×

பரளிக்காடு சூழல் சுற்றுலாவில் குவிந்த சுற்றுலா பயணிகள்: பழங்குடியினரின் பாரம்பரிய நடனமாடி உற்சாகம்

காரமடை: காரமடை அடுத்த பரளிக்காடு பகுதியில் வனத்துறை சார்பில், பழங்குடியின மக்களின் பங்களிப்போடு நடத்தப்படும் சூழல் சுற்றுலாவுக்கு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட பரளிக்காடு பகுதி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பில்லூர் அணைக்கு மிக அருகாமையில் உள்ளது. காரமடை வனத்துறை சார்பில், பரளிக்காடு சூழல் சுற்றுலா பழங்குடியின மக்களின் பங்களிப்போடு நடத்தப்பட்டு வருகிறது. இயற்கை எழில் நிறைந்த பரளிக்காடு கோவை காந்திபுரத்தில் இருந்து 70 கி.மீ. தொலைவிலும், காரமடையில் இருந்து 30 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சனி, ஞாயிற்றுகிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பரளிக்காடு சூழல் சுற்றுலாவிற்கு பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழல் சுற்றுலாவில் பங்கேற்க https://Coimbatorewilderness.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்து கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த சூழல் சுற்றுலாவில் பங்கேற்கும் சுற்றுலா பயணிகளுக்கு பில்லூர் அணையில் பரிசல் பயணம், பழங்குடியின மக்களின் பாரம்பரியமிக்க 10க்கும் மேற்பட்ட உணவு வகைகள், அத்திக்கடவு ஆற்றில் மூலிகை குளியல், வனப்பகுதியில் நடை பயணம், பழங்குடியினர் வாழ்வை பிரதிபலிக்கும் பாரம்பரிய நடனம் என பல்வேறு வகையில் வனத்துறையினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கின்றனர். பரளிக்காடு, பூச்சமரத்தூர், பில்லூர், நீராடி உட்பட பல்வேறு பழங்குடியின கிராமங்களை சேர்ந்த பரிசல் ஓட்டுநர்கள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் என ஏராளமான பழங்குடியினர் சூழல் சுற்றுலாவால் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்த சூழல் சுற்றுலா வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வந்த நிலையில், கோடை விடுமுறையையொட்டி கடந்த மே 1ம் தேதி முதல் வரும் மே 31ம் தேதி வரை தினமும் சூழல் சுற்றுலா நடத்தப்படுகிறது. இதனிடையே கடந்த வாரம் முழுவதும் கனமழை எச்சரிக்கை காரணமாக தற்காலிகமாக ஒரு வாரத்திற்கு சூழல் சுற்றுலா நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், சூழல் சுற்றுலா நேற்று முதல் மீண்டும் துவங்கியது. நேற்று 100க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்., பரிசலில் பயணம் செய்தும், பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனமாடியும், சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர்.

Tags : Karamada ,BILLUR DAM ,KOWAI DISTRICT ,KARAMADA FOREST ,
× RELATED பண்ருட்டியில் இருந்து வேலூர்...