×

போதைப்பொருள் ஒழிப்புக்கு முன்னுரிமை அளித்தவர் தமிழக உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கர்க் நியமனம்: உள்துறை செயலாளர் மணிவாசன் உத்தரவு

 

சென்னை: தமிழக உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கர்க் நியமனம் செய்து உள்துறை செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அரசு நிர்வாக மற்றும் காவல்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் திமுக ஆட்சியின் போது தமிழ்நாடு காவல்துறை உளவுத்துறை ஐஜியாக கே.ஏ.செந்தில்வேலன் பணியாற்றி வந்தார். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நேரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி உளவுத்துறை ஐஜியாக இருந்த கே.ஏ.ெசந்தில்வேலன் மாற்றப்பட்டு அதற்கு பதில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி உளவுத்துறை ஐஜியாக அவினாஷ்குமார் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், தமிழ்நாடு காவல்துறையில் உளவுத்துறை ஐஜியாக இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி பணியாற்றி வந்த அவினாஷ் குமார் அதிரடியாக மாற்றப்பட்டு, வடக்கு மண்டல ஐஜியாக பணியாற்றி வந்த அஸ்ரா கர்க் தமிழ்நாடு காவல்துறையின் புதிய உளவுத்துறை ஐஜியாக உள்துறை செயலாளர் மணிவாசன் நியமித்து உத்தரவிட்டுள்ளார். புதிய உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ள அஸ்ரா கர்க், வடக்கு மண்டலத்தில் போதைப்பொருள் ஒழிப்பு, கள்ளச்சாராயம் ஒழிப்பு, ரவுடிகளை கட்டுப்படுத்தியதில் பெரும் பங்காற்றியுள்ளார். மேலும், காவல்துறை அதிகாரிகளில் நேர்மையான அதிகாரியாகவும், அனைத்து கட்சி தலைவர்களாலும் ஐஜி அஸ்ரா கர்க்கை பாராட்டுதலையும் பெற்றவர்.

தமிழக கேடரில் கடந்த 2004ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக அஸ்ரா கர்க் தேர்வானார். ஏஎஸ்பியாக வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தனது முதல் பணியை அவர் 2004ம் ஆண்டு தொடங்கினார். 2008ம் ஆண்டு திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களில் எஸ்பியாக சிறப்பாக பணியாற்றினர். அஸ்ரா கர்க் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியில் கடந்த 1980ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி பிறந்தார். பள்ளி படிப்பு முடித்து தாப்பர் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பட்டம் பெற்றவர். அஸ்ரா கர்க்குக்கு பஞ்சாபி, ஆங்கிலம், தமிழ் மொழிகள் சரளமாக எழுத, படிக்க தெரியும்.
2015ம் ஆண்டு காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம், 2023ம் ஆண்டு தமிழக முதலமைச்சரின் பொது சேவை சிறப்புக்கான காவலர் பதக்கம், 2023ம் ஆண்டு போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் சட்டவிரோத போதை பொருள் கடத்தலை எதிர்த்து சிறப்பாக பணியாற்றியதற்காக தமிழக முதலமைச்சரின் சிறப்பு பதக்கம் பெற்றுள்ளார்.

 

Tags : Asra Garg ,Tamil Nadu Intelligence IG ,Home Secretary ,Manivasan ,Chennai ,Tamil Nadu ,DMK… ,
× RELATED கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவன் பலி: எண்ணூரில் பரிதாபம்