×

என் வாடிக்கையாளர்கள் அனைவருமே தேவதைகள்தான்!

நன்றி குங்குமம் தோழி

‘‘மாடர்ன் உடைகள் பல டிசைன்களில் வந்தாலும் புடவைக்கு என்றுமே தனிப்பட்ட பிரியம் பெண்கள் மத்தியில் உள்ளது. எனக்கும் அப்படித்தான். 15 வயதில் புடவை மேல் ஏற்பட்ட காதல்தான் இன்று பட்டுப்புடவைகளுக்காகவே பிரத்யேக கடையினை துவங்க காரணம்’’ என்கிறார் ஸ்வர்ணமுகி ரகுபதி. ஆன்லைனில் பட்டுப்புடவைகளை விற்பனை செய்து வந்தவர் தற்போது சென்னை அவ்வை ஷண்முகம் சாலையில் ‘பிரேமம் சில்க்ஸ்’ என்ற பெயரில் கடையினை திறந்துள்ளார்.

‘‘நான் அடிப்படையில் ஒரு பிசினஸ் வுமன். எனர்ஜி செக்டர், புட் பிராசெசிங், ரியல் எஸ்டேட் போன்ற பிசினஸ்களை கடந்த 20 வருடமாக செய்து வருகிறேன். பிரேமம் சில்க்ஸ் முதலில் ஆன்லைனில்தான் அறிமுகம் செய்தேன். முழுக்க முழுக்க பட்டுப்புடவைகளை மட்டுமே விற்பனை செய்து வந்தேன். இப்போது அதற்கான தனிப்பட்ட ஷோரூம் ஒன்றை அமைத்திருக்கிறேன். எனக்கு புடவை உடுத்த பிடிக்கும் என்றாலும், அதன் மேல் காதல் ஏற்பட என் அப்பாதான் காரணம்.

பொதுவாக அப்பாக்களுக்கு தன்னுடைய பெண் என்றுமே தேவதைதான். நான் புடவை கட்டி வரும் போது எல்லாம் என் அப்பா சொல்வது ஒன்றுதான். புடவை உனக்கு ரொம்ப அழகா இருக்கு என்பது. அப்பா அப்படிச் சொல்லும் போது ரொம்பவே சந்தோஷமா இருக்கும். அதே சந்தோஷத்தினை பெண்கள் அனைவருமே அவர்களின் பருவக் காலத்தில் அனுபவித்து இருப்பார்கள். அந்த உணர்வினை என்னுடைய வாடிக்கையாளர்களான என் தேவதைகளுக்கு கொடுக்க விரும்பினேன்.

நான் புடவை கட்ட ஆரம்பித்த நாள் முதல் ஒவ்வொரு புடவையும் பார்த்து பார்த்து தேர்வு செய்வேன். பொதுவாக ஒருவர் புடவையின் நிறம், டிசைன், துணியின் தரம் பார்த்து தான் தேர்வு செய்வாங்க. நான் அது மட்டுமில்லாமல், இந்தப் புடவையை உடுத்தும் போது என்னுடைய ஆளுமையினை வெளிப்படுத்துகிறதா என்று பார்ப்பேன். இப்படித்தான் என்னுடைய புடவையின் தேர்வுகள் இருக்கும்’’ என்றவர், முழுக்க முழுக்க நெசவாளர்களின் கைகளால் நெசவு செய்யப்படும் புடவைகளைதான் தன்னுடைய கடையில் விற்பனைக்காக வைத்துள்ளார்.

‘‘நான் புடவை கட்ட ஆரம்பித்த பிறகு எனக்கான சில புடவைகளை நானே டிசைன் செய்து அதை நெய்து தர சொல்லி இருக்கிறேன். அதன் மூலம் எனக்கு நெசவாளர்களுடன் ஒரு தனிப்பட்ட உறவு காலம் காலமாக இருந்து வந்தது. அந்த பந்தம்தான் இன்று என்னுடைய தொழிலிலும் தொடர்கிறது. மேலும், ஒரு காலத்திற்கு பிறகு நெசவாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. பலர் அந்தத் தொழிலை விட்டுவிட்டார்கள். போதிய வருமானம் இல்லை என்பதால், அடுத்த தலைமுறையினரும் இந்தத் தொழிலை தொடர விரும்புவதில்லை. இது நம்முடைய பாரம்பரியம். அதை மீட்டெடுக்க விரும்பினேன். புடவை கட்ட மட்டுமே பிடித்திருந்தால் போதாது.

புடவை கட்டுவதை ஊக்குவித்தால்தான் நெசவுத் தொழிலையும் ஊக்குவிக்க முடியும். இதை நாம செய்யாமல் வேறு யாரால் செய்ய முடியும்னு நினைச்சேன். என்னுடைய ஆசை ஒவ்வொரு பெண்ணும் புடவையை அணியும் போது அவர்கள் பார்க்க தேவதைப் போல் இருக்க வேண்டும். அதை நினைவில் கொண்டு தான் புடவை பிசினஸில் நான் கால் பதித்தேன். தென்னிந்தியாவில் பல ரகங்களில் புடவைகள் உள்ளன. அங்கெல்லாம் இல்லாத புடவையினை நான் அறிமுகம் செய்ய விரும்பினேன்.

அதனால்தான் என்னுடைய புடவைகள் எல்லாம் வித்தியாசமாக இருக்கும். அதன் டிசைன் மட்டுமில்லாமல், ப்யூஷன் முறையிலும் நான் புடவைகளை அறிமுகம் செய்ய ஆரம்பித்தேன். ஆர்கான்சா புடவையில் பனாரஸ் பாடரும், பனாரஸ் புடவையில் ஆர்கான்சா பார்டர் என்று புடவையினை வடிவமைத்தேன். அதேபோல் பைத்திரி புடவையில் பாந்தினி டிசைன்கள் ெகாண்டு அமைத்தேன்.

மேலும், இங்கு லைட் வெயிட் புடவைகள் முதல் அதிக ஜரி வேலைப்பாடுகள் கொண்ட புடவைகள் என அனைத்தும் அறிமுகம் செய்திருக்கிறோம். அதில் சில புடவைகளில் வெள்ளி ஜரிகை கொண்டும் நெய்து கொடுக்கிறோம். அதிக வேலைப்பாடு கொண்ட புடவைகளை விசேஷங்களுக்கு கட்டுவது போல் வேலைக்கு செல்லும் பெண்களுக்காக குறைந்த ஜரி வேலைப்பாடு கொண்ட புடவையும் எங்களிடம் உள்ளது. முழுக்க முழுக்க பட்டு நூல் கொண்டு இந்தப் புடவைகளை நெய்து தருகிறோம்’’ என்றவர், புடவையில் உள்ள பட்டு ஜரி நமக்குள் ஒரு பாசிடிவ் எண்ணங்களை ஏற்படுத்தும் என்றார்.

‘‘கோயிலுக்கு செல்லும் போது என் பாட்டி பட்டுப்புடவைதான் அணிந்து செல்வார். இன்று ேகாயிலுக்கு யாரும் அப்படிச் செல்வதில்லை. கோயிலுக்கு பட்டுப்புடவை அவசியமா என்று கேள்வியை நானும் என் பாட்டியிடம் கேட்டிருக்கிறேன். பொதுவாகவே கோயிலுக்கு சென்றால் நமக்கும் ஒரு பாசிடிவ் எனர்ஜி ஏற்படும். அதேபோல்தான் நாம் உடுத்தும் உடையில் உள்ள பட்டும் ஒருவித பாசிடிவ் எனர்ஜியினை கொடுக்கும்னு அவர் சொல்வார். எப்போதும் பளிச்சென்று உடை அணியும் போது நம்முடைய மனதில் சந்தோஷம் மற்றும் தன்னம்பிக்கை ஏற்படும். காரணம், உடை நம் வாழ்க்கையில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

அதனால்தான் ஆள் பாதி ஆடை பாதி என்று கூறுகிறார்கள். அந்த உணர்வினை என் புடவையை அணியும் எல்லா பெண்களுக்கும் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் பட்டு என்றாலே காஞ்சிபுரம் மற்றும் ஆரணி. என்னுடைய புடவையும் அங்குள்ள நெசவாளர்களிடம் பிரத்யேகமாக டிசைன் செய்து வாங்குகிறேன். மேலும், பனாரஸ், வாரணாசி பகுதியில் இருந்தும் புடவைகள் நெய்யப்பட்டு வருகிறது.

அதில் காஞ்சிபுரத்தில் வன சிங்காரம் மிகவும் ஃபேமஸ். வனம் என்றால் காடு என்று அர்த்தம். சிங்காரம் என்றால் அழகு. காட்டின் அழகினை பச்சை நிற புடவையில் பிரதிபலித்திருக்கிறேன். குதிரை கம்பீரத்தின் எடுத்துக்காட்டு என்பதால், இதில் குதிரை கொண்டு டிசைன செய்திருக்கிறேன். மேலும், ருத்ராட்சம் மற்றும் வைர ஊசி டிசைனும் இதில் உள்ளது. இதுபோல் மேலும் சில பிரத்யேகமான புடவைகளை அறிமுகம் செய்ய இருக்கிறோம். ஒவ்ெவாரு பெண்ணும் புடவை வாங்கும் போது அவர்கள் முகத்தில் வெளிப்படும் சந்தோஷம்தான் எங்களின் சக்சஸ் என்று நினைக்கிறேன்’’ என்றவர், பனாரஸ், காஞ்சிபுரம், ஆர்கென்சா, பைத்தானி போன்ற புடவைகளை தன்னுடைய கடையில் பிரதானமாக விற்பனை செய்து வருகிறார்.

‘‘புடவை டிசைன் என்பது பெரிய கடல். ஒவ்ெவாரு ஊருக்கு ஏற்ப தனிப்பட்ட டிசைன்கள் உள்ளன. அதை நான் தேர்வு செய்து என்னுடைய புடவையில் பிரதிபலிக்கிறேன். காஞ்சிபுரம், பனாரஸ், வாரணாசி போன்ற இடங்களில் உள்ள நெசவாளர்களிடம் நேரடியாக புடவையினை வடிவமைத்து வாங்கி வருவதால், ஒவ்வொரு புடவையும் தனிப்பட்ட டிசைனில் இருக்கும். மேலும், காலத்திற்கு ஏற்ப புதுப்புது டிசைன்களையும் கொண்டு வரும் எண்ணத்தில் இருக்கிறோம்.

‘பிரேமம்’ என்றால் ‘காதல்’ என்று அர்த்தம். புடவையின் மேல் பெண்களுக்கு எப்போதும் ஒரு அழகான காதல் இருக்கும். அதனால்தான் எங்க கடைக்கு பிரேமம் என்று பெயர் வைத்தேன். அடுத்து புதிய டிசைன்களை அறிமுகம் செய்ய வேண்டும். மேலும், என்னுடைய புடவைகளை பல இடங்களில் கொண்டு செல்ல வேண்டும். கோவை மற்றும் ஐதராபாத்திற்கு என் புடவைகளை கொண்டு செல்ல இருக்கிறேன்’’ என்றார் ஸ்வர்ணமுகி ரகுபதி.

தொகுப்பு: ரிதி

Tags : Kumkum ,
× RELATED சமூக விழிப்புணர்வும், அரசுப் பணியும் இரு கண்கள்!