×

மூங்கிலின் ஆராய்ச்சி மையத்தை உருவாக்குவேன்!

நன்றி குங்குமம் தோழி

‘ஏழைகளின் மரம்’ எனப் போற்றப்படும் மூங்கில் மரங்கள் விரைவாக வளரக்கூடியவை. ஒரே நாளில் மூன்றடி வரை வளரும். 40 முதல் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும். மூங்கிலிலிருந்து கிடைக்கும் அரிசி மற்றும் மூங்கில் தளிரும் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் உணவாக கருதப்படுகிறது. இரும்பை விட வலிமையாக இருக்கும் மூங்கில் பூமியில் எளிதில் மட்கக் கூடியது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நெகிழிப் பொருட்களுக்கு மாற்றாக மூங்கிலால் ஆன வீட்டு உபயோகப் பொருட்களை பயன்படுத்தலாம் என அறிவுறுத்துகிறார்கள். நெகிழியால் ஆன பொருட்களை பயன்படுத்தும் போது அவை மெல்ல கரைந்து உடலில் சேர்ந்து மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. ஆனால், மூங்கில் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு பெற்றிருப்பதால் நல்வாழ்விற்கு துணை புரிகிறது.

இவ்வாறு மூங்கிலின் சிறப்புகளை சொல்லிக் கொண்டே போகலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த மூங்கிலைக் கொண்டு அழகான மற்றும் பயன்பாடு மிக்க பொருட்களை ஆன்லைனில்
விற்பனை செய்து வருகிறார் ‘அரோலா’ மூங்கில் பொருட்களின் நிறுவனர் தர்ஷனா செல்வராஜ் தம்பதியினர். சிறந்த ஸ்டாட் அப் நிறுவனர் என்று இரண்டு முறையும், மூன்று முறை சிறந்த பெண் தொழிற்முனைவோருக்கான விருதுகளும் பெற்றுள்ளார்.

“சொந்த ஊர் மதுரை. நான் MBA HR மேனேஜ்மென்ட் படிச்சேன். எங்களுடையது காதல் திருமணம். வாழ்க்கையை பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கினோம். நானும் கணவரும் ‘எக்கோ பிரண்ட்லி’ என்ற பெயரில் டூரிசம் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தோம். அதில் இயற்கை சார்ந்த வாழ்விடங்கள், டிரக்கிங், மூங்கில் குடிசை போன்றவற்றைக் கொண்டு வந்தோம். நாங்கள் எங்கள் சுற்றுலா மேலாண்மையில் மேற்குத் தொடர்ச்சி மலை பிரதேசங்களைதான் கவனித்து வந்தோம். அப்போது மலைவாழ் மக்களுடன் தொடர்பு கிடைத்தது. அவர்கள் வாழ்க்கை முறையில் மூங்கில் மிக முக்கிய பொறுப்பினை பெற்றிருந்தது. மூங்கிலாலான பொருட்களை அதிகம் பயன்படுத்தி வந்தார்கள். கொரோனா பாதிப்பால் சுற்றுலா மேலாண்மையை தொடர முடியவில்லை. அப்போதுதான் மூங்கில் பொருட்களை உற்பத்தி செய்யலாம் என்ற எண்ணம் வந்தது என்றவர், ‘அரோலா’ உருவானதைப் பற்றி விவரிக்கிறார்.

‘‘நாங்க மேற்குத் தொடர்ச்சி மலைச் சார்ந்த கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளிலிருந்து மூங்கில் வாங்கி மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்களிடம் கொடுத்து கூடைகள், பாய்கள், திரைச் சீலைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள் போன்றவற்றை செய்து அதனை விற்பனை செய்ய துவங்கினோம். கூடைகள், பாய்கள் போன்றவற்றை கையால் பின்ன முடியும். ஆனால், வாட்டர் பாட்டில், கப் போன்றவற்றை இயந்திரம் மூலம்தான் உற்பத்தி செய்ய முடியும். அதற்காக மதுரையில் தனிப்பட்ட உற்பத்தி மையத்தினை அமைத்தோம். எல்லோருக்கும் சிறந்த முறையில் பயிற்சி கொடுத்து பணி அமர்த்தி உள்ளோம்.

கணவர் உற்பத்தி யூனிட்டை பார்த்துக்கொள்கிறார். நான் மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் பகுதியை பார்த்துக் கொள்கிறேன்’’ என்றவர், எண்பதுக்கும் மேற்பட்ட மூங்கில் பொருட்களை உற்பத்தி செய்வதாக கூறுகிறார். ‘‘மற்ற தாவரங்களை விட மூங்கில் சிறந்ததாக கருதப்படுவதற்கு காரணம் மூங்கில் இலை மற்றும் தண்டுப் பகுதிகளில் 70 முதல் 90 சதவீதம் சிலிக்கா சத்து உள்ளது. அது நார்ச்சத்து நிறைந்தது.

கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளை வலுவாக்கக் கூடியது. உலகம் முழுவதும் 1500 வகைகளில் வளரக்கூடிய மூங்கில் புல் வகைத் தாவரம். ஆனால், பல மடங்கு உடல் வலிமையை தரக்
கூடியது. பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு தான் நாங்க மூங்கில் பொருட்களை தயாரிக்க தொடங்கினோம். அதில் பலரும் விரும்பி பெறுவது ‘மூங்கில் டீ’. இதனை இளம் மூங்கில் இலைகளைக் கொண்டு தயாரிக்கிறோம். காஃபின் இல்லாத சத்துமிக்க மூலிகை தேநீர் ஆகும். இதனை பருகுவதால், உடலுக்கு எதிர்ப்பு சக்தியினை அளிக்கும். மேலும், சரும ஆரோக்கியம், முடி வளர்ச்சி, எலும்பு வலுவூட்டல் மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாசப் பிரச்னைகளுக்கும் இது சிறந்த நிவாரணியாக கருதப்படுகிறது. மூங்கிலால் ஆன தண்ணீர் பாட்டிலையும் பலர் விரும்புகிறார்கள்.

மூங்கிலை பொறுத்தவரை சில நாட்களில் கறுப்பு பாசி போல் படியும். அதற்காக ஜாதிக்காய், வேப்பிலை போட்டு கொதிக்க வைத்து அதிலுள்ள நுண்கிருமிகளை அழித்து விடுவோம். எந்தவித ரசாயனமும் பயன்படுத்துவதில்லை என்பதால், 6 முதல் 8 மணி நேரம் வரை சாதாரண தண்ணீர் மற்றும் சூடான நீர் வைத்து பருகலாம். நாங்கள் தயாரித்துள்ள கப்களில் சூடான தண்ணீர் மற்றும் பானங்கள் ஊற்றினால் வெளியில் சூடு தெரியாது’’ என்றவர், ‘நான் முதல்வன்’ என்ற அரசு சார்ந்த பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக வேலை பார்த்து வருகிறார்.

‘‘தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்ட பயிற்சியில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் என 21 நாட்கள் பயிற்சி அளிக்கிறோம். பயிற்சி முடித்தவர்களுக்கு எங்கள் நிறுவனத்திலேயே வேலைவாய்ப்பை வழங்குகிறோம். தனிப்பட்ட முறையிலும் இலவச பயிற்சிகளையும் வழங்கி வருகிறோம். இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலோர் ‘வொயிட் காலர்’ வேலையையே விரும்புகிறார்கள். சூழல் சார்ந்த பணிகள் மற்றும் பயிற்சிகளுக்கு ஆர்வம் காட்டுவதில்லை.

எங்களின் அடுத்த முயற்சியாக கட்டட துறையில் இறங்கி இருக்கிறோம். மூங்கில் கொண்டு வீடுகளை கட்டித் தருகிறோம். தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நாங்கள் அமைத்த மூங்கில் இல்லம் நல்ல பெயரை வாங்கித் தந்துள்ளது. அதைத் தொடர்ந்து இரண்டு பிராஜட்ஸ் கிடைத்தன. நானும் என் கணவரும் சேர்ந்துதான் ஐடியாக்களை உருவாக்குவோம். அதனை எங்களின் 10 நபர்கள் கொண்ட குழு மூலம் செய்து முடிப்போம். மூங்கில்களை வெளியே வாங்கினாலும், எங்க அலுவலகத்திலும் மூங்கில் மரக்கன்றுகளை வளர்த்து வருகிறோம்.

ஐந்து வருடங்கள் கழித்துதான் அறுவடை செய்ய முடியும். அதே போல் நாம் ஒரு தொழிலில் குறைந்தபட்சம் ஐந்து வருடம் நிலைத்திருந்தால்தான் அந்த தொழில் நிரந்தரமாகும். அதற்குள் எங்களின் யூனிட்டை மூங்கில் தொடர்பான ஆராய்ச்சி மையமாக மாற்ற வேண்டும் என்பது என்னுடைய ஆசை. எங்களுக்கு வளர்ச்சியும் அடையாளமும் தந்த மூங்கில் பொருட்களின் பயன்பாட்டையும் முக்கியத்துவத்தையும் எல்லோரும் அறிய பல வகைகளில் பாடுபடுகிறோம்’’ என்கிறார்கள் தர்ஷனா செல்வராஜ் தம்பதியினர்.

தொகுப்பு: கலைச்செல்வி

 

Tags :
× RELATED சக்கர நாற்காலியின் சரித்திர நாயகி