சென்னை: சென்னை நகரில் கிண்டி ரயில் நிலையத்துக்கு அருகே 118 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய சூழலியல் பூங்கா அமைக்கும் பணிகள் பல மாதங்களுக்கு முன் தொடங்கியும் இதுவரை முடியாமல் மந்தகதியில் நடைபெற்று வருகிறது.
சென்னையின் பல்வேறு அடையாளங்களில் ஒன்றாக, கிண்டியிலுள்ள ரேஸ் கிளப் மைதானம் கருதப்படுகிறது. சுமார் 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மைதானம், ஆங்கிலேயர் காலத்தில் குதிரை பந்தயம் விடுவதற்காக 1945ல் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. இந்நிலையில் 1970 முதல் 2014 வரையுள்ள வாடகை பாக்கியான சுமார் ரூ.730 கோடியே 86 லட்சத்தை கட்ட தவறியதால் தமிழக அரசு, இதற்கான குத்தகையை ரத்து செய்து நிலத்தை கையகப்படுத்தி, மைதானத்திற்கு சீல் வைத்தது.
இந்நிலையில், வேளச்சேரி ஏரி ஆக்கிரமிப்பு மற்றும் சீரழிவு தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் விசாரணையில், அருகிலுள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தை சரியான முறையில் பயன்படுத்தி கொண்டால் என்ன, என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கான நடவடிக்கைகளில் இறங்குமாறு மாநகராட்சிக்கு அறிவுறுத்தினர். இது மட்டுமன்றி சமூக ஆர்வலர்களும் இந்த 160 ஏக்கர் நிலத்தில் நீர்நிலைகளை ஏற்படுத்த வேண்டும், அதன் மூலம் பருவமழை காலங்களில் ஏற்படும் பேரிடர்களில் இருந்து தப்பிக்க சிறந்த ஒரு தீர்வாக இருக்கும் என கூறி வந்தனர்.
அனைத்தையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு ஏற்கனவே இங்கு 3 குளங்களை அமைத்து இருந்தது. அதனை தொடர்ந்து 2 குளங்களை ஆழம் மற்றும் அகலப்படுத்தவும், தொடர்ந்து புதிதாக 4 குளங்களை அமைக்கும் பணியிலும் தமிழக அரசு இறங்கியது. இதற்கான பணிகள் 100% முடிந்துள்ளது. அதாவது, 4.77 மில்லியன் கனலிட்டர் மழைநீரை தேக்கக்கூடிய வகையில் 27,647 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய குளங்கள் இங்கே உருவாக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து பெரிய அளவில் மழை பெய்தாலும் அதனைத் தாங்கும் அளவுக்கான சக்தி கொண்ட பெரிய குளங்கள் தோண்டப்பட்டு, 49,772 சதுர மீட்டர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. 8.66 மில்லியன் கன லிட்டர் மழைநீரை தேக்கி வைப்பதற்கான குளங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதன்மூலம் தென்சென்னை குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் புகாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த குளங்கள் மூலம் அதிக அளவு மழைநீரை சேமிக்க முடியும். இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தொடர்ந்து தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். மேலும், வெள்ளநீர் குடியிருப்புகளுக்குள் பாயாமல் இங்கேயே தேக்கி வைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்பகுதியை சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற கடந்த திமுக அரசு முடிவு செய்தது. பூங்காவில் மக்கள் பயன்பாட்டிற்கான பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இங்கு சுமார் இரண்டரை கிலோ மீட்டருக்கும் மேலான நீண்ட நடைபாதைகள் அமைக்கப்படும். மரங்கள் நிறைந்த இந்த பாதைகளில் நடைபயிற்சி மேற்கொள்ள பார்வையாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். பார்வையாளர்கள் மேலே சென்று பூங்காவின் அழகை ரசிக்க ‘ரேம்’ போன்ற அமைப்புகளும், பார்வையாளர் மாடங்களும் கட்டப்பட உள்ளன. முதற்கட்டப் பணிகளின் ஒரு பகுதியாக, தோட்டக்கலைத்துறை சார்பில் செடி நாற்றுகள் விற்பனை மையம் தொடங்கப்பட்டது.
இங்கு ரூ.15 முதல் ரூ. 1,500 வரை மதிப்புள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வகையான செடிகள் விற்கப்படுகின்றன. அதாவது இங்கு அடர்த்தியான மலர்கள் பூக்கும் மலர் செடிகள், உயரமாக வளரும் மரக்கன்றுகள், மருத்துவ குணம் கொண்ட செடிகள், குரோட்டன் போன்ற அலங்கார செடிகள் விற்கவும், அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், பல மாதங்களுக்கு முன் தொடங்கியும் இதுவரை இந்த பணிகள் முடியாமல் உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் வெப்பத்திற்கு ஊடாக பசுமைப் பரப்பை விரிவுபடுத்தும் முக்கிய முயற்சியாக கிண்டியில் புதிய சூழலியல் பூங்கா உருவாகி வருகிறது. பொதுமக்களுக்கு இயற்கை சார்ந்த ஓய்வு இடமாகவும், நகரின் காற்றுத் தரத்தை மேம்படுத்தும் திட்டமாகவும் உருவாகும் இந்தப் பூங்காவின் முதற்கட்டப் பணிகளை வரும் அக்டோபருக்குள் நிறைவடையும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பூங்கா மற்றும் குழந்தைகள் பூங்கா அமைந்துள்ள கிண்டி பகுதி, இந்தத் திட்டத்தின் மூலம் மேலும் விரிவான பசுமை வளாகமாக மாறவுள்ளது. மழைநீர் சேமிப்பை ஊக்குவிப்பது மற்றும் பல்லுயிர் வளத்தை பாதுகாப்பது போன்ற நோக்கங்களுடன் பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் காரணமாக இதற்கான பணிகள் தேக்கமடைந்தது. விரைவில் பணிகள் முடிக்கப்படும் ,’’ என்றனர்.
மிதிவண்டி வழித்தடம்
முதற்கட்ட பணிகளில் நடைப்பயிற்சி பாதைகள், மிதிவண்டி வழித்தடங்கள், திறந்தவெளி ஓய்வு பகுதிகள் மற்றும் நீர்நிலை புனரமைப்பு பணிகள் இடம்பெறுகின்றன. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் உள்நாட்டு மரங்கள் மற்றும் அரிய தாவர இனங்களும் இங்கு வளர்க்கப்படவுள்ளன. பறவைகள் மற்றும் சிறிய வன உயிரினங்களுக்கு ஏற்ற சூழலும் உருவாக்கப்படுகிறது.
பார்வையாளர் கோபுரம்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்வி மற்றும் விளக்க மையங்களும் அமைக்கப்படுகின்றன. காலநிலை மாற்றம், உயிரியல் பாதுகாப்பு மற்றும் கழிவு மேலாண்மை தொடர்பான தகவல்களை வழங்கும் வசதிகள் இதில் இடம்பெறும். சூரிய மின்சார விளக்குகள், மறுசுழற்சி அமைப்புகள் மற்றும் பறவைகளை பார்வையிடுவதற்கான கோபுரங்களும் உருவாக்கப்படுகின்றன.
என்னென்ன வசதிகள்?
இந்த சூழலியல் பூங்காவில் பயணிகளுக்காக வாகன நிறுத்துமிடம், குடிநீர், நவீன கழிப்பறைகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன. பழமையான மரங்கள் பாதிக்கப்படாமல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முழுமையாக செயல்பாட்டிற்கு வந்தபின், கிண்டி சூழலியல் பூங்கா சென்னையின் முக்கிய பசுமை அடையாளங்களில் ஒன்றாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
