×

பொதுச்செயலாளரின் அதிகாரம் பறிக்கப்பட்டு விட்டது எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடிக்கு இல்லை: சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி கூட்டாக பேட்டி

சென்னை: பொதுச்செயலாளரின் அதிகாரம் பறிக்கப்பட்டு விட்டதால், எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடிக்கு இல்லை, என்று சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி மற்றும் கட்சியில் இருந்து நீக்கியவர்கள் கூறினர். அதிமுகவில் 26 மாவட்ட செயலாளர்களின் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்த நிலையில், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அனைவரும் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்ற பிறகு தொடர் தோல்வி தான்.

அனைத்து தலைவர்கள் வீட்டிற்கும் நேரிலே சென்று பார்த்து கூட்டணி அமைத்து வெற்றி பெற்றவர் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஆனால் இன்று அப்படி இல்லை வீடு தேடி வந்தவர்களை அரை சதவீதம் ஓட்டு, ஒன்றரை சதவீதம் ஓட்டுகள் தேவையில்லை என்று கூறிவிட்டு 210 தொகுதிகளில் நான் வெற்றி பெறுவேன் என்று ஒரு ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு கூறினார். கடைசி நேரத்தில் தவெகவினர் கூட கூட்டணி வைக்க வேண்டும் என்று கூறினார்கள், நாங்களும் சென்று கூட்டணி வைத்தால் மிகப்பெரிய வெற்றி பெறலாம் என்று கூறினோம், அப்போது எங்களை எதிர்த்து பேசிவிட்டு 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம், நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

சர்வே எடுத்தாக கூறினார், அது என்ன சர்வே என்று தெரியவில்லை. சர்வே எடுத்து தன்னுடைய பாக்கெட்டிலேயே வைத்துக் கொண்டார். 2024ல் பல தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளோம், மூன்றாவது இடத்திற்கு சென்றோம். பாஜவோடு கூட்டணி இல்லை என்று கூறிவிட்டு டெல்லிக்கு சென்று யாரிடம் கேட்காமல் பாஜவோடு கூட்டணியை உறுதி செய்தார்.

தேமுதிகவை கூட்டணியில் இணையுங்கள் என்று கூறினோம், தலைவர்களுக்கு வாக்கு முக்கியம், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியின் போது கொடுத்த வாக்குறுதியான நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அவர்களுக்கு இப்போது கொடுங்கள் என்று கூறினோம், அவர் கொடுக்கவில்லை. அதன்பிறகும் கூட்டணியில் சேர முயற்சி செய்தார்கள், ஆனால் உதாசீனப்படுத்தினார்.

அதிமுகவின் தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம், என்ன நோக்கம், காரணத்திற்காக பாஜவுடன் கூட்டணி வைத்தார் என்று தெரியவில்லை. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி 4 ஆண்டுகள் செய்தது நிர்வாகிகளை நீக்கியது மட்டும் தான், எங்களை நீக்கியது செல்லாது. எடப்பாடி சுயமாக பொதுச்செயலாளராகவில்லை, தொண்டர்களாகிய நாங்கள் தான். பொதுச்செயலாளரின் அதிகாரம் பறிக்கப்பட்டு விட்டது. எங்களை நீக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : General Secretary ,Edappadi ,C.V. Shanmugam ,S.P. Velumani ,Chennai ,General ,Edappadi Palaniswami ,AIADMK ,
× RELATED கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவன் பலி: எண்ணூரில் பரிதாபம்