×

வறுத்தெடுக்கும் வெயிலை சமாளிப்பது எப்படி?

நன்றி குங்குமம் தோழி

கோடை மற்றும் கத்திரி வெயில் காலம் மட்டுமில்லை பொதுவாக வெயில் காலம் என்றாலே வியர்வை வாடை, சருமப் பிரச்னை, குடல் தொடர்பான தொந்தரவு, கண்எரிச்சல் என்று நம் உடலுக்கு ஏகப்பட்ட பிரச்னைகள் வரிசையாக நூல் பிடிக்க ஆரம்பிக்கும். அதில் இருந்து சமாளித்து நம்மை பாதுகாத்துக் கொள்ள என்னென்ன முறைகளை கடைப்பிடிக்கலாம் என்று கூறுகிறார் உணவு ஆலோசகர் அம்பிகா சேகர்.

வெயில் காலம் என்றாலே எல்லோரும் கையில் குடையுடன் இருப்பதை பார்க்கலாம். வெயிலுக்கு குடை பிடிப்பதும், குளிர் சாதனம் செய்யப்பட்ட அறைகளில் முடங்கிவிடுவதன் மூலம் மட்டும் நம்முடைய உடலை வெயிலினால் ஏற்படும் விளைவில் இருந்து காத்துக் கொள்ள முடியாது. அந்த சமயத்தில் உணவிலும் கவனம் செலுத்துவது அவசியம். நம்முடைய முன்னோர்கள் எந்த காலமாக இருந்தாலும் அதனை உணவு வாயிலாகவே அந்தந்த காலத்தில் ஏற்படும் பிரச்னைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொண்டார்கள். அதை முழுமையாக முடியாவிட்டாலும், அதில் சில விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிப்பது அவசியம்.

வெயிலின் போது நம்முடைய உடலில் இருந்து வியர்வை மூலமாக அதிகளாக நீர்ச்சத்து வெளியேறி விடுகிறது. எனவே, தாகம் எடுக்கிறதோ இல்லையோ அவ்வப்போது தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பது அவசியம்.இவை தவிர்த்து நீர்ச்சத்து மிக்க பழங்களை சாலட்டாகவோ, பழரசமாகவோ அல்லது அப்படியே சாப்பிட வேண்டும். வெயில், பனி, மழை இது போன்ற காலங்களை கணக்கில் எடுத்துக் கொண்டுதான் இயற்கையே அந்தந்த சீசனுக்கு ஏற்ப உணவுகளை அவை உற்பத்தி செய்து வருகிறது. வெயில் காலம் வந்துவிட்டாலே தர்பூசணி, கிர்ணி, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழங்கள் அதிகமாக விளையக்கூடியதாக இயற்கை அமைத்துக் கொண்டிருக்கிறது. இவை தவிர மோர், இளநீர், நுங்கு போன்றவையும் நாம் உணவில் அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். இவை நம்முடைய உடலை மட்டும் இல்லாமல் குடலையும் குளிர்ச்சி அடையச் செய்யும்.

பச்சைக் காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. நீர்ச்சத்துள்ள காய்கறிகளை உணவில் வழக்கத்தை விட கொஞ்சம் கூடுதலாக சேர்த்துக் கொள்ள வேண்டும். சுரைக்காய், பரங்கிக்காய், பீர்க்கங்காய், புடலங்காய், சவ்சவ், வெண்டைக்காய், முள்ளங்கி, நூல்கோல் போன்றவையே அவை. பழச்சாறு சாப்பிடுவதை போலவே கேரட் மற்றும் தக்காளி போன்றவற்றையும் ஜூஸ் போட்டு அருந்தலாம்.

நீர்ச்சத்து குறைவதால் பக்க விளைவாக நம் உடலில் இருந்து சோடியம் அளவும் (உப்பு) கணிசமாக குறைய வாய்ப்பிருக்கிறது. எனவே, இந்த கோடை காலத்தில் மட்டுமே வழக்கத்துக்கு கொஞ்சம் அதிகமாக ஒரு சிட்டிகை அளவுக்காவது கூடுதலாக உணவில் உப்பு சேர்த்துக் கொள்வது அவசியம். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த ஆலோசனையை தவிர்த்துவிடுங்கள்.பொதுவாக வெயில் காலத்தில், நமக்கு பசியுணர்வு குறைந்துவிடும். அதற்காக சாப்பிடாமல் இருந்துவிட்டால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். புதினாவும், எலுமிச்சையும் இயற்கை கோடைக்காகவே நமக்கு அளித்திருக்கும் வரம். புதினா மற்றும் எலுமிச்சை சாற்றோடு கொஞ்சம் இஞ்சி சேர்த்து அப்படியே அருந்தலாம். இது வயிற்று மந்தத்தை போக்கும்.

எளிதாக ஜீரணமாகக்கூடிய உணவு வகைகளை கோடை காலத்தில் எடுத்துக் கொள்வது நல்லது. நம் ஜீரண உறுப்புகளுக்கு ஓவர்டைம் வேலை கொடுக்கக் கூடாது. மசாலா மற்றும் காரமான உணவைத் தவிர்த்தாலே பெரும் பிரச்னைகள் நீங்கிவிடும். எண்ணெயில் பொரிக்கப்படும் உணவு வகைகள், பிரியாணி, ஃபாஸ்ட்ஃபுட் மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவு வகைகளை முற்றிலுமாகவே தவிர்க்கலாம். இவைதான் அஜீரணத்துக்கு அச்சாணியே. வெயில் காலத்தில் நம்முடைய குடல் மிகவும் மிருதுவானதாக தன்மையை மாற்றிக் கொள்ளும். கடினமான உணவு வகைகள் அதை பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

உருளைக்கிழங்கு மற்றும் வாழைக்காயை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். உணவில் கூட்டு மற்றும் பொரியல் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். எந்த உணவு சமைத்தாலும் அதில் தேங்காயின் பங்கு கணிசமாக இருப்பதை போல பார்த்துக் கொள்ளுங்கள். அசைவ உணவுப் பிரியராக இருந்தால் வெயில் தணியும் வரை நாக்கை கட்டுப்படுத்துங்கள். மட்டன் மற்றும் சிக்கனை தவிர்ப்பது நல்லது. மழை வரும் வரை மீன் சாப்பிட்டு அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

குழந்தைகளைதான் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். வெளியே செல்வதாக இருந்தால் மாலை நேரம் பிளான் செய்யுங்கள். விடுமுறை என்பதால் குட்டீஸின் சுட்டித்தனம் அளவுக்கு அதிகமாக இருந்தால், காலை வேளையில் அவர்களை வெயிலில் விளையாடவோ அல்லது வெளியே செல்லவோ அனுமதிக்காதீர்கள். மாலை வேளைகளில் அருகிலிருக்கும் பூங்காக்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். குழந்தைகள் அவ்வப்போது தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறார்களா என்று கண்காணியுங்கள். அல்லது நீங்களே அவர்களுக்கு தண்ணீர் குடிக்கச் சொல்லி வற்புறுத்துங்கள். கோடையில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள்தான்.

அவர்களுக்கு பழச்சாறு கொடுக்கும் போது ஒரு ஸ்பூன் கூடுதலாக சர்க்கரை சேர்த்துக் கொடுங்கள். விளையாடி விட்டு டயர்டாக வரும் குழந்தை உடனே ஃபிரிட்ஜில் இருந்து ஜில்லென்று தண்ணீர் குடிக்க விரும்பும். அதை அனுமதிக்காதீர்கள். ஃபிரிட்ஜ் வாட்டருக்கு பதிலாக மண்பானை தண்ணீரை குடிக்கக் கொடுங்கள். குடிக்க குளிர்ச்சியாக இருக்கும். அதே சமயம் உடலுக்கும் தீங்கு விளைவிக்காது. பாட்டில் குளிர்பானங்களை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள்.

கோடையில் காலை, மாலை என்று இரு வேளை குளிப்பது நம்முடைய சருமம் வறண்டுப் போகாமல் இருக்கச் செய்யும். குழந்தைகளுக்கும் இருவேளை குளியலை பழக்கப்படுத்துங்கள். அதே சமயம் அவர்கள் மாலை விளையாடி விட்டு வந்தால் கைகால்களை சுத்தமாக கழுவ செய்யுங்கள். தேவைப்பட்டால் குளிக்கவும் செய்யலாம். மாலை குளியல் இரவில் நிம்மதியான உறக்கத்துக்கு வகை செய்யும்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு வெயில் காலம் வரப்பிரசாதம். திட உணவுகளை குறைத்துக் கொண்டு, திரவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டு முறையான உடற்பயிற்சி மேற்கொண்டால் மற்ற காலத்தைவிட கோடை காலத்தில் கணிசமாக எடை குறையும்’’ என்று ஆலோசனை வழங்கினார் அம்பிகா சேகர்.

தொகுப்பு: ரிதி

 

Tags : Kumkum ,
× RELATED சக்கர நாற்காலியின் சரித்திர நாயகி