×

அதிமுக சார்பில் 2 பேருக்கு பேச வாய்ப்பளித்த சபாநாயகர் எடப்பாடி-எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு இடையே மோதல்: பேரவையில் சலசலப்பு

சென்னை: அதிமுக சார்பில் 2 பேருக்கு பேச சபாநாயகர் வாய்ப்பளித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி- எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு இடையே நேரடி வாக்குவாதம் ஏற்பட்டதால் அவையில் சலசலப்பு நிலவியது. தமிழக சட்டப் பேரவையில் நேற்று முதல்வர் விஜய் தலைமையிலான அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது: புதிய அரசு அவையின் மரபுகளை கடைபிடிக்க வேண்டும். அரசினர் தீர்மானத்தை முதல்வர் முன்மொழிந்துள்ளார்.

அதை வழிமொழிகிறேன் என்று தான் பேச வேண்டும். ஆனால் மரபுகளை மீறி அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேச அனுமதிக்கப்படுகிறார்கள். (அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், அரசின் தீர்மானத்தை வழிமொழிய வேண்டிய அவசியம் இல்லை. மரபு மீறப்படவில்லை, என கூறினார்.) அதிமுகவை பொறுத்தவரை எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலும் நான் எம்எல்ஏவாக பணியாற்றியுள்ளேன். நாங்கள் எங்கள் கூட்டணி கட்சியுடன் மக்களிடம் சென்று கருத்துக்களை சொல்லி வாக்கு கேட்டோம்.

அதனை நம்பி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட 47 பேரை, எம்எல்ஏக்களாக மக்கள் தேர்ந்தெடுத்து இருக்கின்றனர். அதிமுகவில் முரண்கள், பூசல்கள் எழுவது இயல்புதான். ஆனால் முதல்வர் விஜய், ஒரு தரப்பினரை சந்தித்து ஆதரவு தருவது எந்த வகையில் நியாயம் என எனக்கு தெரியவில்லை. முதல்வர் விஜயின் இந்த செயல்பாடுகள் குதிரை பேரத்திற்கு வழி வகுக்கும். தமிழக வெற்றி கழகத்திற்கு 66 சதவீத மக்கள் வாக்களிக்கவில்லை. வெறும் 34 சதவீதம் மக்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

அதிமுகவில் வெற்றி பெற்ற 47 சட்டமன்ற உறுப்பினர்களும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். ஆனால் ஒரு சிலர் ஆசை வார்த்தைகளை கூறி அமைச்சர்கள், வாரிய தலைவர்கள் பதவி வழங்குகிறோம் என்று தங்கள் கட்சிக்கு இழுப்பதாக தகவல்கள் வெளி வருகிறது. ஆளுங்கட்சியினர் இதற்கு இடமளிக்கக் கூடாது. புதிய முதல்வர் தூய ஆட்சி, நேர்மையான ஆட்சி வழங்க வேண்டும். முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்க்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

இதை தொடர்ந்து, அதிமுகவின் மற்றொரு பிரிவான எஸ்.பி.வேலுமணி பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி அளித்தார். இதற்கு எடப்பாடி அருகில் இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எஸ்.பி.வேலுமணியை பேச அனுமதிக்கக்கூடாது என்று எடப்பாடி அணியின் எம்எல்ஏக்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் எந்த அடிப்படையில் அவரை பேச அனுமதி அளிக்கிறீர்கள். அதிமுக கட்சியை உடைக்க நீங்களே (சபாநாயகர்) ஆதரவு தருகிறீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.

(எஸ்.பி.வேலுமணி பேசுவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி- எஸ்.பி.வேலுமணி தரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததால் பேரவையில் கூச்சல் குழப்பம் நிலவியது). கட்சியின் சார்பில் ஏற்கனவே தலைவர் பேசிவிட்டார், பிறகு எதற்கு மற்றொருவர்?, என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு கோஷமிட்டதால் அவையில் தொடர்ந்து சலசலப்பு நிலவியது. அப்போது சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் குறுக்கிட்டு, ‘‘சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு நடந்த போது பாராட்டி பேசுகையில் அவர்கள் இருந்தனர்.

இன்றைக்கும் அவர் பேச அனுமதி கேட்டார், அவருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. உங்கள் கட்சியின் சார்பில் தேர்தலில் எவ்வளவு இடங்கள் கிடைத்தது, எவ்வளவு வாக்குகள் கிடைத்தது. எத்தனை சதவீதம் கிடைத்தது. எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள், எல்லோரும் ஓரணியில் இருக்கிறோம் என்றெல்லாம் பேசினீர்கள். இப்போது உங்கள் கட்சியின் சார்பில் ஒரு உறுப்பினர் பேச விருப்பம் தெரிவித்த போது அதை அனுமதிக்கும் உரிமை எனக்கு இருக்கிறது. அவரை பேச அனுமதித்திருக்கிறேன்.

அவைத் தலைவர் என்ற முறையில், பேரவையில் நான் எடுக்கின்ற முடிவு தான் இறுதியானது. நான் யாரை வேண்டுமானாலும் பேச அனுமதிக்கலாம்’’ என்றார். இதை தொடர்ந்து எஸ்.பி.வேலுமணியை பேச அனுமதி அளித்தார். ஒருகட்டத்தில் இபிஎஸ் தரப்பிற்கும், வேலுமணி தரப்பிற்கும் இடையே நேரடி வாக்குவாதம் ஏற்பட்டது. இவ்வளவு கூச்சல் குழப்பத்துக்கு நடுவில் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், ‘‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து முதல்வர் கொண்டு வந்துள்ள நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவளிக்கிறது.

ஜெயலலிதா மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தினார். அவர் கொண்டு வந்த திட்டங்களை முதல்வர் செயல்படுத்த வேண்டும். ஜெயலலிதா கொண்டு வந்த 100 யூனிட் இலவச மின்சார திட்டத்தை 200 யூனிட்டாக உயர்த்தி கொண்டு வந்ததற்கு நன்றி. மக்கள் தீர்ப்பளித்து முதல்வராக கொண்டு வந்துள்ளனர். அவருக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். நாங்கள் யாரும் பதவிக்கு ஆசைப்படுகிறவர்கள் கிடையாது. மக்கள் தீர்ப்பை மதித்து ஆதரவளித்துள்ளோம். 30 ஆண்டு காலம் ஆளுங்கட்சியாக அதிமுக இருந்துள்ளது.

திமுகவை எதிர்த்து தான் நாங்கள் அரசியல் செய்துள்ளோம். அந்த அடிப்படையில் முதல்வருக்கு இன்று மக்கள் பெரும்பான்மையாக ஆதரவளித்துள்ளனர். அதை மதித்து அதிமுகவும் ஆதரவளிக்கிறது,’’ என்றார். அப்போது எழுந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘வேண்டும் என்றே திட்டம் போட்டு அதிமுக கட்சியை உடைக்க பார்க்கிறீர்கள்’’ என்றார். பேரவையில் எஸ்.பி.வேலுமணிக்கு பேச சபாநாயகர் அனுமதி வழங்கியதால் எடப்பாடி தரப்புக்கும், எஸ்.பி.வேலுமணி தரப்புக்கும் இடையே நடந்த மோதல் சம்பவம் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

Tags : Edappadi Palaniswami ,S.P. Velumani ,2 AIADMK ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Chief Minister ,Vijay… ,
× RELATED கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவன் பலி: எண்ணூரில் பரிதாபம்