நன்றி குங்குமம் தோழி
‘‘இந்தியாவில் உள்ள முதியவர்களில் பத்தில் நான்கு பேர் தனிமையில் வாழ்ந்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. உலகளாவிய ஆய்வுகள் இது 20% முதல் 40% வரை இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. புகைப்பிடித்தல் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றிற்கு இணையாக, நாள்பட்ட தனிமை உணர்வும் ஒரு முக்கிய காரணம் என உலக சுகாதார நிறுவனம் இப்போது தரவரிசைப்படுத்தியுள்ளது’’ என்று கூறுகிறார் முதியோர் நல முதுநிலை நிபுணரான டாக்டர் வசந்த் கார்த்திகேயன்.
‘‘தங்களை யாரும் கவனிப்பதில்லை. யாருக்கும் நாங்கள் முக்கியமில்லை என்ற உணர்வு, ஒரு நாளைக்கு பதினைந்து சிகரெட்டுகளை புகைப்பதற்குச் சமம். இந்த உணர்வு குறிப்பாக முதியவர்களின் நலத்தை அன்றாடம் பாதிக்கிறது. இந்த உணர்வு அவர்களை இறப்பிற்கு கொண்டு செல்கிறது. தனியாக இருப்பது என்பது, உடல்சார்ந்த ஒரு நிலை. தனிமை என்பது, உணர்வு சார்ந்த நிலை.
இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் தனியாக வசிக்கும் ஒரு முதியவர், நண்பர்களைச் சந்திப்பதன் மூலமும், தினமும் கோயிலுக்குச் செல்வதன் மூலமும், அர்த்தமுள்ள தொலைபேசி உரையாடல்கள் மூலமும் மிகவும் மகிழ்ச்சியாகவும், மனநிறைவோடும் இருக்க முடியும். ஆனால், ஒன்பது பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும் ஒரு பாட்டி, வீடே ஆட்களால் நிறைந்திருந்தாலும், யாரும் தன்னை கண்டு கொள்வதில்லை, அக்கறை காட்டுவதில்லை என்று தனிமை உணர்வால் வருந்தி தவிக்கவும் செய்கிறார்கள். நமக்கிருக்கும் உறவுகளுக்கும், நமக்குத் தேவைப்படும் உறவுகளுக்கும் இடையிலான இடைவெளியே தனிமை. இன்றைய நகர்ப்புற இந்திய வீடுகளில், அந்த இடைவெளி வேகமாக விரிவடைந்து கொண்டே வருகிறது’’ என்றவர், இதனால் ஏன் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை விவரித்தார்.
‘‘70 வயதைக் கடந்த தம்பதியினர், அவர்களின் இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். வாரம் தவறாமல் ஒருமுறை வீடியோ அழைப்பில் பேசுவார்கள். மாதம் ஒருமுறை வாட்ஸ்அப்பில் பேரக் குழந்தைகளின் புகைப்படங்கள் வரும். தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைக்கு இந்தியாவிற்கு வந்து செல்வார்கள். வெளியே இருந்து பார்க்கும்போது, இது ஒரு நவீன, வெற்றிகரமான இந்தியக் குடும்பமாகவே தோன்றும்.
ஆனால், பணி ஓய்வு பெற்ற இரண்டே ஆண்டுகளில் இவரின் தந்தைக்கு கடுமையான மன அழுத்தமும், சோர்வும் ஏற்பட்டது. எல்லாவற்றையும் தனியாக, ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக சமாளித்து வந்த அவரது மனைவிக்கு, நினைவாற்றல் குறைபாடு ஏற்பட்டது. அந்தப் பிரச்னை முற்றிய பிறகுதான் மற்றவர்களின் கவனத்திற்கு வந்தது. பிள்ளைகளிடம் ேபசிய போது, அவர்கள் வாரம் தவறாமல் பேசுவதாகவும், இது எவ்வாறு நடந்தது என்று வினவினார்கள்.
பெற்றோர் பொதுவாக தங்களின் உண்மை நிலையினை பிள்ளைகளிடம் சொல்வதில்லை. அவர்கள் நன்றாக இருப்பது போல வெளியே காட்டிக்கொள்கிறார்கள். தங்களை ஒரு சுமையாக பிள்ளைகள் நினைக்க அவர்கள் விரும்புவதில்லை. பிள்ளைகளின் பணிகளுக்கு ஒரு இடையூறாக இருக்கவும், தாங்கள் பலவீனமானவர்கள் என்று காட்டிக்கொள்ளவும் அவர்கள் விரும்புவதில்லை.
திடீரென்று ஒருநாள் அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமாகும் போதுதான், குடும்பத்தினரால் புரிந்துகொள்ள முடிகிறது. முந்தைய தலைமுறைகளை விட, இந்தத் தலைமுறையினருக்கு முதுமை மிகவும் கடினமானதாக மாற பல காரணங்களை குறிப்பிடலாம்.
*கூட்டுக் குடும்ப வாழக்கை முறை குறைந்துவிட்டது. சிறிய நகரங்களில் கூட இப்போது தனிக் குடித்தனங்கள் இயல்பான விஷயமாக மாறிவிட்டது.
*பிள்ளைகள் பணிக்காக வெகுதூரம் செல்வதுடன், நீண்டகாலத்திற்கு பெற்றோர்களை விட்டு தள்ளியிருக்கிறார்கள்.
*பணி ஓய்வு, குறிப்பாக ஆண்களுக்கு ஒரே நாளில் அவர்களின் அடையாளம், அன்றாட வழக்கம் மற்றும் நண்பர்களை இழக்க செய்கிறது.
*வாழ்க்கைத் துணையை இழந்து வாழும் போது அவர்களின் சமூகப் பங்கேற்பை வெகுவாகக் குறைக்கிறது. குறிப்பாக பெண்கள் இந்த சூழலை சந்திக்கிறார்கள்.
*வாட்ஸ்அப் குழுக்கள், வீடியோ அழைப்புகள், கியூஆர் (QR) பேமென்ட்டுகள், ஆன்லைன் பேங்கிங் போன்றவற்றை பயன்படுத்தத் தெரியாத முதியவர்களும் சத்தமின்றி ஒதுக்கப்படுகிறார்கள்.
தனிமை உணர்வு ஏற்படுத்தும் பாதிப்புகள்!
தனிமை மனதை மட்டும் பாதிக்கும் காரணி என்று சொல்ல முடியாது.
*உணவின் மீதான ஆர்வம் குறையும். தனியாக சமைப்பதும், சாப்பிடுவதும் சலிப்பை ஏற்படுத்துவதால், ஆரோக்கியமாக 70 வயது முதியவர்கள் கூட ஒரு வருடத்தில் எட்டு முதல் பத்து கிலோ வரை எடை குறைய வாய்ப்புள்ளது.
*மருந்துகளை உட்கொள்வதை நிறுத்துவது. ஒரு வேளை மாத்திரை போடவில்லை என்றால் பெரிய பாதிப்பு எல்லாம் ஏற்படாது என்று எண்ணுவார்கள்.
*தூக்கமின்மை. நிம்மதியான தூக்கத்திற்கு பாதுகாப்பான உணர்வு அவசியம். தனிமையால் இதை தொலைத்துவிடுவார்கள்.
*ரத்த அழுத்தமும் மற்றும் இதய நோய் பாதிப்புகள். நாள்பட்ட சமூக மன அழுத்தம் உடலை வெகுவாக பாதிக்கும்.
*உரையாடல், விவாதம், நகைச்சுவை, புதிய தகவல்கள் ஆகியவை மூளைக்கு வேலை தரும் பயிற்சிகள். பயன்படுத்தாத தசை சுருங்குவது போல், மூளையின் திறனை பயன்படுத்தாமல் இருந்தால் குறைந்து விடும். நினைவாற்றல் குறைபாடு ஏற்படும்.
*தனிமையில் வாடும் முதியவர்கள் சீக்கிரமே இயற்கை ஏய்துகிறார்கள்.
கவனிக்க வேண்டிய ஆரம்பகால எச்சரிக்கைகள்!
* தொலைபேசியில் பேசும்போது அவர்களின் குரலில் உற்சாகம் குறைந்து, சலிப்பு எட்டிப் பார்க்கும். உங்களைப் பற்றி அவர்கள் வழக்கமாக கேட்கும் கேள்விகள் நின்று போயிருக்கும்.
* கோயில், நண்பர்கள் சந்திப்பு, காலை நடைப்பயிற்சி, கோலம் போடுவது போன்றவற்றிலிருந்து மெல்ல மெல்ல விலகி இருப்பார்கள்.
*வெகு காலத்திற்கு முன்பு நடந்த அதே பழைய கதைகளையே திரும்பத் திரும்பச் சொல்வார்கள்.
* பசி குறைந்திருக்கும்.
* மாத்திரைகளை எடுத்துக்கொள்ள மறந்துவிடுவார்கள்.
* பெற்ற பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திப்பதை நிறுத்தியிருப்பார்கள்.
பெரியவர்களை வீட்டில் வைத்து பார்த்துக் கொள்ள முடியாது என்று அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பது உதவாது. செல்போனில் தொடர்பு கொண்டு உணர்ச்சிவசமாக பேசுவதை விட தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பத்து நிமிடம் பேசுவது முக்கியம். அந்த நேரத்திற்கு பிள்ளைகள் பேசுவார்கள் என்ற காத்திருப்பு அவர்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும். மனச்சோர்வை குறைக்கும்.
தாங்கள் யாருக்காவது முக்கியமான நபர்கள் என்று உணர வைக்க வேண்டும். இது அவர்களுக்கு சிறந்த மருந்து. குடும்பம் மட்டுமில்லாமல் நண்பர்களின் தொடர்பினை துண்டிக்காமல் இருப்பது. பிள்ளைகளால் நண்பர்களின் இடத்தை ஈடு செய்ய முடியாது. அவர்களின் பழைய நினைவுகளை பகிர்ந்துகொள்ள ஆட்கள் தேவை. முதியோர் சங்கங்கள், பஜனை நடைப்பயிற்சி குழுக்கள் பொழுதுபோக்குக்கான அம்சங்கள் அல்ல. தனிமை உணர்வை அகற்றும் சிகிச்சை வழிமுறைகள்.
முதியவர்களின் மன அழுத்தத்தை, தீவிர மனச்சோர்வையும் பலவீனமாகப் பார்க்கிறோம். இது பலவீனம் அல்ல. ரத்த அழுத்தத்தைப் போலவே இதற்கும் சிகிச்சைகள் உள்ளன. இதை அலட்சியம் செய்வது ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும். முதியோர்களுக்கான வாழ்விட வளாகங்களில் வசிப்பது அவமானம் கிடையாது. வீட்டில் தனியாக வாடுவதை விட, நல்ல முதியோர் பராமரிப்பு மையங்களில் அவர்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கலாம்.
நாம் அனைவரும் மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டியது ஒன்றுதான். தனிமையில் இருப்பவர்களுக்கு துணையாக இருப்பதை விட அவர்கள் தங்களுக்கு மிகவும் முக்கியம் என்ற உணர்வினை வழங்குவதுதான். அவர்கள் சாப்பிடுவதை கவனிக்கவும், எப்படி இருக்கிறார்கள் என்று கேட்கவும், அவர்களை சுமையாக கருதாமல், முழுமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களாக பார்க்க வேண்டும்.முதுமை, வாழ்க்கையின் மற்ற கட்டங்களை போலவே அன்பானதாகவும், மதிக்கப்படுவதாகவும், அக்கறை காட்டப்படுவதாகவும் இருக்க வேண்டும்’’ என்றார் முதுநிலை நிபுணரான டாக்டர் வசந்த் கார்த்திகேயன்.
தொகுப்பு: நிஷா
