்டர், 5000 மீட்டர், 10000 மீட்டர் என மூன்று விதமான ஓட்டப்பந்தயங்கள் நடந்தன. மூன்று போட்டிகளிலும் கலந்து கொண்டு முதல் பரிசை தன்வசமாக்கினார் மஹிபால். இன்று அவரது வீட்டில் ஓட்டப்பந்தயங்களுக்காக வென்ற 200 பதக்கங்களும், 50 கோப்பைகளும் உள்ளன.

அதிகரிக்கும் வாய் புற்றுநோய்

இந்தியாவின் பெரும் சுகாதார நெருக்கடிகளில் ஒன்றாகவும், உயிரை அச்சுறுத்தும் நோயாகவும் மாறியிருக்கிறது, வாய் புற்றுநோய். ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் 77 ஆயிரம் முதல் 1.13 லட்சம் பேர் வரை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்; 52,000 பேர் மரணமடைகின்றனர். அதாவது, இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரமும் வாய் புற்றுநோயால் 5 பேர் இறக்கின்றனர். மட்டுமல்ல, இந்திய ஆண்கள் மத்தியில் பொதுவாக இருக்கும் புற்றுநோயும் இதுதான். இப்போது வருடந்தோறும் 1.20 சதவீதம் அளவுக்கு உயர்ந்து வருகிறது, வாய் புற்றுநோய் என்று எச்சரிக்கை செய்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்.

45 லட்சம் ஃபாலோயர்களை அள்ளிய சிறுவன்

இன்ஸ்டாகிராமையே ஒரு கலக்கு கலக்கிக்கொண்டிருக்கிறான், கலுபுடிக் என்ற சிறுவன். அவனது வயது 15. இத்தனைக்கும் கடந்த மார்ச் மாதத்தின் இறுதியில்தான் ‘கலுபுடிக்ஸ்’ என்ற இன்ஸ்டா
கிராம் பக்கத்தை ஆரம்பித்தான். இதுவரை வெறும் 23 பதிவுகளை மட்டுமே பதிவு செய்திருக்கிறான். ஒவ்வொரு பதிவும் மில்லியன் கணக்கில் பார்வைகளையும், மில்லியன் கணக்கில் லைக்குகளையும் குவித்திருக்கிறது.

கலுபுடிக்கின் ஃபாலோயர்களின் எண்ணிக்கை 45 லட்சத்தைத் தாண்டிவிட்டது. இதில் பிரபலங்களும் அடக்கம் என்பதுதான் ஹைலைட். பொதுவாக மக்கள் மத்தியில் வெகு பிரபலமான நடிகரோ அல்லது விளையாட்டு வீரரோ இன்ஸ்டாகிராமில் நுழையும்போதே லட்சக்கணக்கில் ஃபாலோயர்கள் கிடைப்பார்கள். ஆனால், எந்த வகையிலும் பிரபலமல்லாத ஒரு சிறுவனுக்குக் குறைந்த நாட்களிலேயே இவ்வளவு ஃபாலோயர்கள் கிடைத்திருப்பது சமூக வலைத்தளங்களில் முக்கிய பேசுப் பொருளாக மாறியிருக்கிறது.

இந்தியாவின் அதிக வயதான இயக்குநர்

இந்திய திரைப்பட இயக்குநர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட ஓர் ஆளுமை, சிங்கீதம் சீனிவாச ராவ். தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி என பல்வேறு மொழிகளில், பல்வேறு வகைமைகளில் அறுபது படங்களை இயக்கியவர் இவர். இரண்டு தேசிய விருதுகள், ஐந்து நந்தி விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளையும் தன்வசமாக்கியிருக்கிறார்.

இப்போது அவரது வயது 94. சமீபத்தில் இசையையும், ஃபேன்டஸியையும் மையமாக வைத்து ‘சிங்-கீதம்’ என்ற தெலுங்குப் படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார் சிங்கீதம். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடையை போகிறது. வரும் ஜூனில் படம் வெளியாகிறது. இன்றைய தேதியில் இந்தியாவின் அதிக வயதான திரைப்பட இயக்குநர் இவர்தான்.

தொகுப்பு: த.சக்திவேல்

Tags : Saffron Companion Viral Library ,Kikwema ,Nagaland ,
× RELATED சக்கர நாற்காலியின் சரித்திர நாயகி