×

தேர்ச்சி வீதம் 3.19 குறைந்தது சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவில் அதிர்ச்சி

சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தில், நாடு முழுவதும் நடத்தப்படும் 19 ஆயிரத்து 967 பள்ளிகளில் பயின்ற 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, கடந்த பிப்ரவரி 17ம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. 17 லட்சத்து 68 ஆயிரத்து 968 மாணவ, மாணவியர் தேர்வில் பங்கேற்ற நிலையில், 15 லட்சத்து 7 ஆயிரத்து 109 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 85.20 சதவீதம். இது கடந்த 2025ம் தேர்வைவிட 3.19 சதவீதம் குறைவு.

2026ம் ஆண்டு நடந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் உள்ள 22 மண்டலங்களில், திருவனந்தபுரம் மண்டலம் வழக்கம் போல் 95.62 சதவீதம் பெற்று முதலிடம் பிடித்தது. சென்னை மண்டலம் 93.84 சதவீதம் பெற்று 2ம் இடம் பிடித்துள்ளது. பெங்களூரு மண்டலம் 93.19 சதவீதம் பெற்று 3 இடம் பிடித்துள்ளது. தேர்வில் மாணவியர் 88.86 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர், மாணவர்கள் 82.13 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் கூடுதலாக 6.73 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.

சிறப்பு தேவையுள்ள மாணவ மாணவியர் 6342 பேர் தேர்வு எழுதிய நிலையில், 5718 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 90.16 சதவீதம். இந்த தேர்வில் 90 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் 94028 பேர். மொத்த தேர்ச்சி வீதம் 5.32 சதவீதம். அதேபோல 95 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் 17 ஆயிரத்து 113 பேர்.

இந்த ஆண்டின் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ மாணவியரில் தேர்ச்சி பெற்றவர்கள் தவிர, மீண்டும் தேர்வு எழுத வேண்டியவர்கள் என 1 லட்சத்து 63 ஆயிரத்து 800 பேர் பட்டியலிடப்பட்டுள்ளனர். இது தவிர, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் 98.55 சதவீதம், ஜெஎன்வி பள்ளிகள் 98.47 சதவீதம், அரசுப் பள்ளிகள் 89.55 சதவீதம், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 86.07 சதவீதம், ஏகல்வியா மாதிரி உறைவிடப் பள்ளிகள் 85.55 சதவீதம், தனியார் பள்ளிகள் 84.22 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளன.

சென்னை மண்டலம்: சென்னை மண்டலத்தில் மொத்தம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 391 பேர் தேர்வு எழுதினர். இதில், 95 ஆயிரத்து 979 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 93.84 சதவீதம். இந்நிலையில், சென்னை மண்டலத்தில் 4394 பேர் மீண்டும் தேர்வு எழுத வேண்டும். மாநில அளவில் தமிழ்நாட்டில் 88 ஆயிரத்து 146 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 83 ஆயிரத்து 962 பேர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 95.25.

விருப்ப பாடமாக இந்தி மொழி எடுத்து படித்தவர்களில் 5 பேர் 100க்கு 100 பெற்றுள்ளனர். வரலாறு 409, அரசியல் அறிவியல் 725, புவியியல் 284, பொருளாதாரம் 435, உளவியல் 2533, கணக்கு 1283, இயற்பியல் 96, வேதியியல் 1061, உயிரியல் 1343, கணக்குப் பதிவியல் 1437, கணினி அறிவியல் 994, தமிழ் 52, அடிப்படைக் கணிதம் 172, ஆங்கிலம் 2401, சமஸ்கிருதம் 119 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதித்துள்ளனர்.

Tags : CBSE ,Chennai ,Central Board of Secondary Education ,
× RELATED கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவன் பலி: எண்ணூரில் பரிதாபம்