×

குதிரை பேரம் செய்து எங்கள் கட்சியினரை வளைத்துள்ளீர்கள் நான்காம் தர அரசியல்வாதி போல செயல்படும் நீங்களா தூய சக்தி? முதல்வர் விஜய் மீது கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி வெளியிட்ட அறிக்கை: இரட்டை இலை சின்னத்தால் வெற்றி பெற்றவர்களில் சிலர், தலைமை நிலைப்பாட்டிற்கு எதிராக, ஆளுங்கட்சி தரப்பில் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி, ஆளுங்கட்சி நடத்தும் பொம்மலாட்டத்திற்கு இரையாகி, பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுள்ளனர்.

அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுத்து, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இட்ட தங்களின் சொந்த கையெழுத்தை மறுக்கும் அளவிற்கு பதவி ஆசை முற்றிவிட்டதா? விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முதலமைச்சராக்கி, இவர்கள் எல்லாம் அமைச்சர்கள் ஆக திமுக ஒப்புக்கொண்டதாகவும், அதற்கு இவர்களும் ஒப்புக்கொண்டார்களாம். இல்லை எனக்குப் புரியவில்லை. இப்போ அது மட்டும் திமுக ஆதரவு கூட்டணி எல்லாம் இல்லையா?.

இவர்கள் இப்படி என்றால், இவர்களை ஆசை வார்த்தை கூறி மயக்கி இருக்கும் முதலமைச்சரைப் பார்த்து கேட்கிறேன், நீங்கள் செய்வது மாற்று அரசியலா? மனசாட்சியை அடகுவைத்துவிட்டு செய்யும் அரசியலா? எங்கள் கழகத்தினர், அதாவது இன்று உங்களுக்கு துதிபாடும் அந்த சிலர் எதிர்த்தும், நியாயத்தின் பக்கம் நின்று, கரூர் துயரச் சம்பவத்தின் போது சட்டமன்றம் வரை பேசியவர். உங்கள் மனசாட்சிக்கு இந்த உண்மை தெரியும் என நம்புகிறேன்.

ஆனால் ஆட்சிக்கு வந்த அடுத்த நொடி நீங்கள் செய்தது என்ன? எங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சித்து, எங்கள் கூட்டணி சட்டமன்ற உறுப்பினரை குதிரை பேரம் செய்து ஈர்த்து, அமைச்சர் மோகம் காட்டி எங்கள் கட்சியினர் மீது மாய வலை வீச முயற்சிக்கிறீர்கள். பொதுச் செயலாளரை அவதூறாகப் பேசுகின்ற சட்டமன்ற உறுப்பினர் இல்லத்திற்கு முதல்வர் செல்வது எந்தவிதத்தில் நியாயம்?.

உங்கள் கட்சிக்காரராக இருக்கும் பேரவைத் தலைவர், உங்களின் இந்த நடவடிக்கை கண்டு இன்புளூயன்ஸ் ஆகமாட்டாரா? இதெல்லாம் தெரிந்து தான் நீங்கள் இதைச் செய்கிறீர்கள். இப்போது சொல்லுங்கள், நான்காம் தர அரசியல் வாதி போல செயல்படும் நீங்களா தூய சக்தி? தங்களின் இத்தகைய செயல்களை பொதுமக்கள் விரைவில் தெரிந்து கொள்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags : K.P. Munusamy ,Chief Minister ,Vijay ,Chennai ,AIADMK ,Deputy General Secretary ,Minister ,
× RELATED கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவன் பலி: எண்ணூரில் பரிதாபம்